Site icon பாமரன் கருத்து

தலைப்பு செய்தியாகிப்போன “தண்ணீர் குறைப்பு “- இனிமேல் செய்யவேண்டியது என்ன ?

பல ஆண்டுகளாக கர்நாடக – தமிழக மாநிலங்களிடையே நிலவி வந்த ஆகப்பெரும் பிரச்சனை காவிரி நதிநீர் பங்கீடு . கர்நாடகத்தில் வாழ்கின்ற தமிழர்களும் தமிழகத்தில் வாழ்கின்ற கன்னடர்களும் நிம்மதியாக வாழ காவிரி பிரச்சனை இடையூறாகவே இருந்துவந்தது . அவ்வப்போது தாக்குதல்களும் வன்முறைகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டன . இருபுறமும் விவசாயிகள் பாதிப்படைந்தனர் .
இதற்காக இரண்டு மாநிலங்களும் பலமுறை நீதிமன்ற கதவை தட்டின …பலமுறை நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கர்நாடகா நீரை தர மறுத்து வந்ததும் நினைவிருக்கலாம் .அதிகமாக நீதிமன்றத்திற்கு செல்லவேண்டிய நிலைமை தமிழகத்திற்கு தான் இருந்தது .தற்போது நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் புதிய பங்கீட்டினை வரையறுத்துள்ளது உச்சநீதிமன்றம் .

அதன்படி தமிழகத்திற்கு 177 . 25 டிஎம்சி நீரை கொடுக்குமாறு தெரிவித்துள்ளது . அதோடு சேர்த்து “காவிரி நாட்டின் பொது சொத்து எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது ” என தெளிவு படுத்தியுள்ளது .

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் எனவும் , இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது எனவும் இந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு பொருந்தும் எனவும் கூறியுள்ளது .

தலைப்பு செய்தியாகிப்போன “தண்ணீர் குறைப்பு “

 

காவிரி தீர்ப்பு வெளியானதும் தலைப்பு செய்தியாக நடுவர் நீதிமன்றம் கொடுத்த 192 TMC யை 177 .25 TMC ஆக ( 14 .75 TMC குறைப்பு ) குறைத்ததையே சொல்லிக்கொண்டு இருக்கின்றோம் .

(தமிழகத்தில் 20 TMC அளவிற்கு நிலத்தடி நீர் இருப்பதாகவும் பெங்களூர்  நகருக்கு நீர்தேவை அதிகரித்திருப்பதாகவும் கூறித்தான் இந்த அளவை குறைத்து கர்நாடகாவுக்கு வழங்கியுள்ளது . )

இருமாநில உறவு சார்ந்த இவ்விசயத்தில் நீதிமன்றம் நன்றாக ஆராயாமல்  இந்த தீர்ப்பினை வழங்கியிருக்காது . ஆகையால் வழக்கம்போல எதிர்க்கும் எதிர்கட்சிகளை போல அல்லாமல் இனி என்ன செய்திட வேண்டும் என சிந்தித்து செயல்பட வேண்டும் .

மணல் அள்ளுவதை குறைத்து  ஆறுகளில் நீர்பிடிப்பை அதிகப்படுத்துவது ,
கடலில்வீணாக சேரும் நீரினை தடுத்து சேமிப்பது ,
கடல்நீரைகுடிநீராக்கும் திட்டத்தினை ஆரம்பிப்பது,
மழைநீரை சேமிப்பது ,
குளத்தினை தூர்வாருவது , மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற வேலைகளில் தமிழக அரசு இறங்கிட்டாலே நம் தண்ணீர் தேவையை நாமே பூர்த்தி செய்துகொள்ள முடியும் .
அதற்கான வேலையில் இறங்கிடுவோமா அல்லது நமது விவசாயம் அழிந்துபோவதற்கு கர்நாடகாவையே குறை சொல்லிக்கொண்டு இருக்க போகிறோமா ?
நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version