மரம்
****************************************
நள்ளிரவில் அறுத்தோம்
நித்திரை பிரியாமல்
பெரும் சப்தத்தோடு அது
சரிந்து விழுந்தது மற்றொரு உறக்கத்தில்
காலையில் கண்விழித்த
இலைகளெல்லாம் கண்டன
ஒரு கனவு போல
காணாமல் போன மரத்தை.
****************************************
கடல்
சிலிர்க்கச் சிலிர்க்க அலைகளை மறித்து
முத்தம் தரும் போதெல்லாம்
துடிக்கத் துடிக்க ஒரு மீனைப் பிடித்து
அப்பறவைக்குத் தருகிறது
இக்கடல்.
வானம்
இச்சன்னல் வழியே தெரிவது
வானத்தின் ஒரு பகுதிதான்
என்றான்.
முழுவானமும் தெரியும் வசமாய்
ஒரு ஜன்னல் செய்ய முடியுமா?
வானத்தைத் தோற்றவன்
பறவையொன்றிடம் நான் இன்று
பந்தயம் கட்டி தோற்ற வானத்துக்கு
வரவில்லை நிலவு.
நூல் பிறையளவு கொடையுமில்லை.
எட்டிக் கூடப் பார்க்கவில்லை
யாதொரு நட்சத்திரமும்.
இப்படிப் பாழடைந்த வானம்
பார்த்ததேயில்லை இதற்கு முன்.
அவமானம் மிகுந்த இரவு
இதுவே கடைசியாக இருக்கட்டும்.
சூதாடக்கூடாது இனி
வானத்தை பூமியில் வைத்து.
பெண் யார்?
பெண்ணைக் கண்டு
பேரிரைச்சலிடுகிறாயே மனமே…
பெண் யார்?
பெற்றுக்கொண்டால் மகள்.
பெறாத வரையில்
பிரகாசமான இருள்.
வேறொன்றுமில்லை.
பார்வை
ஆளற்ற கூடம்.
அங்கே அந்த மர நாற்காலி அமர்ந்திருந்தது.
அதன் மேல்
வயலினை சாய்த்து வைத்துவிட்டு
வெளியேறியிருக்கிறான் இசைத் தொழிலாளி.
‘என்னிலும் நாலு தந்திகள் முறுக்கி
செல்லமாக தோளில் ஏந்தி வைத்து
ரம்பத்தால் வருடினால் என்ன’
என்பதுபோல் யாரையோ
பார்க்கிறது மர நாற்காலி.
எதிரே திறந்திருக்கிறது
இசைக் குறிப்பு புத்தகம்.
உதவி
கண்ணைக் கசக்கி அழுதபடி
கரையில் நடந்து வரும்
பேசப்பழகாத குழந்தையை எதிர்கொண்டு
‘அம்மா’ எங்கே என்று
அன்பொழுக வினவுகிறார்கள்.
அது தன் இடது கையை
ஆற்றின் மேல் நீட்டுகிறது.
அந்தக் குழந்தையை தூக்கி
ஓடும் நீரில் வீசிவிட்டு போகிறார்கள்
இடது கை செய்தது
வலது கை அறியாது.
மன்னிக்கக்கூடாதா?
கணங்கள்தோறும்
என்னை நானே
தண்டித்துக்கொண்டிருக்கும்
போது…
ஏன்
நீயேனும் கொஞ்சம்
என்னை மன்னிக்கக்கூடாது!
போதும்
ஒரு துண்டு பூமி
இரண்டு துண்டு வானம்
சிறு கீற்று நிலவு
சில துளிகள் சூரியன்
ஒரு பிடி நட்சத்திரம்
கால்படிக் கடல்
ஒரு கிண்ணம் பகல்
ஒரு கிண்ணிப்பெட்டி இருள்
மரக்கூந்தல் காற்று
நூலளவு பசும் ஓடை
குடையளவு மேகம்
ஒரு கொத்து மழை
குட்டியாய் ஒரு சாத்தான்
குழந்தை மாதிரி கடவுள்
உடல் நிறைய உயிர்
மனம் புதிய காதல்
குருதி நனைய உள்ளொளி
இறவாத முத்தம்
என் உலகளவு எனக்கன்பு…