மீன், இறாலை நீங்கள் இனி சாப்பிட முடியாது – பருவநிலை மாற்றம்
உங்களது குழந்தைகள் மீன்களை சாப்பிட வேண்டுமெனில் மிகப்பெரிய தொகையினை செலவு செய்திட நீங்கள் தயாராக இருக்க வேண்டும், ஏனென்றால் அவை அழித்துக்கொண்டு இருக்கின்றன
இன்று பெரும்பாலானவர்களின் உணவு பட்டியலில் கடல்சார் உணவுகளான மீன், இறால் போன்றவைகளுக்கு பிரதானமான இடம் உண்டு. பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் கடல் மீன் பிடி தொழில் இருந்துவருகிறது. தற்போதைய பருவநிலை மாற்றம் தொடர்ந்தால் இன்னும் இருவது ஆண்டுகளில் மீன் மற்றும் இறால் போன்ற கடல் உணவுகளை நீங்கள் சாப்பிட முடியாது அல்லது மிகப்பெரிய தொகையினை நீங்கள் செலவு செய்து சாப்பிடவேண்டி இருக்கும் மற்றும் மீன்பிடி தொழில் முற்றிலுமாக முடிவுக்கு வந்திருக்கும் போன்ற அதிர்ச்சிகரமான முடிவுகளை முன்வைக்கிறார்கள் கடலியல் ஆய்வாளர்கள்.
அதீத தொழிற்சாலைகள் மற்றும் கரியமில வாயு வெளியீடு உள்ளிட்ட காரணங்களினால் பூமியின் வெப்பநிலை உயர்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் ஏற்கனவே பருவநிலை மாற்றங்களை நாம் சந்திக்க துவங்கி விட்டோம். பருவநிலை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் நிலப்பரப்பில் மட்டுமே ஏற்படுவது இல்லை. கடலிலும் அதிகமாகவே ஏற்படுகிறது. மிகப்பெரிய சூழலியல் அமைப்பை கொண்டிருக்கின்ற கடல் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது என்கிறார்கள் கடலியல் ஆய்வாளர்கள். நாம் எதனையும் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிடுமேயானால் மீன் உள்ளிட்ட உயிரினங்கள் அழிவது, அவற்றின் அளவு சுருங்கி நான்கில் ஒரு மடங்காக மாறுவது போன்ற மாற்றங்கள் நடைபெற வாய்ப்பிருக்கிறது.
https://youtu.be/95J3DK4qCfw
ஆய்வுகள் சொல்லும் அதிர்ச்சி முடிவுகள்
Plymouth யூனிவெர்சிட்டியில் விலங்கியல் பேராசியராக பணியாற்றுகின்ற John Spicer 30 ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தினால் கடலில் ஏற்படும் மாற்றம் குறித்து ஆராய்ந்துவருகிறார், அவர் கூறும்போது “50 ஆண்டுகளாகவே கடலில் இருக்கக்கூடிய ஆக்சிஜனின் அளவு 2 முதல் 5 சதவிகிதம் அளவிற்கு குறைந்துவிட்டது, இதனால் அளவில் பெரிய கடல்சார் உயிரினங்களான மீன், திமிங்கலம் , இறால் போன்றவைகளுக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளினால் அவற்றின் உருவம் 4 இல் 1 மடங்காக சுருங்கிப்போகலாம் அல்லது அவை அழிந்தே கூட போகலாம்.
National Academy of Sciences வெளியிட்டுள்ள முடிவுகளின்படி “புவியின் வெப்பநிலை 1 செல்ஸியஸ் கூடும்போது 5% கடல் சூழலியல் ஐ இழந்துபோகிறோம். இப்போது இருக்கக்கூடிய நிலையே தொடருமாயின் 2100 இல் 17% கடல்சார் உயிரினங்கள் அழிந்துபோகும்.
வல்லரசு நாடுகளுக்கான பந்தயத்தில் அனைத்து நாடுகளும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. ஆனால் வல்லரசு ஆன பின்னர் மகிழ்வான வாழ்க்கைக்கு தேவையான இயற்கையை, வளமான பூமியை, அள்ள அள்ள குறையாத கடலை கவனிக்காமல் ஓடிக்கொண்டு இருக்கிறோம். இப்போதே நாம் பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க துவங்கி விட்டோம். இனியும் விழித்துக்கொள்ளவில்லை எனில் பூமி வாழுவதற்கு ஏற்றதாக இருக்காது, மனித இனமும் அழிவினை சந்திக்கும். விழித்துக்கொள்வோம்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!