தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின் பற்ற வைத்த ‘ஒன்றிய அரசு’ என்ற நெருப்பொன்று தற்போது சில மாநில முதல்வர்களாலும் பேசப்பட்டு வருகிறது. அதேபோல தமிழக பத்திரிகைகள் சில ‘ஒன்றிய அரசு’ என்ற சொல்லாடலை பயன்படுத்தவும் ஆரம்பித்துள்ளன. ஏன் ஒன்றிய அரசு விவாதம் தற்போது எழுந்துள்ளது?
இந்தத்தலைமுறையில் மத்திய அரசு என்ற வார்த்தையைத்தான் நாம் நெடுங்காலமாக பயன்படுத்தி வந்திருக்கிறோம். ஆகவே தான் ‘ஒன்றிய அரசு’ என்பது ஏதோ புரட்சியின் அடையாளமாக சிலர் கருதுகிற அளவுக்கு பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. மாநில உரிமைகள் பறிபோவதாக கருதுகிற ஒவ்வொரு தலைவர்களும் கடந்த காலங்களில் டெல்லியிலே அமைந்திருக்கும் அரசுக்கு நீங்கள் ஒரு ‘ஒன்றிய அரசு’ என்பதை நினைவூட்ட இந்த சொல்லாடலை பயன்படுத்தியே வந்திருக்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில் தூங்கிக்கொண்டிருந்த இந்த சொல்லாடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின்.
டெல்லியில் அமைந்திருந்து மைய அரசு உண்மையிலேயே ஒன்றிய அரசு தானா என்ற கேள்வி பலருக்கு எழுந்திருக்கும். இதற்கு சரியான பதில் என்னவென்றால் ‘ஆமாம்’ என்பது தான். அதுபோலவே ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்துகிறவர்கள் பிரிவினையை உண்டாக்க முயல்கிறவர்கள் என்ற எண்ணவோட்டமும் இருக்கிறது. அதற்குப்பின்னால் உண்மை இல்லை. உண்மையில் மாநில அரசுகளின் உரிமையை மீட்க நினைப்பவர்கள் பயன்படுத்தும் சொல்லாடலாகவே ஒன்றிய அரசு என்பது இருந்து வருகிறது.
1600 கள் வரை இந்திய துணைக்கண்டம் பல பேரரசுகளாலும், சிற்றரசுகளாலும் ஆளப்பட்டு வந்தன, அப்போதெல்லாம் இந்தியா ஒருங்கிணைந்த நாடு இல்லை. அதன்பின்னர் டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள், ஆங்கிலேயேர்கள் என பலரும் பல பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்ற ஆரம்பித்தனர். இதில் இங்கிலாந்து கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் பெருவாரியான பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. சென்னை, மும்பை, கல்கத்தா என இந்தியாவின் பல பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனி ஆண்டாலும் ஒவ்வொரு மாகாணமும் தனித்தனியான ஆட்சிப்பகுதியாகவே இருந்தன. இந்த மாகாணங்கள் அனைத்து தனித்தனியாக இங்கிலாந்து கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்தன. பின்னர் இவை அனைத்தும் 1773ஆம் ஆண்டில் மாற்றப்பட்டு சென்னை, மும்பை உள்ளிட்ட அனைத்து மாகாணங்களுக்கும் மத்திய தலைமை மாகாணமாக கல்கத்தாவை அறிவித்தது கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி. அப்போதுதான் இந்தியாவில் முதன்முதலாக ஒருங்கிணைந்த ஆட்சி ஏற்படுத்தப்பட்டது, அதன்பின்னர் கல்கத்தாவில் மத்திய அரசாக இருந்த தலைமை ஆளுநரின் கட்டுப்பாட்டில் அனைத்து மாகாணங்களும் இயங்க தொடங்கியது. பிறகு இந்த அனைத்து மாகாணங்களும் நேரடியாக இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 1858 ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் ஆளுகைக்கு வந்தது.
