கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 336 இடங்களை வென்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தது. தற்போதைய 2019 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மக்கள் உங்களுக்கு அதைவிட அதிகமாக வாக்களித்து உங்களது கூட்டணிக்கு 350 இடங்களை கொடுத்திருக்கிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் கிடைத்திருக்கும் பெரும் வெற்றிகளில் குறிப்பிடத்தகுந்த வெற்றி இது. இதனை நீங்கள் பயன்படுத்திக்கொண்டு வலிமையையும் பன்மைத்துவமும் கொண்ட இந்தியாவை உருவாக்க பாடுபடுவீர்கள் என நம்புகிறோம்.
வானவில்லாக இந்தியாவை வளர்த்தெடுங்கள்
இந்தியாவின் உண்மையான அழகு பன்மைத்துவம், ஜனநாயகம். அதனை கட்டிக்காக்க உங்களது தலைமையிலான அரசு உறுதி ஏற்க வேண்டும். நீங்கள் உங்களது வெற்றிப்பேச்சில் குறிப்பிட்டது போல பாஜக ஆளாத மாநிலங்களுக்கும் உங்களது ஒத்துழைப்பினை வழங்கிடுங்கள். கூட்டாட்சி தத்துவம் மற்றும் அரசியல் சாசனத்தில் பாஜகவிற்கு நம்பிக்கை இருக்கிறது என குறிப்பிட்டு இருந்தீர்கள் அதனை வரவேற்கிறேன். அதுதான் நம் நாட்டின் நலனுக்கு மிகவும் முக்கியமானது.
வேலைவாய்ப்பினை உருவாக்கிட முயலுங்கள்
உங்களது கடந்த ஆட்சியில் சொல்லப்பட்ட மிகப்பெரிய குற்றசாட்டு நீங்கள் வாக்குறுதி அளித்தபடி வேலைவாய்ப்பினை உருவாக்கவில்லை என்பதுதான். அந்த குற்றசாட்டை ஏற்றுக்கொண்டு அதனை நிவர்த்தி செய்ய நீங்கள் மிகச்சிறப்பான திட்டங்களை வகுத்து வேலைவாய்ப்பினை உருவாக்க முயல வேண்டும்.
ஊழலற்ற அரசை தொடருங்கள்
மோடி அவர்களே உங்களது கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் ஊழல் குற்றசாட்டுகள் எதுவும் எழவில்லை [ ரபேல் நிலுவையில் இருக்கிறது]. மக்கள் பொதுவாக ஊழலை விரும்புவது இல்லை. நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர ஊழலற்ற ஆட்சியும் மிக முக்கிய காரணம் ஆகவே நீங்கள் இந்த 5 ஆண்டுகளிலும் அதனை தொடருங்கள்.
இளைஞர்களை ஊக்கப்படுத்துங்கள்
இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள். ஆகவே அவர்களின் திறனை அறிந்து அவர்களை ஊக்கப்படுத்தவேண்டியது நம்முடைய கடமை. கடந்த ஆண்டுகளில் நீங்கள் மாணாக்கர்களை சந்தித்ததை பார்க்க முடிந்தது. இனி வரும் ஆட்சிக்காலங்களிலும் அதனை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இலவச கல்வி, இலவச மருத்துவம் இந்த இரண்டையும் நோக்கி இந்தியா பயணிக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம்.
சகிப்புத்தன்மையை வளர்த்திடுங்கள்
இந்தியாவை பற்றி நாங்கள் அறிந்துகொண்டுள்ளதை விட மிக அதிகமாக நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள். சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் இரண்டும் இந்தியாவின் மிக முக்கியமான அடிப்படை. ஆகவே அதனை பாதுகாப்போடு வைத்திருக்க நீங்கள் பாடுபடுவீர்கள் என நம்புகிறேன்.
வாழ்த்துக்கள் திரு மோடி அவர்களே!