Site icon பாமரன் கருத்து

கேவலம் : டெல்லியில் விவசாயிகள் போராட்டம் – கண்காட்சிக்கு செல்வதை போல அரசியல் தலைவர்கள் பயணம்….

கோரிக்கைகள் என்ன : 

தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் விவசாயி அய்யாக்கண்ணு என்பவரது தலைமையில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் (ஜந்தர் மந்தர்  பகுதியில்)  நடத்திக்கொண்டு வருகின்றனர். அவர்களின் முக்கிய கோரிக்கைகள் ,

வறட்சி நிதியினை உடனடியாக போதுமான அளவுக்கு ஓத்துக்கிட வேண்டும்

வங்கி கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும்

காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திட வேண்டும்

தவறிய தமிழக அரசும் எதிர்க்கட்சியும் :

இப்போது அவர்கள் வைக்கும் கோரிக்கைக்காக மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும் முழு முக்கிய பொறுப்பு தமிழக அரசுக்கு தான் இருக்கின்றது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்ட பிறகும் காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நிர்பந்திக்க வேண்டியது யார் ?

தமிழகமே வறட்சியால் பாதிக்கப்பட்டு கிடக்கின்ற போது போதுமான தொகையை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதனை மத்திய அரசிடம் கேட்டு பெற வேண்டிய பொறுப்பு யாருக்கு இருக்கின்றது ?

ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் இருக்கை போட்டியில் மும்முரமாக இருப்பதால் விவசாயிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். அதன் கொடுமை இன்று ஏற்கனவே வறட்சியால் தமிழகத்தில் காய்ந்து கொண்டிருந்தவன் இன்று டெல்லியில் கையேந்தி கொண்டிருக்கிறான்.

ஒரு நாட்டில் நல்லாட்சி நடைபெற வேண்டுமானால் தவறினை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்தும் எதிர்க்கட்சி அவசியம். ஆனால் இங்கு இருக்கும் எதிர்க்கட்சி தலைவரான முக ஸ்டாலின் அவர்களோ சட்டை கிழிந்ததை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார். எதற்கெடுத்தாலும் ஆளும் அரசை குறை சொல்லிக்கொண்டிருக்கும் அவர் என்ன செய்கிறார். இங்கிருந்து டெல்லி சென்று அங்கு போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பிரதமர் உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கூவி விட்டு சென்னை திரும்புகிறார்.

கணிசமான MLA வை வைத்திருக்க கூடிய ஸ்டாலின் நினைத்திருந்தால் அவர்கள் கட்சியின் MLA வையும் MP யையும் டெல்லியில் திரட்டி விவசாயிகளை பிரதமர் சந்திக்கும் வரை நாங்கள் தமிழகம் திரும்ப மாட்டோம் என போராட்டம் நடத்தியிருக்கலாம். ஏன் செய்யவில்லை?

அதே வேலையை தான் மற்ற தமிழக கட்சிகளும் செய்துவருகின்றன. டெல்லிக்கு செல்வது நியூஸ் சேனலில் ஆறுதல் சொல்வது. ஊருக்கு திரும்புவது….இதே தான் அனைவரும் செய்துகொண்டிருக்கின்றனர் .

என்ன செய்யவேண்டும் : 

தமிழகம் இன்று ஆளுமையான தலைவர்களை இழந்து தவித்து கொண்டிருக்கின்றது. விளைவு எங்கும் போராட்டம் எதிலும் போராட்டம். நேருவிடம் வலியுறுத்தி பேச கூடிய காமராஜரை போன்ற ஆளுமைகள் இல்லாமையால் இன்று தமிழகம் தன் நிலையிறங்கி தாழ்ந்து வருகின்றது .

தமிழக அரசும் எதிர்க்கட்சியும் மற்ற கட்சிகளும் ஒன்றினை மட்டும் புரிந்துகொள்ளவேண்டும், நீங்கள் தேர்தலில் மோதிக்கொள்ளுங்கள், குறைகூறிக்கொள்ளுங்கள். ஆனால் தமிழர் நலன் என்று வரும்போது ஒற்றுமையோடு போராடுங்கள். நம் அருகில் இருக்கும் கர்நாடகாவை எடுத்துக்கொள்ளுங்கள் உச்சநீதிமன்றம் தண்ணீரை திறந்துவிடுங்கள் என்று உத்தரவிட்ட பிறகு அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி ஒற்றுமையோடு திறந்துவிட முடியாது என்றனர். இன்றும் தன் மக்களுக்கு என்று ஒரு பிரச்சனை வரும்போது கூடி நிற்கிறார்கள்.

நீங்களும் ஒற்றுமையோடு பிரச்சனையை எதிர்கொள்ளுங்கள் . தமிழகத்தை நல்வழிப்படுத்துங்கள்.

நன்றி
பாமரன்

Share with your friends !
Exit mobile version