இன்பமாய் வாழ நினைத்து
இரண்டறக்கலந்த இதயங்களில்
பாய்ந்தோடிய ரத்தத்துளிகள்
மண்ணோடு கலந்தனவே
அவை வெறும் இரத்தத்துளிகளா
அல்ல அல்ல – மனித குலத்தின் குரல்வளையை
ஜாதி என்னும் கூரிய கத்தி கொண்டு கிழித்ததனால்
வழிந்தோடிய பாவத் துளிகள்
விவரம் அறியாத மகளொருத்தி
கல் மீது மோதி ரத்தத்தோடு
ஓடிவருகையில் – வாரி அனைத்து
ஒன்றும் அறியா கல்லில் பழிசுமத்திய தகப்பன்
விவரம் அறிந்த அதே மகள்
சுய உணர்வோடு அன்போடு
தனக்கென ஒருவனை தெரிவு செய்து
புது வாழ்க்கை தொடங்கும் போது
ஆசை மகளின் உயிரையே எடுக்கும்
அப்பாக்களை உருவாக்கியது
ஜாதி என்னும் விச மருந்து – அன்றி
வேறென்ன இருக்க முடியும்
சொல்லோடும் ஏடோடும்
சாதி ஒழிப்பு பேசும்
நாடகம் மறைந்து
செயலோடும் உறுதியோடும்
ஜாதி ஒழிப்பு தொடங்கும்
நாள் தான் அதற்கு முற்று …
கௌரவ கொலைகள் நடந்த நாள்
முதல் பக்க செய்தியாகவும்
இரண்டாம் நாள்
நடு பக்க செய்தியாகவும்
அடுத்தடுத்த நாட்களில்
மறைந்து போகும் கட்ட செய்திகள் போல
ஜாதி ஒழிப்பின் வீரியமும்
மேற்கில் மறையும் சூரியன்
இழந்துபோகும் ஒளிபோல
குறைந்து கொண்டே போகிறதே
இது தனி மனிதன் தவறல்ல
இது ஒட்டு மொத்த சமூகத்தின் தவறு
இது ஒட்டு மொத்த சமூகத்தின் தோல்வி
எப்போது சரி செய்யப்போகிறோம்?
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!