1900 களில் விடுதலைக்குரல்கள் இந்தியா முழுமைக்கும் ஒலிக்க தொடங்கியது, இவ்விடுதலை போராட்டத்தில் அனைத்து மொழி மக்களும் கலந்துகொண்டனர், உயிர்த்தியாகம் செய்தனர். காங்கிரஸ் கட்சி தொடங்கிய பின்னர் அக்கட்சியும் மொழிவழி மாநில உரிமைகளை வலியுறுத்தி பேசியது, காந்தியடிகளும் மொழிவழி மாநில உரிமைகளுக்கு ஆதரவாக நின்றார். பிறகு 1919இல் இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை ஏற்படுத்தப்பட்டது, இதனால் ஆட்சிப்பொறுப்பில் சில துறைகள் இந்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன்பின்னர் பல கட்ட போராட்டங்களுக்கு பின்னர் இந்தியாவில் 1935 இல் மாகாண சுயாட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் மேலாட்சி ஆங்கீகாரம் தரப்படவில்லை. 1935 இல் ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட இந்திய அரசு சட்டம் இந்தியாவை “ஒன்றியம்” என்றும் ‘கூட்டாட்சி’ என்றுமே வரையறுக்கிறது. பிறகு 1947ல் இந்திய விடுதலைக்கு பின்னர் இயற்றப்பட்ட “இந்திய அரசிலமைப்பு சட்டத்தின்” படி, “india that is bharath shall be a union of states” என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது ‘இந்தியா எனப்படும் பாரதம் என்பது மாநிலங்களின் ஒன்றியம்’ என அழைக்கப்பட்டது.
மாநில உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளித்தால் ஒன்றிய அரசு தேவையற்று போகும்
நான் ஒரு இந்தியன் என சொல்லிக்கொள்வதில் எப்போதும் பெருமை கொள்கிறவர்கள் நாம். அது ரத்தத்தில் உணர்வில் கலந்தது. இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்கவே ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள் என சொல்கிறார்கள். அதிலே துளியளவும் உண்மை இருப்பதாக தெரியவில்லை. இந்தியாவில் இருந்து வெளியேறி தனி நாடு அமைப்பதில் தமிழக மக்களுக்கு விருப்பம் இருக்காது என்பதே உண்மை, அது அவ்வளவு சாதாரண விசயமும் கிடையாது.
ஆகவே ஒன்றிய அரசு என்ற சொல்லாடல் மீண்டும் புறப்பட்டிருப்பதன் அர்த்தத்தை உணர்ந்தால் மட்டுமே அதன் பயன்பாட்டை நிறுத்திட முடியும். இந்தியா என்பது பல்வேறு இன, மொழி மக்களால் உருவான தேசம். தேசம் உருவாக்கப்பட்ட காலத்தில் மாநிலங்களுக்கு அதிகாரங்கள் பல இருந்தன. ஆனால் மத்திய அரசு அதில் ஒவ்வொன்றாக பிடுங்கி தன்னகத்தே வைத்துக்கொள்ள முயற்சி செய்திடும் போது தான் நீங்கள் ‘ஒன்றிய அரசு’ மட்டுமே என்பதை நினைவுபடுத்த வேண்டிய கட்டாயம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வு இதற்கு சிறந்ததொரு உதாரணம். மருத்துவத்தில் தகுதியை கொண்டுவருகிறோம் என்ற போர்வையில் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்தது மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு. சிறந்த சுகாதாரத்துறையை கொண்டிருக்கும் தமிழக மருத்துவர்கள் அனைவரும் தமிழக பாடத்திட்டத்தில் பயின்று வந்தவர்கள் தான். இதிலே புதிதாக தரம் என்ன வேண்டி இருக்கிறது? ஒரு ஒரு உதாரணம் மட்டுமே. ஒன்றிய அரசு வார்த்தையை ஒழித்துக்கட்ட விரும்பினால் மத்தியில் இருக்கும் அரசு அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டியது அவசியம்.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!