Site icon பாமரன் கருத்து

கேப் டவுனை விடுங்க, நம் கிராமங்களுக்கும் வாட்டர் கேன் வந்துவிட்டதே என்ன செய்ய போகிறோம்?

உலகின் பார்வை இன்று தென் ஆப்ரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான கேப் டவுனை நோக்கி திரும்பியிருக்கிறது. ஆம் வருகிற ஏப்ரல் 16 ஆம் தேதி குடிக்க நீரே இல்லாமல் “Day Zero” (டே ஜீரோ) வரப்போகிறது என்கிறார்கள். இயற்கையான மழைப்பொழிவு இல்லாத காரணத்தாலும் கட்டுக்கடங்காமல் மக்கள் பெருக்கம் ஏற்பட்டதாலும் அங்கு நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது நிர்வாகம்.

 

தண்ணீருக்கு ராணுவ பாதுகாப்பும் ஒரு மனிதர் இவ்வளவு தான் தண்ணீரை பயன்படுத்தவேண்டும் என்கிற விதிமுறைகளும் போடப்பட்டுள்ளன. அப்படி இருந்தும் நிலைமையை சமாளிக்க முடியவில்லை. தென் ஆப்ரிக்காவின் ஏதோ ஒரு நகரில் நடக்கிறது என்று அலட்சியமாக இருந்துவிட முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. காரணம் நம்முடைய நிலைமை அதனைவிட கேவலமாக இருக்கிறது என்பது தான் உண்மை.

நமது நிலைமை எப்படி ?

தென் ஆப்ரிக்கா ஏற்கனவே வறட்சியால் வாடுகின்ற பகுதிகள் தான். ஆனால் நாம் அப்படி அல்லவே ஆனாலும் நம் நிலைமை எப்படி இருக்கிறது?

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக கிணறுகளிலும் குளங்களிலும் ஊரணிகளிலும் இருந்து குடிக்க நீரை எடுத்துவந்தார்கள் நம் வீட்டு பெண்கள். இன்று அதே கிணறுகள் வறண்டு கிடக்கின்றன, குளங்களில் ஆடு மாடுகள் குடிக்க கூட நீர் இல்லை. வாட்டர் கேன் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு கிராமங்கள் தள்ளப்பட்டுள்ளன.பல இடங்களில் நிலைமை இன்னும் மோசமாகி போராட்டங்களும் நடந்து இருக்கிறது .

நகரங்களின் நிலைமையோ இன்னும் மோசம். நகராட்சி நிர்வாகம் எங்கோ இருந்து தண்ணீரை கொண்டு வந்து நிரப்புகிறது. அதனை காசு கொடுத்து மக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். சில பகுதிகளில் குடிதண்ணீர், செலவு தண்ணீர் என அனைத்தையுமே காசு கொடுத்து வாங்கும் அவலமும் நடக்கிறது. எங்கோ தண்ணீர் எடுக்கும் பகுதிகளில் வறட்சி வந்துவிட்டால் அவர்கள் நகரத்திற்கு நீர் எடுக்க அனுமதிக்க மாட்டார்கள். அப்படி நிகழும் பட்சத்தில் அதனை சமாளிக்க நம்மிடம் வழியே தற்போது இல்லை.

மாநில அரசோ இன்னும் காவேரி நீருக்காக கர்நாடகாவிடம் கையேந்தி நிற்கிறது. அடிக்கடி ஆந்திராவிடம் உதவி கோருகிறது.

உதவும் இயற்கையும் அரசின் அலட்சியமும் :

குடிநீர் பற்றாக்குறை வந்து அதனால் வன்முறைகள் ஏற்படும் அளவிற்க்கான சூழ்நிலை இங்கு உருவாகவில்லை. அதற்க்கு காரணம், அதிகமாகவோ குறைவாகவோ பருவம் தவறாமல் பெய்துவிடும் மழையும் மிச்சம் வைத்துள்ள நிலத்தடி நீரும் தான். இந்த இரண்டும் இருப்பதாலேயே தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவில்லை.

இயற்கை தந்த இந்த நம்பிக்கையால் தான் நம்முடைய அரசு தண்ணீர் மேலாண்மையில் அலட்சியமாக நடந்துவருகிறது. இப்படியே சென்று கொண்டிருந்தால் கேப் டவுனை விட நிலைமை மிக கேவலமாக இங்கு போய்விடும்.

என்ன செய்ய வேண்டும் :

அரசு விழிப்படைய வேண்டும். மக்கள் தொகை விகிதம் அடுத்த அடுத்த ஆண்டுகளில் எவ்வளவு இருக்கும், அதற்கேற்ற தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய திறன் இருக்கிறதா ? என்பதை இப்போதே சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் அதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும்.

மக்களின் விழிப்புணர்வே அதிமுக்கியத்துவம் நிறைந்தது. திடீரென தண்ணீர் பற்றாக்குறை வந்தால் கேப் டவுனில் வரிசையில் நின்று தண்ணீரை பெரும் அவர்களின் பொறுமை நம் மக்களுக்கு இருக்குமா என்பது சந்தேகமே. ஆகையால் தண்ணீரை எப்படி சேகரிக்க வேண்டும், தண்ணீரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இப்போதே கூறி அறிவுறுத்த வேண்டும்.

கிராமங்களில் குளங்களை சீரமைத்தல், நிலத்தடி நீரை சேமிக்கும் வசதிகளை செய்தல் போன்றவற்றை இப்போதே தொடங்கிட வேண்டும்.கடலில் கலக்கும் நீரின் அளவை குறைத்து அதனை நன்நீராக சேமித்து வைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

பள்ளி பாட புத்தகங்களில் தண்ணீரின் முக்கியத்துவத்தை விளக்கிடும் பகுதிகளை சேர்த்திட வேண்டும்.

மற்ற மாநிலங்களின் இயற்கை தகவமைப்பு தமிழகத்திற்கு இல்லை. ஆகையால் வறண்டு போகாமல் ஓடக்கூடிய ஆறு என்பது நமக்கு கிடையாது. அதனால் அப்படியே விட்டுவிடாமல் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

நீரின்றி அமையாது உலகு எனவே நீரின் முக்கியத்துவம் உணர்ந்து இப்போதே செயல்பட்டால் மட்டுமே அதிக மக்கள் தொகை கொண்ட நம்மால் தண்ணீர் பஞ்சத்தை தவிர்த்திட முடியும்.

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version