அண்மையில் இடப்பக்கம் (LeftSide Media) என்கிற youtube சேனலில் ஒருத்தரும் வரலே என்கிற ஆவணப்படத்தின் பாடல் முன்னோட்டமாக வெளியிடப்பட்டுள்ளது . இந்த ஆவணப்படத்தின் முக்கிய கருப்பொருள் ,
ஒக்கிபுயலின் போது முறையான முன் அறிவிப்புகள் இல்லாமையும் , புயலுக்கு பின் நடந்த மந்தமான மீட்பு பணிகளையும் அரசின் மீதான குற்றங்களாக கூறுவதுதான்
யார் இந்த திவ்யபாரதி?
ஏற்கனவே கக்கூஸ் என்ற குறும்படம் எடுத்து மனிதர்களின் மலத்தை அள்ளும் மனிதர்களின் வேதனையை உலகிற்கு காட்டியவர் தான் சகோதரி திவ்யபாரதி அவர்கள். ஆளும் அதிகார வர்க்கத்தினரின் எதிர்ப்பினை கக்கூஸ் திரைப்படம் பெற்று இருந்தாலும் தற்கால உண்மையை இப்போதைய இளைஞர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருந்தார் திவ்யபாரதி .
புதிய தலைமை செயலகத்திற்கு பின்னாலேயே துவாரம் இல்லாத கக்கூசு இருக்கின்ற கொடுமையை சொன்னது கக்கூஸ் திரைப்படம் .
துப்புரவு பணியாளர்களின் அன்றாட நாள் எப்படியிருக்கும், குப்பைகள் , மலம் , இறந்த விலங்குகள் என அனைத்துவிதமான குப்பைகளையும் சுத்தம் செய்திடும் அவர்களால் ஒருநேர சாப்பாட்டை கூட நிம்மதியாக சாப்பிட முடியாமல் வாந்தியெடுக்கும் கொடுமைகளையும் இப்படத்தினை பார்க்கும்போது அறிந்திட முடியும்.
திவ்யபாரதியின் “ஒருத்தரும் வரலே”
ஒக்கி புயல் கன்னியாகுமாரி உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய கோரத்தாண்டவம் அனைவரும் அறிந்ததே . 2017 நவம்பர் 29 முதல் டிசம்பர் 06 வரையில் மாலத்தீவு , இலங்கை , தென் இந்தியா போன்றவை ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டன . பல மீனவர்கள் இறந்தார்கள் , பலர் மாயமானார்கள் என்பது அனைவரும் அறிந்ததே .
அப்போதே மீனவ மக்கள் உள்ளிட்ட பலரின் குற்றச்சாட்டாக இருந்தது , இந்திய வானியல் ஆராய்ச்சி மையம் முன் எச்சரிக்கையை விடுக்கவில்லை என்பதும் , புயல் வந்தபிறகு மீட்பு பணிகள் தாமதமாக நடந்தது என்பதுமே .
திவ்யபாரதி அவர்களின் ஒருத்தரும் வரலே பட பாடலும் இதே கருத்தினைத்தான் எடுத்துரைக்கின்றது .
கடல் அலையின் சத்தத்தோடு கலந்துவிட்ட மகனை கணவனை சகோதரனை இழந்தவர்களின் அழுகுரலோடு தொடங்குகிறது இப்பாடல் ,
அய்யோ என் மகனே
ராசா எங்கிருக்கீக
ரத்த சொந்தங்களை இழந்துத்துடிக்கும் அவர்களின் ஏக்கமான கேள்வியை அடுத்தடுத்த வரிகளில் காண முடிகின்றது
கடல்மேலே கழுகு பறக்குது
ஹெலிகாப்டரை காணலையே
அடுத்தடுத்து இப்பாடலில் வருகின்ற வரிகளும் புகைப்படங்களும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் மீளாத்துயரை ஒவ்வொரு வினாடியும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றது.
அரசாங்கத்திற்கு மிகப்பெரிய வேண்டுகோள்
சமூகத்தில் நிலவுகின்ற அநீதியை எடுத்துரைக்கும் திவ்யபாரதி போன்றோரை அடக்கி ஒடுக்க நினைக்காதீர்கள் . திவ்யபாரதி போன்றோர் உங்களுக்குமான நீதிக்காகவே போராடுகிறார்கள் , நீங்களும் சாதாரமானவர்களாக இருந்திருப்பின் .
உணவில் உப்பில்லை என்பதை சாப்பிடுபவர் சொல்லாமல் எப்படி சரி செய்திட முடியும் ?
ஆளும் உங்களது ஆட்சியில் நிலவுகின்ற குறைகளை அறிந்துகொள்ளாமல் உங்களால் எப்படி நல்லாட்சியை தந்திட முடியும் . திவ்யபாரதி போன்றோரின் படங்களை அப்படிப்பாருங்கள் . இனிமேல் அதுபோன்ற குற்றசாட்டுக்கள் நடைபெறாமல் நல்லாட்சி செய்வதற்கு முயலுங்கள் .
செயற்கைகோள்களை கொண்ட நாடு , முப்படைகளையும் சிறப்பாக கொண்ட நாடு , வல்லரசு பயணத்தை நோக்கி செல்லும் மகத்தான நாடு , என் இந்தியநாடு என படித்தவர்களின் சொந்தங்கள் கடலில் முழ்கி இறந்து எலும்புக்கூடுகளாய் கிடக்கும் கொடுமை கண்டு பொங்கிடும் ஒரு குடிமக்களின் உரிமையான கேள்வியாகத்தான் திவ்யபாரதியின் கேள்விகளை நான் பார்க்கின்றேன் , நீங்களும் பார்ப்பீர்கள் என நம்புகின்றேன் .
கோவக்காரர் பாரதி இருந்திருந்தால் ஒரு மீனவனை காக்க முடியாவிட்டாலும் ஒட்டுமொத்த படையையே கலைக்க சொல்லியிருப்பார் , திவ்யபாரதி மென்மையாகவே கேள்விகளை எழுப்பியிருக்கிறார் , அவரை அனுமதியுங்கள்
நல்ல விமர்சனம் கண்ணாடியை போன்றது , பாதுப்பானதாக வைத்துக்கொண்டால் குறைகளை அகற்றி அழகான ஆட்சியை தர முடியும் .
பாமரன் கருத்து