Site icon பாமரன் கருத்து

“Fair and Lovely” பெயர் மாற்றம் உண்மையான மாற்றத்தை தருமா?

"Fair and Lovely" பெயர் மாற்றம்

"Fair and Lovely" பெயர் மாற்றம்

வெண்மை நிறம் தான் விரும்பத்தக்கது என்ற ரீதியில் விற்கப்படும் இரண்டு கிரீம்கள் விற்பனையை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் நிறுத்தப்போகிறது. அதேபோல Fair and Lovely என்ற கிரீமின் பெயரில் இருக்கும் Fair என்ற வார்த்தை நீக்கப்பட இருப்பதாக யுனிலீவர் அறிவித்துள்ளது.
"Fair and Lovely" பெயர் மாற்றம்

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜியார்ஜ் ஃபிலாய்ட் போலீஸ் அதிகாரியால் கழுத்து நசுக்கப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வு நடைபெற்ற பிறகு நிறவெறிக்கு எதிரான போராட்டங்களும் கருத்துக்களும் வேகமெடுத்தன. [நாம் அமைதியாக இருப்பதைப்போல அமெரிக்கர்கள் அமைதியாக இருப்பதில்லை] . அதன் ஒரு பகுதியாக, வெள்ளை நிறம் தான் அனைவராலும் விரும்பத்தக்கது, அதுதான் வெற்றியை தரத்தக்கது என்ற ரீதியில் விற்பனையாகும் பொருள்களுக்கு எதிரான விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் வலுப்பெற்றன.

இதன் காரணமாக, முகப்பொலிவு சம்பந்தமான பொருள்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்கள் பொதுமக்களின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. அப்படி ஒரு நிறுவனமாக அறியப்படுகிற ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தனது இரண்டு முக்கியமான பொருள்களை இனி உற்பத்தி செய்யப்போவது இல்லை என தெரிவித்து இருக்கிறது. அந்த பொருள்கள், The Neutrogena மற்றும் Clean & Clear products. இந்த இரண்டு பொருள்களும் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை அகற்றி முகத்தை பொலிவாக்கும் என்ற விளம்பரத்தோடு விற்பனை செய்யப்பட்ட பொருள்கள்.

இதனை அடுத்து இணையவாசிகளின் கவனம் யுனிலீவர் நிறுவனத்தின் “Fair and Lovely” கிரீம் மீது திரும்பியது. இந்தியாவில் பெரும்பான்மையான பெண்களால் தற்போது பயன்படுத்தப்படும் இந்த கிரீம், வெள்ளை நிறம் தான் உயர்வானது, வெள்ளை நிறம் இருந்தால் வேலை கிடைக்கும் என பல பல விளம்பர உக்திகளோடு இந்திய சந்தையை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறது. “Fair and Lovely” முகத்தை வெண்மையாக்கும் என்பதையும் தாண்டி, உளவியல் ரீதியாக வெள்ளை நிறம் தான் உயர்வானது என்பதை இந்தியர்களின் மனதில் விதைத்ததில் முக்கிய பங்கு உண்டு.

“வெள்ளை நிறத்தில் இருப்பதே அழகு” என்ற விளம்பரத்தோடு வளம் வரும் “Fair and Lovely” கிரீம் மற்ற நிறங்களில் இருக்கும் பெண்கள் பாதுகாப்பற்ற தன்மையை உணர்வதற்கு காரணமாக அமைகிறது என்ற கடுமையான விமர்சனத்திற்கு யுனிலீவர் நிறுவனம் பதில் அளித்து இருக்கிறது. அதில் ஃபேர், ஒயிட் மற்றும் லைட் என்ற வார்த்தைகளை அழகு என்ற வார்த்தையுடன் அடையாளப்படுத்தியது தவறு என ஒப்புதல் அளித்துள்ளது.

எதிர்காலங்களில், பல நிறங்களில் இருக்கும் பெண்கள், இந்தியா மற்றும் பல நாடுகளில் உள்ள அழகை குறிக்கும் வகையில் விளம்பரங்கள் இருக்கும் என அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது. Fair and Lovely என்ற கிரீமின் பெயரில் இருக்கும் Fair என்ற வார்த்தை நீக்கப்பட இருப்பதாகவும் யுனிலீவர் அறிவித்துள்ளது. விரைவில் வேறு பெயர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“Fair and Lovely” பெயர் மாற்றம் உண்மையான மாற்றத்தை தருமா?

மக்களின் விமர்சனத்திற்கு பதில் தந்துள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மற்றும் யுனிலீவர் நிறுவனத்தை நாம் பாராட்டியே ஆகவேண்டும். இவர்களைப்போன்றே வெள்ளை நிறம் தான் சிறந்தது என்ற விளம்பரத்தோடு பொருள்களை விற்பனை செய்கின்ற லோரியல் போன்ற நிறுவனங்கள் எந்த பதிலையும் அளிக்கவில்லை.

“Fair and Lovely” பெயர் மாற்றம் என்பது நல்லதொரு முன்னெடுப்பு என்றாலும் கூட அதனால் பெரிய அளவிலான மாற்றம் சமூகத்தில் உடனடியாக ஏற்பட்டுவிடாது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். மேலும் “Fair and Lovely” பொருளின் பெயர் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. ஆனால் பொருள் இன்னும் தயாரிக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கும். வெளிப்புற அட்டை மற்றும் உள்ளே இருக்கும் அனைத்தும் ஒரே விதத்திலான நிறம் மற்றும் எழுத்து வடிவங்களையே கொண்டிருக்கும். நாளையொருவர் “Fair and Lovely” கேட்டால் இதுதான் புதிய பெயர் என்று சொல்லி புதிய கிரீமை கொடுக்கத்தான் போகிறார்.

ஆகவே 100% மாற்றத்தை ஒன்றும் இந்த மாற்றம் தந்துவிடப்போவது இல்லை. ஆனால் இன்னொரு நிறுவனம் இதே முயற்சியை கையிலெடுக்கும் போது மக்கள் எதிர்ப்பார்கள் என்ற எச்சரிக்கையை இந்த மாற்றம் கொண்டு சேர்க்கும்.

ஆகவே நாம் ஒன்றினை புரிந்துகொள்ள வேண்டும், நாம் இங்கே புறக்கணிக்க வேண்டியது நிறுவனங்களின் பொருள்களை அல்ல. வெண்மை நிறம் தான் மற்ற நிறங்களைக்காட்டிலும் உயர்வானது, வெண்மை நிறம் தான் அழகானது, வெண்மை நிறத்தில் இருந்தால் திருமணம் விரைவில் நடந்துவிடும், வெண்மை நிறத்தில் இருந்தால் வேலை எளிதில் கிடைத்துவிடும் என்பது போன்ற எண்ணங்களை தான் நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த மாற்றம் அவ்வளவு எளிதில் நடந்துவிடாது என்பதுதான் எதார்த்தம் என்றாலும் கூட அதற்கான பாதையில் நாம் பயணிக்க வேண்டும். அதற்கு எதிராக செய்யப்படும் விளம்பரங்களை நாம் எதிர்ப்பதன் மூலமாக புதிய தலைமுறையை நல்ல விதத்தில் உருவாக்கிவிட முடியும்.



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version