பிள்ளை வளர்ப்பில் அம்மாவின் இடத்தை ஈடு செய்ய எவராலும் முடியாது . ஆனால் ஒரு நல்ல தந்தையால் அது முடியுமென்றே நான் நினைக்கின்றேன் .
எத்தனை அப்பாக்கள் குடும்பத்திற்காக கடல் கடந்து , தனிமையில் கிடைப்பதை உண்டு , வாழ்நாளின் முக்கால்வாசியை அடையாளம் இல்லா வெளிநாட்டில் அடிமை வேலை செய்து கழிக்கிறார்கள் தெரியுமா ?
அம்மா தன் பிள்ளைக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என தனது அரவணைப்பிலேயே கைக்குள்ளேயே பிள்ளைகளை வளர்ப்பாள் . ஆனால் ஒவ்வொரு தந்தையும் தான் கண்டதை விட அதிகமாக தன் மகனோ மகளோ காணவேண்டும் என தன் தோளில் வைத்துக்கொண்டு உலகினை அறிமுகம் செய்வார் .
பெரும்பாலும் ஆண் பிள்ளைகள் அனைவருமே அப்பாவை திட்டி தீர்ப்போம் . அப்பாவும் கூட பல சமயங்களில் கண்டிப்பானவராகவே இருந்திருப்பார் . அப்போது அந்த கண்டிப்புகள் நமக்கு எரிச்சலை தந்திருந்தாலும் பெரியவர்கள் ஆக ஆக அப்பாவின் கண்டிப்பின் அர்த்தத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும் .
அந்த கண்டிப்பு அனைத்துமே அவரது அனுபவத்தில் நடந்ததை வைத்துக்கொண்டு நமக்கு ஏதும் தீங்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் வந்தது தான் . நன்றாக கவனித்து பாருங்கள் உங்களால் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் வயது வந்தவுடன் அப்பாவின் கண்டிப்பில் சற்று மாறுதல் இருக்கும் .
மகன் சாதிக்கும்போதோ மகனை பிறர் பாராட்டும்போதோ அம்மாவை காட்டிலும் ஆனந்தமடைபவர் அப்பா மட்டுமே
கட்டிய மனைவியை அடித்து கொடுமை படுத்தும் அப்பாவை , ஊரே பயப்படும் அப்பாவை அவரது மகள் ஓங்கி கன்னத்தில் அடிப்பாள் . அதனையும் அவர் ரசித்துக்கொண்டே வாங்கி சிரிப்பார் . உண்மையில் அவ்வளவு நெருக்கமானது அப்பா மகள் பந்தமென்பது . பொதுவாக பெரும்பலான பெண்களிடம் கேட்டால் அவர்களுக்கு முதல் ஆதரவாக இருந்தது அப்பாவாகத்தான் இருக்கும் .
அப்பாமகள் உறவு என்பது வார்த்தையால் வருணிக்க முடியாதது .
கிடைக்கும் எந்த வேலையையும் செய்து தனது குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுத்தே தீர வேண்டும் என எதிர்பார்ப்புகள் இன்றி நமக்காக வாழ்வினை , சுய சந்தோசங்களை தியாகம் செய்திட்ட அப்பாக்களுக்கு நன்றி சொல்லுவோம் , மதிப்போம் .
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை !!!!
தந்தையர் தின வாழ்த்துக்கள் .
பாமரன் கருத்து