Site icon பாமரன் கருத்து

விஜயகாந்த் மீண்டு வருவது அவசியம்

ஜெயலலிதா , கருணாநிதி போன்ற ஆளுமைகளின்  மறைவிற்கு பிறகு தமிழகத்தில் ஆளுமைகளுக்கான வெற்றிடம் நிலவுகின்றது .  இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும்போது கருணாநிதி மறைவிற்கு இரங்கல் தெரிவித்தபோதும் மெரினாவிற்கு வந்து அஞ்சலி செலுத்திடும்போதும் விஜயகாந்த் அவர்களின் செயல்பாடு மிகுந்த கவலையை அளிக்கின்றது . அவரது உடல்நலன் மோசமாக இருப்பதனை நம்மால் உணரமுடிகிறது .

 

 

திமுகவிற்கு ஸ்டாலின் கிடைத்ததை போன்று அதிமுகவிற்கு அடுத்த ஆளுமையான தலைமை இல்லாத காரணத்தினால் குழப்பம் ஏற்பட்டதை அனைவருமே அறிவோம் . அதனைப்போன்ற சூழ்நிலையில் தான் சில ஆண்டுகளாகவே தேமுதிக சிக்கித்தவித்துவருகிறது . இதற்கு மிக முக்கிய காரணம் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் காரணமாக அவரால் சரிவர செயல்பட முடியாமையே ஆகும் .

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

 

கருணாநிதி , ஜெயலலிதா போன்ற தலைவர்கள் வலிமையாக இருக்கும்போதே மாற்று அரசியலை முன்நிறுத்தி களம் கண்டவர் விஜயகாந்த். தமிழகத்தில் அதிக இளைஞர்களின் வரவேற்பினை பெற்ற கட்சியாக விஜயகாந்த் அவர்களின் தேமுதிக இருந்தது.  ஆனால் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவினால் அவரால் சிறப்பாக செயல்படமுடியவில்லை . அதன் காரணமாக அவர் தனக்கிருந்த தொண்டர்களின் ஆதரவை இழந்தார், இழந்துகொண்டு இருக்கிறார் .

 

உடல்நிலையை சரியாக கவனிக்காத ஆளுமைகள்

 

ஒருவரின் செயல்பாடுகளுக்கு மிக அவசியமானது  உடல் ஒத்துழைப்புதான் . இதனை நன்றாக உணர்ந்ததினால் தான் கருணாநிதி அவர்கள் உடல்நிலையில் அதிக அக்கறை கொண்டவராக இருந்தார் . அவருடைய மரணம் இயற்கையானதென்றே கருதலாம் .

 

 

ஆனால் ஜெயலலிதா அவர்கள் இன்னும் பல ஆண்டுகாலம் வாழ்ந்திருக்க வேண்டிய தலைவர் . முதல்வர் பதவி , அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தின் தலைவி என பெரும் பதவிகளை வகித்தவர்  . நினைத்திருந்தால் வேண்டியதை சாப்பிட்டு நல்ல மருத்துவமனையில் சிகிக்சை எடுத்துக்கொண்டு உடல்நலனை பேணிக்காத்து வாழ்ந்திருக்க முடியும் .

 

இதோ அவரின் திடீர் இறப்பு அதிமுகவிலும் தமிழக அரசின் செயல்பாடுகளிலும் மிகபெரிய மாற்றத்தை , குழப்பத்தை கொண்டுவந்தது .

 

விரும்பப்படும் தலைவரான விஜயகாந்த் மீண்டுவர வேண்டும்

 

ஏற்கனவே நடிகர் சங்க   தலைவராக சிறப்பாக பணியாற்றிய திரு விஜயகாந்த் அவர்கள் , திரைப்படங்களில் நடித்ததைப்போன்றே  நல்லவராகவும் மக்களின் நலனுக்காக குரல் கொடுப்பவராகவும் இருந்து கொண்டு இருக்கிறார் . கேரளாவில் வெள்ள நிவாரணத்திற்கு  ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்களை அனுப்பியது வரை சிறப்பாகவே செயல்படுகிறார் .

 

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து ஆளுமையான ஜெயலலிதா அவர்களுக்கும் அஞ்சிடாமல் குரல்கொடுத்த தைரியசாலியாக மக்களால் கவனிக்கப்பட்டார் . இடையில் அவரது செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு  விஜயகாந்த் என்ற நபருடைய இமேஜை கெடுத்தது  . உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவினால் அவ்வாறு நடந்துகொண்டிருந்தாலும் அப்போதைய சமூகவலைதள பசிக்கு இரையானார் விஜயகாந்த் .

 

இன்று ரஜினி , கமல் என பலர் வெற்றிடத்தை நிரப்பிட  அரசியலுக்கு வந்தாலும் விஜயகாந்த் அவர்களுக்கு இருந்த அந்த வரவேற்பு எவருக்கும் கிடைக்கவில்லை . விஜயகாந்த் அவர்களுக்கு இன்றும் மதிப்பும் அன்பும் மக்களிடத்தில குறையாமல் இருக்கின்றது . ஆனால் அவை இன்றும் வாக்குகளாக இருக்கின்றதா என்றால் , சந்தேகமே .

 

அந்த சந்தேகத்தை போக்கி மீண்டும் அரசியலில் வெற்றிபெற அவர் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான் “அன்று போல தமிழக மக்களின் நலனுக்காக தெளிவாக பேசிட வேண்டும் ” . அதைமட்டும் அவர் செய்துவிட்டால் மக்களிடத்தில மீண்டும் நம்பிக்கையை பெற்றுவிட முடியும் .

 

ஆட்சிக்கட்டிலில் அமருவதற்கு மட்டும் ஆளுமைகள் தேவைப்படுவதில்லை . ஆட்சியாளர்களை நோக்கி மக்களின் குரலாய் கேள்வி எழுப்புவதற்கும் ஆளுமைகள் வேண்டும் .

 

அதற்காகவாவதுவிஜயகாந்த் மட்டுமல்ல , அனைத்து தலைவர்களுமே தங்களது உடல்நலனில் மிகுந்த அக்கறையெடுத்துக்கொள்ள வேண்டும் .

 

அரசியல்தலைவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் உடல்நலன் மிகவும் அவசியமானது , அதனை பேணிகாத்திடுவதே சிறந்தது .

 

பாமரன் கருத்து
பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version