[sg_popup id=”3271″ event=”inherit”][/sg_popup]
உலகத்தோடு நாம் ஒன்றிணைந்து வாழுவதற்கு மிக முக்கியமான தேவை ‘தகவல் பரிமாற்றம்’ . பார்ப்பது , படிப்பது , பேசுவது , கேட்பது போன்றவையே தகவல் பரிமாற்றத்திற்கு அடிப்படையாக அமைகின்றது . ஆனால் இயற்கை அல்லது செயற்கை காரணங்களினால் கண் பார்வை இல்லாமல் போவதும் காது கேளாமல் போவதும் வாய் பேச முடியாமல் போவதும் தகவல் பரிமாற்றத்திற்கு பெரிய தடையாக இருக்கின்றன .
இன்று தொலைக்காட்சி மிகப்பெரிய தகவல் கடத்தியாகவும் பொழுது போக்கியாகவும் விளங்குகின்றது . ஆனால் இன்று அவை கண் காது இரண்டும் சரியாக இருப்போருக்கு மட்டுமே பயன்பட்டு வருகின்றது . காது கேளாதோரால் திரையில் தெரியும் Subtitle , வீடியோ உள்ளிட்டவற்றை கொண்டு ஓரளவிற்கு புரிந்துகொள்ள முடியும் . கண் தெரியாதோரால் பேசுவதை கொண்டு புரிந்துகொள்ள முடியும் .
கண் காது இரண்டுமே பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்வார்கள் ? அவர்களால் இரண்டையுமே உணர முடியாதே .
இவர்களும் தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் ஒளிபரப்பப்படுவதனை புரிந்துகொள்வதற்கான தொழில்நுட்பத்தினை இளம் அறிவியலாளர்கள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் .
புதிய தொழில்நுட்பம்
தற்போது கண் மற்றும் காது கேளாதோர் எப்படி சில விசயங்களை புரிந்துகொள்கிறார்கள் என்றால் ‘தொடுதல்‘ மூலமாகத்தான் . அவர்களின் கைகளை தொட்டு அவர்களுக்கு தகவலை பகிர்ந்திட முடியும். பிரெய்லி எழுத்துக்களை தொட்டு அவர்கள் புத்தகங்களை படிப்பார்கள் . தொடுதலின் மூலமாக விவரங்களை சொல்வதற்கு யாரேனும் ஒருவர் கூடவே இருக்கவேண்டி இருக்கும் .
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க விரும்பினால் அவர்களுக்கு அருகிலே ஒருவர் அமர்ந்து தொடுதலின் மூலமாக விளக்கிட வேண்டும் . இன்னொரு நபரை அருகிலே எப்போதும் வைத்திருப்பதென்பது நடக்காத ஒன்று . இன்னோரு நபருக்கான தேவையை தொழில்நுட்பத்தின் உதவியால் இல்லாமல் செய்வதே புதிய கண்டுபிடிப்பின் நோக்கம்.
செயல்முறை ஸ்பெயினில் இருக்கக்கூடிய கார்லோஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற ஏஞ்சல் கார்சியா கிரஸ்போ என்னும் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் அவரது குழுவினர் தான் காது கண் பார்வை அற்றோர் தொலைக்காட்சி காணும் வசதியினை ஏற்படுத்துகின்ற முயற்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள் .
அவர்களுடைய கூற்றுப்படி , எழுத்துக்கள் மாறக்கூடிய எலக்ட்ரானிக்ஸ் பிரெய்லி திரை ஒன்றினை வடிவமைக்க வேண்டும் . அதற்கு அனுப்பப்படும் தகவல்களை கொண்டு பிரெய்லி எழுத்துக்களை திரையில் காட்டும் . கண் மற்றும் காது கேளாதோர் கைகளில் இருக்கக்கூடிய கருவியின் திரையினை தொட்டு என்ன ஒளிபரப்பாகிறது என்பதனை பிரெய்லி மூலமாக அறிந்துகொள்ள முடியும் .
புதிய கருவியானது , தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகக்கூடிய நிகழ்ச்சியின் Subtitle ஐ பிரித்தெடுத்து அதனை பிரெய்லி வடிவில் கொடுக்கும் . இது மிகவும் எளிதானது . இன்னும் கூடுதலாக தொலைக்காட்சியில் வரக்கூடிய சத்தத்தினை உள்வாங்கிக்கொண்டும் திரையில் தோன்றும் காட்சி அவற்றினை உள்வாங்கிக்கொண்டும் பிரெய்லி எழுத்துருவில் திரையில் காட்டும்.
சோதனை முயற்சியில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது . விரைவில் அமெரிக்காவிலும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது .
சவால்கள்
எவ்வளவு துல்லியத்தன்மையோடு இந்த கருவி காட்சிகளை எழுத்துருவில் கொடுக்கும் என்பது சவாலான ஒன்று .
அனைத்து சேனல்களும் புதிய கருவிக்கு ஏற்றவாறு subtitle போன்றவற்றினை வழங்குவார்களா என தெரியவில்லை . ஆனால் நாளடைவில் வழங்கிட வாய்ப்பு இருக்கின்றது .
தேவையான கண்டுபிடிப்பு : இந்த கண்டுபிடிப்பு மட்டும் முறையாக செயல்பட்டால் கண் காது பாதிப்பு அடைந்தவர்களுக்கு மிகப்பெரிய பேருதவியாக அமையும் . அடுத்தவர்களின் துணையின்றி அன்றாட வாழ்க்கையை அவர்களால் நகர்த்தி செல்ல முடியும் .
மாணவர்களே இளைஞர்களே , அறிவியல் கட்டுரைகளை நான் எழுதுவதற்கு முக்கிய காரணமே நீங்களும் சிந்தித்து மக்களுக்கு பயன்படுகின்ற புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திட வேண்டும் என்பதற்காகத்தான் . படியுங்கள் , தேவையானவர்களுக்கு பகிருங்கள் .