Site icon பாமரன் கருத்து

யானையும் மெல்லிய சங்கிலியும் – Motivational Story in Tamil

முயலாமை என்பது உங்களின் வெற்றியை முடக்கிப்போடக்கூடிய வலிமை உடையது. முயற்சி என்பது வெற்றியை உங்களது காலுக்கு கீழே சமர்பிக்கக்கூடிய வலிமை உடையது.


 

 

எனக்குத்தெரிந்த நபர் ஒருவருக்கு மிகப்பெரிய விவசாய நிலம் உண்டு. ஒரு காலத்தில் நெல், வாழை, சோளம், கடலை என சகலத்தையும் விளைவித்துவந்தார்கள். ஒருகட்டத்தில் மழை பொய்க்கவே வீட்டுக்கு சாப்பிடும் அளவிற்கு நெல் சாகுபடியைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. அந்த நபரும் வேலைக்காக வெளிநாடு செல்ல முயற்சிக்கிறார், இங்கேயே ஒருநாளைக்கு 500 முதல் 700 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறார். ஆனால் அவர் ஒருபோதும் தன்னிடம் இருக்கும் விவாசாய நிலத்தை வைத்து எதையாவது செய்ய முடியுமா என யோசிக்கவே இல்லை. காரணம், அவர் ஏற்கனவே ஒருமுறை முயன்று அதில் தோல்வி அடைந்தார். ஆகவே அதன்பிறகு அதுபற்றி யோசிக்கவே இல்லை.

 அவரைப்போன்று பலர் இருக்கிறார்கள், அவர்களுக்காகவே இந்த சிறுகதை.

யானையும் மெல்லிய சங்கிலியும் – சிறுகதை

 

கண்ணன் ஒரு கோவிலுக்கு செல்கிறார். அப்போது இரண்டு ஆட்கள் உயரம் உடைய யானையை சுற்றி சிறுவர்கள் வேடிக்கை பார்ப்பதைக்கண்டு இவரும் அருகே செல்கிறார். அங்கே சிறுவர்கள் “டேய் இந்த யானைக்கு வாய் எங்கடா இருக்கு?, ச்ச எனக்கிட்ட மட்டும் இந்த யானை இருந்திருந்தா நான் காட்டுல விட்ருப்பேன், நான் இந்த யானையை பாக்குறதுக்காகவே தான்பா கோவிலுக்கு வந்தேன், எவ்வளவு பெருசா இருக்கு இது எத்தன தட்டு சோறு சாப்புடும்” என சிறுவர்கள் அவர்களுக்குள் ஆச்சர்யம் கலந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.

 

கரிய மேகம் போல வானுயர இருக்கும் யானை எப்போதும் ஒரு ஆச்சர்யம் தான். காட்டில் மிகப்பெரிய மரங்களை பிடிங்கி வீசும் யானையை கும்கி படத்தில் பார்த்த பிறகு அதேமாதிரியான யானை மனிதர்களுடன் அமைதியாக வலம் வருவதைக்கண்டாலும் ஆச்சர்யம் தான். அத்தனை வலிமை உடைய யானையை மெல்லிய உடல் கொண்ட ஒரு பாகன் ஒரு குச்சியால் கட்டுப்படுத்துவத்தைக் கண்டு கண்ணனுக்கு பெரிய ஆச்சர்யம். அந்த யானை வேறெங்கும் செல்ல முடியாதவாறு ஒரு சங்கிலியால் ஒரு காலில் கட்டிப்போட்டு வைத்திருந்தார்கள்.

 

அந்த யானை மனது வைத்தால் ஒரு நொடியில் அந்த சங்கிலியை அறுத்தெறிந்துவிட்டு பாகனை அலேக்காக தூக்கி வீசிவிட்டு போய்விடலாம். ஆனால் அது அதற்கு முயற்சி செய்யவே இல்லை. கொடுக்கும் தேங்காய் மூடிகளையும் , வாழைப்பழங்களையும் சாப்பிட்டுவிட்டு ஆசிர்வாதம் செய்துகொண்டிருந்தது. சிறுவர் கூட்டம் கலைந்த பிறகு மெல்ல பாகனிடம் பேச்சுக்கொடுத்த கண்ணன் “இந்த சின்ன சங்கிலியை யானை நினைத்தால் அறுத்தெறிந்துவிட்டு போய்விடலாம், ஏன் யானை அப்படி செய்வதில்லை?” என்று கேட்டார்.

 

அதற்கு பாகன் ” இந்த யானை சிறு குட்டியாக இருக்கும் போது இதே சங்கிலியால் தான் கட்டி வைத்திருப்போம். அப்போது அது இந்த சங்கிலியை அறுக்க முயற்சி செய்யும், ஆனால் அந்த சிறு வயதில் அதனால் அது முடியாது. அப்போதிலிருந்து அது மனதிற்குள் “இந்த சங்கிலியை நம்மால் அறுக்க முடியாது” என்ற எண்ணம் ஆழமாக பதிந்துவிடும். ஆகவே யானை பெரிதான பின்பும் சங்கிலியை அறுத்துப்பார்க்க முயற்சி செய்யாது.” என்றான் பாகன். 

எவ்வளவு பெரிய உண்மை

எவ்வளவு பெரிய உண்மை இந்த சிறிய கதைக்குள் அடங்கி இருக்கிறது. இது கற்பனைக்கதை இல்லை நண்பர்களே. நீங்கள் கோவில்களுக்கு செல்லும் போது யானைகளை கவனியுங்கள், அதனை ஒரு சிறிய சங்கிலியால் தான் கட்டிப்போட்டு வைத்திருப்பார்கள். இப்படித்தான் நாமும் நம்முடைய வாழ்க்கையில் சில சங்கிலிகளை அறுக்கவே முடியாது என நினைத்துக்கொண்டு முயற்சி செய்யாமலே இருந்துகொண்டு இருக்கிறோம். ஆனால் முயற்சி செய்தால் நிச்சயமாக நம்மால் முடியும்.

தடைகளை தகர்த்து எறிந்துவிட்டு வெற்றி எனும் சிகரத்தை அடைய நம்மால் முடியும். நீங்களும் இனி முயற்சி செய்திடுங்கள்.

உங்களது நண்பர்களுக்கும் இந்தப்பதிவை அனுப்பி வையுங்கள்.

வெற்றி நமதே!

இது போன்று உங்களை உற்சாகமூட்டி வெற்றிபெற வைக்கும் பல பதிவுகளை படிக்க இங்கே கிளிக் செய்திடுங்கள்

பின்வரும் லிங்கை கிளிக் செய்து எங்களது வாட்ஸ்ஆப் குழுவிலும் இணையலாம்


Get updates via WhatsApp

இதுபோன்று பிறரை ஊக்கப்படுத்தும் பதிவுகளை எழுதும் திறன் கொண்டவரா நீங்கள்? உங்களது கட்டுரை பாமரன் கருத்து இணையதளத்தில் இடம்பெற விரும்பினால் கட்டுரைகளை எழுதி மேற்கண்ட வாட்ஸ்ஆப் எண்ணிலோ அல்லது pamarankaruthu@gmail.com or admin@pamarankaruthu.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version