Site icon பாமரன் கருத்து

காவிரி வந்து சேர இன்னும் தாமதமாகும் ஏன் ? வரைவு அறிக்கை சொல்வது என்ன ?

பல கட்ட உச்சநீதிமன்ற கண்டனங்கள், தமிழக மக்களின் தொடர் போராட்டங்கள் என எது நடந்து கொண்டிருந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப்போட என்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்தது பாஜக தலைமையிலான மத்திய அரசு. இதற்க்கு மிக முக்கிய காரணம் “கர்நாடக மாநில தேர்தல்”.

கடந்த 12 ஆம் தேதி கர்நாடகா தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், மத்திய நீர்வளத்துறை செயலர் “காவிரி வரைவு அறிக்கையை நேரடியாக கொண்டுவர வேண்டும்” என உத்தரவிட்டபடியால் இனியும் எதுவும் செய்ய முடியாது என எண்ணியபடியால் காவிரி நீர் பங்கீடு தொடர்பான வரைவு அறிக்கையை செயலர் இன்று தாக்கல் செய்தார்.

ஒருவழியாக மத்திய அரசு வழிக்கு வந்துவிட்டது இனி காவிரி நீர் தமிழகத்திற்கு விரைவில் வந்துவிடும் என மக்களும் அரசியல்வாதிகளும் நினைத்திருந்தனர். ஆனால் இவ்வழக்கு தொடர்பாக வெளியாகும் கருத்துக்கள் காவிரி நீர் தமிழகத்திற்கு வருவதை இன்னும் காலதாமதப்படுத்தும் என்பதாகவே தெரிகிறது.

வரைவு அறிக்கையை ஆராய போகும் நீதிமன்றம் :

திங்கட்கிழமை (மே 14) நடந்த விசாரணையின் போது உச்சநீதிமன்றம் “நாங்கள் வரைவு அறிக்கையை சரியானதா? என ஆராயப்போவதில்லை, மாறாக நாங்கள் பிப்ரவரி 16 அன்று கொடுத்த உத்தரவை செயல்படுத்துவதற்கான தகுதியை பெற்றிருக்கிறதா என ஆராய போகிறோம்” என்றார்கள்.

ஒருவேளை பிப்ரவரி 16 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பை செயல்படுத்தும் வலு இந்த வரைவு அறிக்கையின்படி அமைக்கப்படும் ஆணையத்திற்கு இல்லை என நீதிமன்றம் கருதினால் என்னாகும்? மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய அரசை கேட்டுக்கொள்வதை விட வேறு வழியில்லை. இதனால் கால தாமதம் ஆவது என்பது உறுதி தானே.

வரைவு அறிக்கையில் என்ன இருக்கிறது ?

வரைவு அறிக்கை முழுவதும் சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அதில் என்ன இருக்கிறது என்பது எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆனாலும் செய்தித்தாள்களில் சில தகவல்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றன.

பெயரை நீதிமன்றமே வைத்துக்கொள்ளலாம் :

வரைவு அறிக்கையின் படி அமையும் குழுவிற்கு “காவிரி மேலாண்மை வாரியம், ஆணையம் என எந்த பெயரையும் நீதிமன்றமே வைத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது”.

வரைவு அறிக்கையின்படி அமையும் குழு :

தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள வரைவு அறிக்கையின்படி அமையும் குழுவானது பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு செயல்படும்.

இக்குழுவின் தலைவர் மத்திய அரசால் நியமிக்கப்படுவார், அவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் (65 வயது ) இவர் பொறியியல் துறையில் வல்லுனத்துவம் பெற்றவராகவோ அல்லது மூத்த ஐஏஎஸ் அதிகாரியாகவோ தலைவராக நியமிக்கப்படுவார்.

அணைகள் நீர் தேக்கங்கள் இக்குழுவின் ஆணைப்படியே இயங்கும்

இந்த அமைப்பின் நிர்வாகச் செலவு, தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் ஊதியம், நிர்வாகச் செலவு ஆகியவற்றில் தமிழகமும், கர்நாடகமும் தலா 40 சதவீதம் எனப் பகிர்ந்து கொள்ள வேண்டும். கேரள மாநிலம் 15 சதவீதத்தையும், புதுச்சேரி 5 சதவீதமும் பங்களிப்பாக அளிக்க வேண்டும்.

காலதாமதம் ஆனாலும் நிரந்தரமாக பிரச்சினையில்லாமல் தண்ணீர் வந்தால் சரி

சரியான காரணங்கள் எதுவும் இன்றி வெறும் கர்நாடகா தேர்தலை மட்டுமே கருத்தில் கொண்டு மத்திய அரசு இவ்வளவு காலம் தாமதித்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் விவசாயிகளும் மக்களும் பாதிக்கப்பட்டு இருக்க கூடிய இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு நொடி தாமதமும் மிக பெரிய அநீதியாகும்.

இவ்வளவு காலதாமதத்தையும் பொறுத்துக்கொள்ளும் தமிழர்களுக்கு வரக்கூடிய ஆணையமாவது நிம்மதியான நிரந்தர தீர்வை கொடுத்தால் போதுமானது.

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version