Site icon பாமரன் கருத்து

முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றம் தந்தாரா? வாங்க அலசலாம்

ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் போது நண்பர்களோடு நடக்கும் உரையாடல்களில் 'கருணாநிதி அவர்கள் போல இல்லாமல் ஸ்டாலின் அவர்கள் சற்று வேறு மாதிரியான ஆட்சியை தருவார்' என்ற கருத்து மேலோங்கி இருந்தது. அவர் முதலமைச்சராக பதவியேற்றபின்பு அது நடந்ததா?

ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் போது நண்பர்களோடு நடக்கும் உரையாடல்களில் ‘கருணாநிதி அவர்கள் போல இல்லாமல் ஸ்டாலின் அவர்கள் சற்று வேறு மாதிரியான ஆட்சியை தருவார்’ என்ற கருத்து மேலோங்கி இருந்தது. அவர் முதலமைச்சராக பதவியேற்றபின்பு அது நடந்ததா?

முதலமைச்சராக திரு ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று சில வாரங்களே ஆகியுள்ளன என்ற சூழ்நிலையில் அவருடைய செயல்பாட்டை நம்மால் சரியான முறையில் எடை போட முடியாதுதான் என்றாலும் கூட அவர் முன்னெடுக்கும் விசயங்கள், அவர் நடந்துகொள்ளும் விதம் நல்ல விதமான நம்பிக்கையை நம்மிடம் அளிக்கிறதா என்பது பற்றித்தான் இங்கே அலச இருக்கிறோம். உங்களது கருத்துகளையும் நீங்கள் தவறாமல் இங்கே பதிவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சம்பவம் 1 : எதிர்கட்சிக்கும் மரியாதை



செல்வி ஜெயலலலிதா அவர்கள் முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்வின் போது எதிர்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அவர்களுக்கு பின்வரிசையில் இடம் ஒதுக்கி அமர வைத்திருந்தார்கள். இதுபற்றி பின்னர் ஜெயலலிதா அவர்களே வருத்தமும் தெரிவித்து இருந்தார்கள். ஆனால் ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்வில் அதிமுகவின் சார்பாக பங்கேற்ற திரு பன்னீர்செல்வம் அவர்கள் தகுந்த மரியாதையோடு நடத்தப்பட்டார்கள். அதேபோல, ஆளுநர், முதலமைச்சர், அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செலவம், முன்னாள் சபாநாயகர் என அனைவரும் ஒரு வட்டமேசையில் அமர்ந்து உரையாடியதும் பெரும் வரவேற்பை பெற்றது. நாமும் இதனை வரவேற்கிறோம்

சம்பவம் 2 : அம்மா உணவகம் மீது தாக்குதல்



திமுக தலைமையையே சற்று நிலை குலைய வைத்தது இந்த சம்பவம். எதிர்க்கட்சியான அதிமுகவும் அதன் விசுவாசிகளும் எதை வைத்து திமுகவை விமர்சிக்கலாம் என காத்திருந்தபோது அவர்களுக்கு விருந்து வைக்கும் விதமாக அம்மா உணவகத்தை தாக்கினார்கள் சில திமுகவினர். உடனடியாக திமுக தலைமை களமிறங்கி தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு தொடர செய்தது, மீண்டும் கிழித்தெறிந்த பேனரை அங்கேயே வைத்தது என செய்தாலும் கூட விமர்சனம் எழவே செய்தது. இதனை திமுக சரியாக கையாண்டதாகவே கருதுகிறேன்.

சம்பவம் 3 : சிறந்த அதிகாரிகளிடம் பொறுப்பை கொடுத்தது



தமிழகம் மட்டுமல்ல உலக அளவிலும் கூட திறமையான நேர்மையான அதிகாரிகள் என மக்களால் அறியப்படுகிறவர்கள் ஓரங்கட்டி வைக்கப்படுவது தான் வழக்கமான ஒன்று. ஆனால் ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் அதனை தகர்த்தெறிந்தார். உதயசந்திரன் அவர்களை தனி செயலராகவும் இறையன்பு அவர்களை தலைமை செயலாளராகவும் போட்டவுடன் தமிழக மக்களின் மனங்களை வென்று இருந்தார் ஸ்டாலின். காரணம் மிக எளிது. இறையன்பு மற்றும் உதயசந்திரன் இருவருமே நேர்மையான அதிகாரிகள் என பெயர் பெற்றவர்கள். அவர்கள் ஸ்டாலினுக்கு அருகே இருக்கும் போது திமுகவின் முக்கிய தலைகளே ஊழல் செய்திட அஞ்சுவார்கள். ஸ்டாலின் அவர்களை அணுக தயங்குவார்கள்.

சம்பவம் 4 : குறைகளுக்கு செவி கொடுப்பது

ஒரு ஆட்சியாளர் முடிவெடுக்கும் திறன் உடையராவாக இருப்பது அவசியமே. ஆனால் பிறர் கருத்துக்களுக்கு செவி மடுக்காதவராக இருக்க கூடாது. அந்தவகையில் ஸ்டாலின் சற்று சிறப்பாக செயல்படுகிறார் என சொல்லலாம். இதற்கு ஓர் உதாரணம், பெண்கள் மட்டும் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என உத்தரவு போட்டபோது ட்விட்டரில் ஒருவர் ‘மூன்றாம் பாலினத்தவருக்கும் இந்த வசதியை வழங்க வேண்டும்’ என கேட்டபோது உடனடியாக அதற்கு பதிலளித்தவர் விரைவாக அப்படியொரு உத்தரவு வரும் என கூறினார். அதேபோலவே அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஊழலுக்கு துணை போனதாக குற்றம் சுமத்த அந்த அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என நம்புவோம்

சம்பவம் 5 : வெளிப்படைத்தன்மை



பிரதமர் மோடி அவர்கள் பிஎம்கேர்ஸ் க்கு பெற்ற நிதி விவரங்களை வெளிப்படையாக வெளியிட மறுத்ததும் அது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானதும் அனைவரும் அறிந்தது தான். இந்த சூழ்நிலையில் தான் தமிழக அரசுக்கு உதவி செய்திடுவோரின் தகவல்களை வெளிப்படையாக பார்த்து தெரிந்துகொள்ளும்படி வெளியிட்டுள்ளார் ஸ்டாலின்.

இந்த லிங்கை கிளிக் செய்தால் யாரெல்லாம் உதவினார்கள் என்பதை நீங்கள் அறியலாம்

https://ereceipt.tn.gov.in/cmprf/Interface/CMPRF/MonthWiseReport

வாழ்த்துக்கள் ஸ்டாலின். இதுபோன்று சிறப்பாக நடந்துகொண்டால் மக்கள் மனதில் கட்சி பாகுபாடு இன்றி இடம்பெறுவீர்கள்.

//திமுக அரசியல் பிரமுகரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட காரணத்தினால் ஒரு காவல்துறை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது. 100 நாள் கஷ்டப்பட்டு பெற்ற நல்ல பெயரை இதுபோன்ற சம்பவங்கள் கெடுத்துவிடும் என்பதை ஸ்டாலின் அவர்கள் உணர்வதற்கு முன்னால் திமுகவினர் உணர வேண்டும்.






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version