Site icon பாமரன் கருத்து

ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது – இரயில் பயணங்களில்

அப்போதுதான் மழை பெய்து ஓய்ந்திருந்தது. அழகழகான பூக்கள் படம் போட்ட குடையினை மாலதி இழுத்து சுருக்கிக்கொண்டு புறப்பட தயாராக இருக்கும் ரயில் வண்டியை நோக்கி வேகமாக மாதவனுடன் நடந்து சென்றாள். குடையில் மீதம் படிந்திருந்த மழைநீர் சொட்டு சொட்டாக வடிந்துகொண்டே வந்தது. மாதவன் இரயில் பெட்டியில் ஒட்டியிருக்கும் பெயர்பட்டியலில் தனது பெயரையும் மாலதியின் பெயரையும் தேட ஆரம்பித்தான். இந்த பெட்டிதான் என்பதனை உறுதிப்படுத்திக்கொண்டு இருவரும் ஏறினார்கள்.

வெகு காலமாக சிறைபட்டுக்கிடந்த கைதிக்கு விடுதலை கொடுத்தால் “நான் விடுதலை ஆகி போகிறேன்” என கத்துவதை போல நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த ரயில் பெரும் சத்தத்துடன் புறப்பட ஆரம்பித்தது. அங்கும் இங்கும் பார்த்து பார்த்து தங்களது இருக்கைகளை மாதவனும் மாலதியும் கண்டுபிடித்துவிட்டார்கள். குடையை மட்டும் கீழே ஓரமாக வைத்துவிட்டு மற்ற பொருள்கள் அனைத்தையும் மேலே வைத்துவிட்டு இருவரும் நிம்மதியாக உட்கார்ந்தார்கள். மழை சாரலும் மண் வாசமும் கலந்து வந்த காற்று கணவன் மனைவிக்கு பெரும் சந்தோசத்தை கொடுத்தது.

எதிரே ஒரு 23 வயது மதிக்கத்தக்க இளைஞனும் அவனுடைய அப்பாவும் அமர்ந்து இருந்தனர். ஊரினை அடைய வெகு நேரம் ஆகும் என்பதனால் கூடவே வரப்போகும் அவர்களை நோக்கி மாதவனும் மாலதியும் புன்னைகைத்து அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். அந்த இளைஞன் இவர்களை கவனிக்காமல் சிறுவர்கள் யானையை முதல் முதலாக பார்த்தால் எப்படி ஆர்வத்தோடு பார்ப்பார்களோ அப்படி ஜன்னலை பார்த்துக்கொண்டு இருந்தான். அவனது அப்பா மட்டும் மறு புன்னகையை உதிர்த்தார்.

ஒரு கதை

ஜன்னலை வெகுநேரமாக பார்த்துக்கொண்டு இருந்தவன் திடீரென “அப்பா அப்பா ஏன் மரங்கள் மனிதர்கள் பின்னால் செல்கிறார்கள்? இங்கே பாருங்கள் அப்பா” என அழைக்க அவனது அப்பாவும் “அப்படியா! எங்கே” என ஆச்சர்யத்தோடு ஜன்னலை பார்த்து “ஆமாம்” என புன்னகை செய்தார். மீண்டும் அந்த இளைஞன் ஜன்னலில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டான். இதை பார்த்துக்கொண்டிருந்த மாதவனுக்கும் மாலதிக்கும் என்ன சிறுவனை போல இந்த இளைஞன் கேட்கிறானே என யோசித்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

மீண்டும் அப்பாவை அழைத்த அந்த இளைஞன் ” ஏன் அப்பா மேகங்கள் மட்டும் பின்னால் போகாமல் நம்மோடே வந்துகொண்டிருக்கின்றன” என கேட்டான். அதுவா சொல்றேன் சொல்றேன் சொல்லிக்கொண்டே தண்ணீரை குடித்துவிட்டு பாட்டிலை கூடைக்குள் வைத்தார். மாதவனுக்கு சங்கடமாய் போயிற்று. 23 வயது இருக்கக்கூடிய ஒருவன் இப்படி குழந்தை மாதிரி கேள்வி கேட்கிறான் அதற்கு அவனது அப்பாவும் சந்தோசமாக பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறாரே என யோசித்தான். பிறகு சொல்லிவிடலாம் என மனதை தேற்றிக்கொண்டு ” அய்யா நான் சொல்கிறேன் என்று தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம், உங்களது பையன் சிறு பிள்ளைபோல கேள்வி கேட்கிறான். நீங்க நல்ல மருத்துவர்கிட்ட காட்டுவது மிகவும் நல்லது ” என்றான்.

அந்தப்பெரியவர் எந்தவித பதற்றமும் இன்றி “தம்பி இவன் என் இரண்டாவது மகன். குழந்தையாக  இருக்கும்போது நடந்த ஒரு விபத்தில் கண்பார்வை போய்விட்டது. எங்கு எங்கோ சென்றும் பார்வையை திரும்ப கொண்டுவர முடியவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்புதான் கண்பார்வையை திரும்ப கொண்டுவந்துவிட முடியுமென்று சொன்னார்கள். அங்கு ஆப்ரேசன் செய்த பிறகுதான் இவனுக்கு கண்பார்வை திரும்ப வந்தது. இவ்வளவு நாட்கள் மருத்துவமனைக்கு உள்ளேயே இருந்த இவன் இன்றுதான் வெளியுலகை பார்க்கிறான். அதனால் தான் சிறு பிள்ளைபோல கேள்வி கேட்கிறான்” என சொல்லி அவனது தலையை கோதிவிட்டார்.

மாதவனுக்கு சங்கடமாக போய்விட்டது. நாம் சொன்னது அந்த பையனுக்கும் அவனது அப்பாவிற்கும் எவ்வளவு வருத்தத்தை தந்திருக்கும் என மனதிற்குள்ளேயே நினைத்து புழுங்கிக்கொண்டான். மாலதியும் மாதவனின் கைகளை பிடித்து அவளது சங்கடத்தை பகிர்ந்துகொண்டாள். ரயில் தொடர்ந்து சென்றுகொண்டு இருந்தது. விளக்குகள் அணைக்கப்பட்ட பின்னரும் அந்த இளைஞன் ஜன்னலிலேயே பார்வையை வைத்துகொண்டுவந்தான்.

ஒவ்வொருவரின் செயலுக்கு பின்னாலும் ஏதோ ஓர் காரணமும் கதையும் நிச்சயமாக இருக்கும். அவர்களின் நிலையில் இருந்து புரிந்துகொள்ள முயற்சித்தால் மட்டுமே அதனை நம்மால் உணர முடியும். அப்படி உணராமல் பல நேரங்களில் நாம் வார்த்தைகளை உதிர்க்கிறோம், செயல்களை செய்கிறோம். இனி வேண்டாமே!


பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version