Site icon பாமரன் கருத்து

இந்தியாவில் முதல் திருநங்கை துணை ஆய்வாளர் ..வரலாறு படைத்த பிரித்திகா யாஷினி …

இந்தியாவில் முதல் திருநங்கையாக காவல்துறையில் துணை ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார் பிரித்திகா யாஷினி.

இயற்கை செய்த தவறினை ஒதுக்கி அனைத்து திருநங்கைகளும் இவரை போன்று கடின உழைப்பையும் முயற்சியையும் தங்களது ஆயுதமாக்கி வாழ்க்கையை கட்டமைக்க வேண்டும் என்கிற நோக்கிலே இந்த பதிவு.

பெண் விடுதலை வேண்டும் 
பெரிய கடவுள் காக்க வேண்டும் 

என்று முழங்கிய பாரதியின் தேசத்தில் பெண்களுக்கே போதிய வாய்ப்புகளும் பாதுகாப்புகளும் கிடைக்காத நிலையில் சேலம் மாநகரை சேர்ந்த பிரித்திகா யாஷினி தனது முழு உழைப்பையும் முயற்சியையும் மட்டுமே கொண்டு திருநங்கைகளை புறக்கணிக்கும் இந்த சமூகத்தில் இன்று வென்று தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராக ஈரோட்டில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இந்த பதவி அவருக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை….

ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர். சான்றிதழ்களில் இருந்த பிரதீப் குமார் என்ற பெயரை பிரித்திகா யாஷினி என்று மாற்றிக் கொண்டவர்.

2011 ஆம் ஆண்டில் சேலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் PCA பட்டபடிப்பினை முடித்தார்.

சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது பிரித்திகா அதற்கு விண்ணப்பித்தார்.

விடுமா இந்த சமூகம், களத்தில் மும்முரமாக இறங்கி திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதனை எதிர்த்த யாசினி  சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது.[1] அந்த தேர்வில் கலந்து பிரித்திகா தேர்ச்சி பெற்றார்.

எழுத்துத்தேர்வைத் தொடர்ந்து நடத்தப்பட்ட உடல் தகுதி தேர்வில் 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து ஒரு நொடி காலதாமதமாக வந்ததாகக் கூறி சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார். தகுதி நீக்கமும் செய்யப்பட்டார். இதை எதிர்த்து பிரித்திகா மீண்டும் நீதிமன்றத்திடம் மனு செய்தார்.

பிரித்திகா யாசினி வழக்கு நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழு உடல் தகுதி பெற்றுள்ளார். அவருக்கு சட்டப்படி எஸ்.ஐ. பணி வழங்க வேண்டும். அவர் பணியில் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும். மேலும், எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர்களும் தேர்வில் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று  உத்தரவிட்டனர்.

வழக்கு விசாரணையில் இந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட 100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.

ஆரம்பம் முதலே திருநங்கை பிரித்திகா யாஷினியை ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, அவரை பணியில் சேர்க்காமல் தமிழக காவல்துறை தவிர்த்து வந்ததது. ஆனால், தனது மனதிடம் காரணமாக, தனக்கு நீதி வேண்டி சென்னை உயர் நீதி மன்றத்தில் முறையிட்டு பணியிக்கு தகுதி பெற்றார் திருநங்கை பிரித்திகா யாசினி.

இனியாவது தமிழக காவல்துறையும் உடன் பணியாற்றும் பணியாளர்களும் அவருக்கு உறுதுணையாகவும் நட்போடும் ஒத்துழைப்பு கொடுத்து அவருக்கு உதவிட வேண்டும்.

திருநங்கைகளின் வாழ்வில் பிரித்திகா ஹாசினி ஒரு வெற்றி தேவதையாக வளம் வந்து உந்து சக்தியாக திகழ்வார் என நம்புவோம் .

நன்றி !
பாமரன்

Share with your friends !
Exit mobile version