Site icon பாமரன் கருத்து

பொது சிவில் சட்டம் என்றால் என்ன? தேவையா? இல்லையா?

 

பொது சிவில் சட்டம் என்றால் என்ன?

[sg_popup id=”3271″ event=”inherit”][/sg_popup]

 
பொது சிவில் சட்டம்

 

பொது சிவில் சட்டமென்பது “சாதி , மத , சமயங்களை கடந்து அனைத்து இந்திய குடிமக்களுக்குமான பொதுவான ஒரு சட்டத்தை இயற்றுவதுதான் . ஏற்கனவே குற்றவியல் சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானவையாக இருப்பதைபோல திருமணம் , விவாகரத்து , சொத்து , ஜீவனாம்சம் உள்ளிட்ட சிவில் சட்டங்களும் அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும் என்பதுதான் பொது சிவில் சட்டம் .

 

தற்போது இந்தியாவில் சிவில் சட்டம் எப்படி இருக்கின்றது ?

 

தற்போது இந்தியாவில் அனைவருக்குமான பொது சிவில் சட்டம் இல்லை . அந்ததந்த மதத்தவர் அவர்களின் மத சட்டங்களை , பழக்கவழங்கங்களை பின்பற்றி வாழ வழிவகை செய்யும்விதமாக இந்துக்கள் , சீக்கியர்கள் , முஸ்லிம்கள் , கிறுஸ்தவர்கள் என பலருக்கும் பலவித சட்ட அனுமதிகள் அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளன .

 

சில சமயங்களில் பிரச்சனை ஏற்படும் போது நீதிமன்றங்கள் அவற்றினை தீர்த்து வைக்கும் நடைமுறையும் இருகின்றது .

 

பொது சிவில் சட்டம் குறித்து இந்திய அரசியமைப்பு சட்டம் சொல்வதென்ன ?

 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 44 வது பிரிவு பொது சிவில் சட்டம் குறித்து விவரிக்கிறது . இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய காலத்தில் நிறைவேற்ற முடியாமல் போன சட்டங்களையோ அல்லது கொள்கைகளையோ குறிப்பிட்டு , இந்தியா பயணிக்க வேண்டிய பாதை இதுதான் என “கொள்கை விளக்கம் ” என்கிற பகுதி கொடுக்கப்பட்டுள்ளது . அதற்குள் 44 வது பிரிவாக பொதுசிவில் சட்டம் பற்றி பேசப்பட்டுள்ளது .

 

அதன்படி ….

 

நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவர முயலவேண்டும் .

 

பொது சிவில் சட்டம் தேவையா ? இல்லையா ?

 

பொது சிவில் சட்டம் குறித்த பேச்சுக்கள் எழும்போதெல்லாம் மிகப்பெரிய எதிர்ப்பு சிறும்பான்மையின மக்களிடம் இருந்து வருவது வழக்கம் , பெரும்பாலும் முஸ்லீம் மதத்தவரிடம் இருந்துதான் வரும் .

 

பொது சிவில் சட்டத்தை விரும்புவோர் கூறுவது ,

 

இந்தியா மத சார்பற்ற நாடு , அப்படியானால் அனைத்து குடிமக்களுக்கும் ஒரேவிதமான சட்டங்கள் இருப்பதுதானே முறை , அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கை விளக்கமும் அதனை நோக்கித்தானே பயணிக்க சொல்கிறது .

 

பொது சிவில் சட்டத்தை எதிர்ப்போர் கூறுவது …

 

இந்தியா மத சார்பற்ற நாடு தான் , இங்கே அவரவர் அவரவரது மத சம்பிரதாயங்களை சட்டங்களை கடைபிடிக்கவும் உரிமை இருக்கின்றது . இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கை விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளபடியால் அதனை நோக்கி சென்றே ஆகவேண்டும் என்கிற கட்டாயமில்லை .

