Site icon பாமரன் கருத்து

லஞ்சம் வாங்கினால் தூக்கு தண்டணை ஏன் கொடுக்கக்கூடாது? : கேள்வியெழுப்பிய நீதிமன்றம்

மதுரை உயர்நீதிமன்றக்கிளை மீது எப்போதுமே தனி அபிப்பிராயம் கொண்டவன் நான் . மக்களுக்கு ஆதரவான கேள்விகளை எழுப்புவதில் ஒருபடி மேலே எப்போதும் இருக்கக்கூடியவர்கள் இங்குள்ள நீதிபதிகள் . அப்படித்தான் நெல்கொள்முதல் நிலையங்கள் தொடர்பான வழக்கு விசாரனையின் போது ‘லஞ்சம் வாங்குகின்ற அதிகாரிகளுக்கு தூக்கு தண்டணை விதிக்கப்பட்டால்தான் அத்தகைய குற்றங்கள் சரி செய்யபடும் என அதிரடியாக கருத்து தெரிவித்திருந்தார்கள் .

தமிழகத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய போதுமான கொள்முதல் நிலையங்கள் இல்லை எனவே போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த சூரிய பிரகாசம் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு விசாரித்தது.

விசாரணையின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் ராதாதேவி தாக்கல் செய்த பதில் மனுவில் 862 கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாட்டில் உள்ளது என்றும், மேலும் கொள்முதல் நிலையங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியிருந்தார்.

அதேபோல் நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது தவறான தகவல் என்றும், அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதை கண்காணிக்க 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த அறிக்கை படித்த நீதிபதிகள் கோபமடைந்து, “இந்த அறிக்கையில் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது தவறான தகவல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த வரியில் ஊழல் அதிகாரிகளை கண்காணிக்க குழு அமைத்து முறைகேடில் ஈடுபட்ட 105 அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டினர்.

முறைகேடு நடைபெறவில்லை என்றால் 105 அதிகாரிகள் மீது ஏன்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இது போன்ற தவறான தகவலை நீதிமன்றத்தில் தெரிவிக்கும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

விவசாயிகள் இரவு பகல் என விழித்து பாம்புக்கடி போன்ற வலி வேதனைகளை அனுபவித்து விவசாயம் செய்து நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்தால் வாங்குவதற்கு வக்கில்லாமல் விவசாயிகளிடம் லஞ்சம் பெற்று பிச்சை எடுத்து வருகின்றனர்.

லஞ்சம் வாங்குவது சாதாரண விஷயமாகவும் லஞ்சம் வாங்காத அவர்களை சமூகத்தில் பிழைக்கத் தெரியாதவன் என்றும் வேலை தெரியாதவன் என்று கேலி செய்து வருகின்றனர் சமூகத்தில் லஞ்சம் என்பது புற்றுநோயை விட கொடிய நோயாக பரவிக் கொண்டிருக்கின்றது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், “இது போன்று லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்தகைய தண்டனை விதிக்கப்பட்டால்தான் குற்றம் குறையும். நமது நாட்டில் விவசாயம் அனாதை ஆக்கப்பட்டு வருகிறது.

கடுமையான தண்டணை வழங்கப்பட வேண்டும் 

தூக்கு தண்டணை வழங்கினால் என்ன தவறு என்ற நீதிபதிகளின் கருத்து என்பது அவர்களது அனுபவத்தில் விளைந்த வேதனையின் உச்சம் . ஆகவே தான் இத்தகைய கடுமையான கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள் .

எந்த அரசு அலுவகத்திற்கு சென்றாலும் லஞ்சம் எதார்த்தமான விசயமாக மாறிவிட்டிருக்கிறது . லஞ்சம் கொடுப்பதும் பெரிய விசயமாக இல்லை , லஞ்சம் வாங்குவதும் பெரிய விசயமாக இல்லை . அந்த அளவிற்கு லஞ்சம் புரையோடிப்போயிருக்கிறது .

பொதுமக்களாகிய நாமும் இதற்கு பெரும் உடந்தையாக இருக்கவே செய்கின்றோம் . அவசரம் , பற்றாக்குறையான சான்றிதழ்கள் இவற்றில் இருந்து தப்பித்து தங்களுக்கு வேண்டியதை சாதித்துக்கொள்ள லஞ்சம் கொடுக்க முன்வருகிறார்கள் .

கொடுப்பவரும் வாங்குபவரும் கடுமையாக தண்டிக்கப்பட்டால் தான் மெல்ல மெல்ல லஞ்சத்தை ஒழிக்க முடியும் . திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல , மக்களும் அதிகாரிகளும் திருந்தும்வரை லஞ்சத்தை ஒழிப்பது சிரமமே . 

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version