Site icon பாமரன் கருத்து

கமலின் 7 அதிரடி திட்டங்கள், வரவேற்பும் சந்தேகங்களும்

பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் கமல்ஹாசன் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றக்கூடிய செயல்திட்டங்களில் 7 திட்டங்களை அறிமுகப்படுத்தினார். எனது பார்வையில் அந்த 7 திட்டங்களும் நல்ல திட்டங்களாகவே தோன்றுகின்றன. குறிப்பாக, செழுமைக்கோடு, பசுமை புரட்சி பிளஸ் ஆகியன அதிக கவனம் ஈர்த்தன. ஊழலுக்கு எதிராக கமல் அதிகம் பேசிவரும் சூழலில் ஊழல், லஞ்சம் ஆகியவற்றை தடுக்க எந்தவித அறிவிப்பையும் 7 இல் வெளியிடாதது ஆச்சர்யம். அடுத்தடுத்த அறிவிப்புகளில் அது வருமென எதிர்பார்க்கலாம்.

1. கிராம பஞ்சாயத்து முதல் முதலமைச்சர் அலுவலகம் வரை காகிதங்களற்ற அலுவலகம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும். காகித கோப்புகள் தடை செய்யப்படும். இணைய வழியில் நேர்மையான, துரிதமான அரசு அமைவதற்கான வழிகள் செயல்படுத்தப்படும். அரசு தொடர்பான அனைத்து ஆவணங்களும் மக்களின் கைபேசியிலேயே கிடைக்க வகை செய்யப்படும்.

2. இணைய தொடர்பு அடிப்படை உரிமையாக அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள  அனைத்து வீடுகளுக்கும் இணைய வசதி செய்து கொடுக்கப்படும்

3. கிராமங்களில் மனித ஆற்றலைப் பயன்படுத்தும் வகையில், நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமங்களிலும் அலுவலகங்கள் அமைக்க தொழில் முனைவோரிடமும் தொழில் நிறுவனங்களிடமும் வலியுறுத்தப்படும்.

4. இல்லத்தரசிகளின் உழைப்பு அங்கீகரிக்கப்படும் வகையில் அவர்கள் செய்யும் வேலைக்கு சரியான ஊதியம் வழங்கப்படும்.

5. விவசாயத்தை “வருமானமும் நேர்மையும் லாபமும் உள்ள தொழில்” ஆக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்திற்கு “பசுமைப் புரட்சி பிளஸ்” என பெயரிடப்பட்டுள்ளது.

6. சூழலியல் சுகாதார மேம்பாடு என்பது அரசின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக அமையும். சாத்தியமானவை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

7. வறுமைக்கோடு என்ற அளவீட்டிற்குப் பதிலாக செழுமைக்கோடு என்ற அளவீடு பயன்படுத்தப்படும். வறுமை கோட்டிற்குக் கீழே உள்ள மக்களை செழுமைக்கோட்டிற்கு கொண்டு வர திட்டங்கள் தீட்டப்படும்.


இவை தான் அந்த 7 திட்டங்கள். இவற்றை படிக்கும்போது உங்களுக்கு தோன்றுவதை  கமெண்டில் பதிவிடுங்கள். என்னுடைய கருத்துக்கள் பின்வருபவையே,

அனைத்தும் இணையமயமாக்கம் : அனைத்து தரவுகளையும் இணையமயமாக்குதலில் பெரிய நன்மையையும் சவாலும் இருக்கிறது. அனைத்தையும் இணையமயமாக்கிவிட்டால் தவறுகளை எளிமையாக கண்டறிந்துவிட முடியும். யார் அந்த தவறை செய்தார்கள் என்பதை ஆதாரத்தோடு நிரூபிக்க முடியும். அதேசமயம் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருப்பதும் சவாலானது. பொதுமக்களின் ஸ்மார்ட் போன்களுக்கு சேவைகளை கொண்டுசெல்ல இம்மாற்றம் உதவும்.

இணையம் அடிப்படை உரிமை : இதன் பணிகள் ஏற்கனவே நடைபெற்றுவருகின்றன. கமல் அதனை முன்னுரிமை படுத்துவது வரவேற்பிற்குரியது.
கிராமங்களில் அலுவலகங்கள் : வீடுகளில் இருந்தே வேலை செய்திட முடியுமா என்பதனை சோதித்து பார்க்க கொரோனா ஒரு வாய்ப்பாக அமைந்தது. பார்க்க முடியும் என நம்பிக்கை இருக்கிறது. இணைய வசதி கிராமங்களுக்கு வந்துவிட்டால் நிறுவனங்கள் சம்மதித்திவிட்டால் சாத்தியமே.


இல்லத்தரசிகளுக்கு சம்பளம் : பெண் சக்தி என்ற பெயரில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படுமென கூறியிருக்கிறார். குடும்பத்தலைவிக்கு வீட்டுவேலை செய்திட பணம் வழங்கப்படுமென பலர் கூறுகிறார்கள். இல்லத்தரசிகள் அவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்திட ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதைத்தான்  கமல் குறிப்பிடுகிறாரா என தெரியவில்லை. பல குழப்பமான கேள்விகள் இதற்குள் இருக்கின்றன.


பசுமை புரட்சி பிளஸ் : விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவது அவ்வளவு எளிமையான காரியம் இல்லை. இதே வாக்குறுதியை ஆட்சியாளர்கள் பலமுறை வைத்திருக்கிறார்கள். ஆனால் மய்யம் அதனை செயல்படுத்த என்ன செயற்திட்டங்களை வைத்திருக்கிறது என்பதை பொறுத்தே இதனை மதிப்பிடலாம்.

கமலை பாராட்டுகிறேன் : கட்சி ஆரம்பிக்கப்போகிறேன் என சொல்லிவிட்டு ஏனோதானோ என இருப்பவர்கள் இங்கிருக்கும் சூழ்நிலையில் ஆட்சிக்கு வந்தால் செய்யவேண்டிய செயல்திட்டங்களில் அக்கறை செலுத்தியிருப்பது பாராட்டுதலுக்கு உரியது . நல்ல திட்டங்களை முன்வைப்போருக்கு மக்கள் முன்னுரிமை அளித்தால் வருகிறவர் நல்ல திட்டங்களோடு வருவர் .

உங்களுடைய கருத்துக்களை பதிவிடுங்கள் .

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version