 

சட்டப்புத்தகம்

 

பொது சிவில் சட்டம் தேவையா இல்லையா ? பாமரனின் கருத்து

 

மதசார்பற்ற நாடு என்பதற்கான விளக்கமாக நான் பார்ப்பது “இந்திய மக்கள் அனைவரும் அவரவர் மதத்தினை எவ்வித தொந்தரவுமின்றி பின்பற்ற வழிவகை செய்வது மற்றும் சாதி சமய மத பாகுபாடின்றி அனைவரும் நடத்தப்படுவது

 

இந்த இரண்டையும் சமமாக செயல்படுத்தவேண்டுமெனில் மிகப்பெரிய அளவிலான பொறுமையும் , விசாலமான பார்வையும் , முற்போக்குத்தனமான சிந்தனையும் இருபக்கம் உள்ளவர்களுக்கும் இருக்கவேண்டும் என நான் நம்புகின்றேன் .

 

ஆட்சியாளர்கள் முஸ்லிம்களின் சட்டதிட்டங்களை முழுமையாக மூழ்கடிக்க நினைப்பதும் முஸ்லிம் பிரதிநிதிகள் பழமையான காலத்திற்கு ஒவ்வாத சில சட்டதிட்டங்களை கூட அவர்களாகவே நீக்க முன்வராததுமே தற்போதய பிரச்சனையாக நான் கருதுகின்றேன் .

 

இதற்கு இரண்டு உதாரணங்களை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்

 

சாஹாபானு வழக்கு

 

1985 ஆம் ஆண்டு சாஹாபானு என்ற பெண்ணை விவாகரத்து செய்கிறார் முகமதுகான் என்பவர் . முஸ்லிம் முறைப்படி தலாக் சொல்லி விவாகரத்து செய்தபோது சாஹாபானுவுக்கு வயது 73 . 40 வருட திருமண வாழ்க்கையை தலாக் சொல்லி முடிவுக்கு கொண்டுவந்தது மட்டுமில்லாமல் அந்த மத சட்டப்படி ஜீவனாம்சம் கொடுக்கவும் மறுத்து விட்டார் முகமதுகான் .

 

உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்  சாஹாபானு . அவருக்கும் குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் அளிக்கவேண்டும் வேண்டும் என உத்தரவிட்டது நீதிமன்றம் . அப்போது இந்த உத்தரவு ஷரியத் சட்டத்திற்குள் ஊடுருவபார்ப்பதாக பார்க்கப்பட்டது .

 

இந்த தீர்ப்பை விசாலமான பார்வை கொண்ட முசுலீம் நண்பர்களால் எதிர்க்க முடியுமா? நிச்சயமாக முடியாது . 73 வயது பெண்ணை மூன்றுமுறை தலாக்  சொல்லிவிட்டு ஜீவனாம்சம் கொடுக்க மாட்டேன் , என் மத சட்டம் எனக்கு அந்த உரிமையினை வழங்குகின்றது என சொல்வது அபத்தமானது இல்லையா ? அபத்தம் தான் .

 

தற்போது தலாக் செய்யபடும்போது பெண்களுக்கு ஜீவனாம்சம் அளிக்கப்படுகிறது.

 

ஜிதேந்திர மாதுர் வழக்கு

 

பதினான்கு வயதில் ஒரு மகனையும், இரண்டு பெண்களையும் உடைய ஜிதேந்திர மாதுர் என்ற நபர் தனது மனைவி மீனாவை மணவிலக்கு செய்யாமலேயே சுனிதா என்ற இன்னொரு பெண்ணை மணந்து கொண்டார்.

 

இருந்தாலும் இருதார மணக்குற்றத்துக்காக இவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காரணம், இரண்டாவது திருமணம் செய்வதற்கு முன்னால் ஜிதேந்திர மாதுர் அப்துல்லாகானாக மதம் மாறிவிட்டார்; தான் மணக்கவிருந்த சுனிதாவை பேகம் பாத்திமாவாக மதம் மாற்றி டெல்லி ஜூம்மா மசூதியில் வைத்துத் திருமணமும் செய்து கொண்டு விட்டார். இந்த விவகாரம் எதுவுமே முதல் மனைவி மீனாவுக்குத் தெரியாது.

