Site icon பாமரன் கருத்து

ஊழல், சாதியம் தொடர்ந்தால் திராவிடம் அழியும், இளைஞர்களிடம் நம்பிக்கையை இழக்கிறது?


 

திராவிடம் ஏன் தேவை? இந்த கேள்விக்கு ஒரு விவாத நிகழ்வில் திரு சுப வீரபாண்டியன் அளித்த பதில் “சமூக நீதி”. உண்மைதான், திராவிடம் வருவதற்கு முன்பாக இந்திய அளவில், தமிழகத்திலும் கூட சமூக நீதி இல்லாமலே இருந்தது எனலாம். ஆனால் இன்று இந்திய அளவில் சமூக நீதியில் மற்ற மாநிலங்களை காட்டிலும்  சிறந்து விளங்குகின்ற மாநிலமாக தமிழகம் இருக்கின்றது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. இதற்க்கு மிக முக்கிய காரணம் ‘திராவிட இயக்கங்கள்’ தமிழகத்தில் ஆற்றிய பங்களிப்பு தான்.

 

அண்ணா மற்றும் பெரியார்

 

ஒரு காலத்தில்…

 

தொட்டால் தீட்டு

 

பார்த்தால் தீட்டு

 

எதிரில் நின்றால் தீட்டு

 

பெண்களுக்கு சமையலறை மட்டுமே

 

என சமூக நீதியற்று கிடந்த தமிழக மண் இன்று ‘தீட்டு’ என எவரும் கூற முடியாத நிலையையும் பொது இடங்களில் அனைவரும் சமம் என்கிற பாகுபாடற்ற நிலையையும் கொண்டு வந்திருக்கின்றன. பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்தவை ‘திராவிட இயக்கங்கள்’ தான். மறுப்பதற்கு இல்லை.

 

நிலைத்திருக்கும் ஊழலும் சாதியமும் 

 

கடந்த 50 ஆண்டுகாலமாகவே ஆட்சியில் இருப்பவை திமுக, அதிமுக என்கிற மிகப்பெரிய திராவிட இயக்கங்கள் தான். இவை தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என சொல்லவில்லை. ஆனால் சமூக நீதியின்மைக்கு அடிப்படையாக விளங்கிடும் சாதியை இந்த இரண்டு கட்சிகளும் ஒழிக்க முற்பட்டதாக தெரியவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் தேர்தல் அரசியலுக்காக சாதி பார்த்து வேட்பாளரை நிறுத்துகின்ற கட்சியாகவே இரண்டுமே பல சமயங்களில் தங்களை காட்டிக்கொண்டு இருக்கின்றன.

 

தொடரும் ஊழல்

 

அதேபோல ஊழல் குற்றச்சாட்டுக்களும் எழுந்தவண்ணம் இருந்துகொண்டே இருக்கின்றன. 2 ஜி வழக்கில் தண்டனை பெறாவிட்டாலும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல ஜெயலலிதா அவர்களின் மீதான சொத்துகுவிப்பு வழக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்னும் பல ஊழல் குற்றசாட்டுகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்று குட்கா ஊழல் வரை அது தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.

 

இளைஞர்களின் நம்பிக்கையை இழக்கும் திராவிட கட்சிகள்

 

பெரியார் திராவிடர் இயக்கத்தை ஆரம்பித்தபோது அதற்கான மிகப்பெரிய தேவையாக இருந்தது சமூக நீதி. தொடக்க காலங்களில் திக, திமுக, அதிமுக போன்றவை அதனை நோக்கியே நகர்ந்தன. ஆனால் அரசியல் கட்சிகளாக ஆட்சியில் இருந்த திமுக அதிமுக இரண்டுமே ஊழலையும் கூடவே வளர்த்தன.

இன்றைய தேவையாக இருப்பது ஊழல் அற்ற ஆட்சி. அதனை தான் இன்றைய தலைமுறையினர் விரும்புகிறார்கள். திமுகவினர் அதிமுகவினர் மீது ஊழல் குற்றசாட்டு கூறினாலும் அதிமுகவினர் திமுகவினர் மீது ஊழல் குற்றசாட்டு கூறினாலும் அங்கே மக்களின் நம்பிக்கையை இழப்பது ஒட்டுமொத்த ‘திராவிட இயக்கம்’ தான்.

 

கேள்வி கேட்கும் இளைஞர்கள்

 

முன்பு போல இப்போதில்லை, சமூக வலைத்தளங்களின் மூலமாக மக்கள் பேசுகிறார்கள், தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார்கள். பெரிய ஆளுமைகளின் மறைக்கப்படும் குற்றங்கள் எளிமையாக கடைக்கோடி மனிதனையும் சென்று சேருகிறது. புதிய புதிய மாற்று கொள்கைகளை முன்வைப்போர் அதிகமாக வந்துகொண்டு இருக்கிறார்கள்.

 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவிட்டோம். நமக்கென்று குறிப்பிட்ட மக்கள் பலம் இருக்கின்றது. நாம் என்ன செய்தாலும் நம்முடைய வாக்கு வங்கி அப்படியே தான் இருக்கும் என நினைத்துக்கொண்டு ஊழலை தொடர்ந்து செய்தால் இன்னும் சில ஆண்டுகளில் திராவிட கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க தயங்க மாட்டார்கள் என்பதே உண்மை. இளைஞர்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள், சமூக வலைத்தளம் அவர்களுக்கு துணை நிற்கிறது. ஆகவே இனியாவது திராவிட கட்சிகள் தங்களின் கொள்கையை நினைவில் நிறுத்தி ஊழலற்ற சாதியத்திற்கு எதிராக செயல்பட்டு மக்களின் நம்பிக்கையை பெற்றால் மட்டுமே நிலைத்திருக்க முடியும்.

 

புரிகிறதா?

 

பாமரன் கருத்து

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version