உலகம் முழுவதும்
உன் பேச்சுதான் – கொரோனா
வேகமாய் ஓடிய கடிகார முட்கள்
முள் குத்திய கால் போல
முடங்கி கிடக்கிறது – உன்னால்
உலகம் அச்சப்பட்டு கிடக்கிறது
என்கிறார்கள் சிலர் – உண்மையில்லை
தான் மட்டுமே உலகம் என
நினைத்து ஆடிய மனிதன்
மட்டும் தான் – முடங்கியிருக்கிறான்
அணில்கள் சிட்டுக்குருவிகள்
மாடத்தில் வந்து போகின்றன
போகவில்லை – நான் மட்டும்
புகையால் தூசியால் வண்ணமிழந்த
மரங்கள் இப்போதுதான்
பச்சையாக தெரிகின்றன – தோட்டத்தில்
முன்பெல்லாம் தெரியாத
தூரத்து நட்சத்திரங்களும்
தெளிவாய் தெரிகின்றன – வானத்தில்
கவனிக்காத பல விசயங்களை
கவனிக்கிறேன் இப்போது
எல்லாம் உன்னால் – கொரோனா
அதிகார புருஷர்கள்
ஆயிரம் பேர் பேசியும்
முடியாத விசயமும் – முடிந்திருக்கிறது
கிரேட்டாவை கிண்டலடித்த
டிரம்ப் இப்போது நம்பியிருப்பார்
ஊரடங்கு சாத்தியமென்று
பொருளாதாரம் முக்கியமல்ல
பூமிதான் முக்கியமென்று
புரிந்துகொள்ள வைத்திருக்கிறாய் – கொரோனா
இத்தனை நாட்கள்
பேருந்து செல்லாமல்
மக்கள் நடமாடாமல் – இருப்பார்களா
இருப்பார்கள் இருப்பார்கள்
இருக்க வைத்தால்
இருப்பார்கள் என்று
ஊருக்கே சொல்லிவிட்டு
ஊரடங்கு நடத்தி
நிரூபித்துவிட்டாய் – கொரோனா
உயிர்பலி கேட்கிறாய்
அதுதான் எனக்கிருக்கும்
வருத்தம் உன்மேல் – கொரோனா
திருந்திடுவார்கள் எம்மக்கள்
போய்விடு இப்போது !
பாமரன் கருத்து
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!