 

”அன்று காலை இருவருமாக வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு காகிதத்தை என் கையில் கொடுத்தார். அது அவருடைய இரண்டாவது திருமணத்தின் (நிக்காஹ் ) பதிவுச் சான்றிதழ். அதிர்ச்சியில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்றார் மீனா.

 

தான் முசுலீமாக மதம் மாறிவிட்டதால் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது தனது சட்டபூர்வ உரிமை என்பது ஜிதேந்திர மாதுரின் வாதம். இந்த ‘நிக்காஹ்’ செல்லாது என அறிவிக்கக்கோரி மீனா தொடுத்த வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதி மன்றத்தீர்ப்பு வந்துள்ளது. இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்திற்காகவே இசுலாமுக்கு மதம் மாறியுள்ளதால் இந்தத் திருமணம் செல்லாது என்றும், முசுலீமாக மதம் மாறியிருந்தாலும் முதல் மனைவியை மணவிலக்கு செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்யவியலாது என்றும் நீதிபதி குல்தீப் சிங், நீதிபதி சஹாய் ஆகியோர் அடங்கிய ‘பெஞ்ச்’ தீர்ப்பளித்துள்ளது.

 

இந்தப் தீர்ப்பைப் பொருத்தவரை, இதை முசுலீம் மதத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் வரவேற்றுள்ளனர்.

 

மதம் மாறி இரண்டாவது திருமணம் செய்துகொள்ளமுடியும் என்கிற வாய்ப்பு இருந்தபடியால்தானே இவர்களை போன்ற கயவர்கள் மதம் மாறி தவறு செய்யக்காரணம் .

 

அடுத்தது இரண்டாம் திருமணம் செய்வதற்காகவே மதம் மாறியது செல்லாது என கூறினால் அந்த மதத்தவர் செய்தால் தவறில்லையா ?

 

இதுபோன்ற பிற்போக்குத்தனமான சட்டங்கள் அனைத்து மத சட்டங்களிலும் இருக்கத்தான் செய்கின்றன . காலம் மாறிக்கொண்டு இருக்கும்போது சட்டங்களும் மாறியாக வேண்டும் . இல்லாவிட்டால் அவை குற்றங்களுக்கே வழிவகுக்கும் . அதனை தான் இரண்டு உதாரணங்களிலும் பார்த்தோம் .

 

சட்டமிருந்தாலும் இந்துமதத்தில் கூட தவறுகள் நடக்கத்தான் செய்கின்றன . ஆனால் சட்டப்பாதுகாப்புடன் நடைபெறுவது இல்லை

 

மற்ற மத சட்டங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு பொது சிவில் சட்டம் கொண்டுவரவேண்டும் என்பதல்ல , ஆண் பெண் இருவருக்கும் இருக்கின்ற அடிப்படை விசயங்களை பாதிக்கும் விதமாக இருக்கின்ற சட்டங்களை அந்ததந்த மதத்தினர் மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும் .

 

தவறு நடைபெறாதவண்ணம் கட்டுக்கோப்பாக இருந்திட வேண்டும் .

 

இது ஏதோ முஸ்லிம் மக்களுக்கு மட்டுமேயான கருத்தல்ல , இந்து , கிறிஸ்து , சீக்கியர் உட்பட அனைவருக்குமே பொருந்தும் .

 

குறிப்பு  : மிக மிக நுட்பமான தலைப்பு இதுவென்பதை அறிவேன் . என்னுடைய சிந்தனையை பதிவிட்டு இருக்கின்றேன் . மாறுபட்டால் உங்களுடைய கருத்துக்களை பதிவிடுங்கள் .

 

பாமரன் கருத்து
பாமரன் கருத்து
Exit mobile version