இங்கே எதுவுமே நிரந்தரம் இல்லை என்றான பின்பு நாம் எதற்க்காக பயந்து நடுங்க வேண்டும்.
எனக்குத்தெரிந்த நண்பர் ஒருவருக்கு நன்றாக பேச வரும்.பல சிக்கலான விசயங்களைக்கூட சிறிய சிறிய உதாரணங்களைக்கூறி புரியவைத்துவிடுவார். இன்று அவர் ஒரு மிகச்சிறந்த பேச்சாளராக வளம் வருகிறார். அவர் வாழ்க்கையில் ஒருமுறை எடுத்த முடிவுதான் அவரை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது.
ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தமையால் அவரது வருமானம் என்பது அந்த குடும்பத்திற்கு அவசியமான ஒன்றாக இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வேலை செய்துகொண்டு இருந்தார். நல்ல சம்பளம், ஒருவழியாக குடும்பமும் கஷ்டத்திலிருந்து விடுபட துவங்கி இருந்தது. ஆனால் நண்பருக்கோ ஒரு சிறந்த பேச்சாளராக வர வேண்டும் என்பது ஆசை. பகுதி நேரமாக அதற்கான பணியில் ஈடுபட்டாலும் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை.
ஒருநாள் துணிந்து ஒரு முடிவினை எடுத்தார். வேலையை விட்டு விடுவது என்றும் ஒரு ஆண்டு முழுவதும் தனக்கு பிடித்தமான பேச்சாளர் ஆவதற்கான முயற்சியில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்தார். எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது, அதே போன்று அவரது வீட்டில் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஓராண்டுக்கு வருமானம் இன்றி எப்படி குடும்பத்தை நகர்த்த முடியும் . ஒருவழியாக சொல்லி குடும்பத்தையும் ஒப்புக்கொள்ள வைத்தார். ஓராண்டு என்ற நிபந்தனையோடு அவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.
ஒரு நூலகத்தில் பகுதி நேர பணியாளராக சேர்ந்தார். முந்தைய வேலையில் கிடைத்த சம்பளத்தை விட பாதி தான் இந்த வேலைக்கு கிடைத்தது. ஆனால் நூலகர் வேலை அவர்க்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியது. நூலகத்தில் இருக்கும் நேரத்தில் அவரால் தனது பேச்சுக்கு தேவையான புத்தகங்களை படித்து கருத்துக்களை தயார் செய்ய முடிந்தது.
இன்று அந்த நண்பர் நல்ல பேச்சாளர் ஆக வலம் வருகிறார். பல இதழ்களில் கட்டுரைகளை எழுதுகிறார். அவரது முகம் இன்று முகவரியாக மாறியிருக்கிறது. பிடித்த வேலையை செய்துகொண்டு முன்பு சம்பாதித்ததை விடவும் அதிக சம்பளத்தை பெறுகிறார். பேச்சாளர் ஆக முடியவில்லை எனில் என்னாகும் என பயந்திருந்தால் அவர் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது.
பயம் என்பது ஒவ்வொருவரை பொறுத்தும் சூழல்களை பொறுத்தும் மாறுபடுகிறது. இரவென்றால் சிலருக்கு பயம், படிக்கிறவர்களுக்கு தேர்வென்றால் பயம், இந்த வேலை போய்விட்டால் என்ன செய்வது என்கிற பயம், வேலையை விட்டுவிட்டு தனியாக தொழில் துவங்கலாம் ஆனால் தோல்வி அடைந்துவிடுவிட்டால் என்ன செய்வது என்கிற பயம். ஆனால் அனைத்து வகையான பயத்திற்கும் ஒரு முக்கிய தொடர்பு இருக்கிறது. ஆம் நண்பர்களே அது உங்களை உண்மையாக சிந்திக்க விடாது, சரியான முடிவை எடுக்க விடாது, இறுதியாக உங்களை முன்னேறவே விடாது.
நீங்கள் பயப்படாத மாதிரி பிறரிடம் காட்டிக்கொள்வது எந்தவிதத்திலும் பயன்தராது. உங்களுக்கு உண்மையாக பயத்திலிருந்து விடுபட போராடுங்கள். உங்களுக்கு ஏற்படும் பயத்தோடு நேரடியாக மோதுங்கள். உங்களுக்கு நீங்களே பேசிக்கொள்ளுங்கள். நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற புரிதலை கொண்டிருங்கள்.
வாழ்க்கையே போராட்டம் அதில் பயமரியாதவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!