முன்னர் பெண்களை அனுமதிக்காத ஜிப்போர்டு பின்னாளில் “சென்னை மருத்துவக்கல்லூரி வரலாற்றில் இது பொன்னான நாள்” இதுவென முத்துலட்சுமி ரெட்டி மருத்துவராக பட்டம் பெற்ற நாளை குறிப்பிட்டார்.
_எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/
ஜூலை 20,1886 ஆம் நாள் பிறந்த முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த தினத்தை போற்றிடும் வகையில் தமிழக அரசு, அனைத்து மருத்துவமனைகளிலும் “மருத்துவமனை தினம்” கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் டூடுளில் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் புகைப்படத்தை போட்டு கௌரவப்படுத்தி இருக்கிறது. இந்த தலைமுறையினர் குறிப்பாக பெண்கள் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் வாழ்க்கை குறித்து தெரிந்து வைத்திருப்பது அவசியமான ஒன்று. இந்தக்கட்டுரை அந்தப்பணியினை செய்யும் என நம்புகிறேன்.
பெயர் : முத்துலட்சுமி ரெட்டி
தோற்றம் : ஜூலை 30, 1886
மறைவு : ஜூலை 22, 1968
இடம் : புதுக்கோட்டை மாகாணம் [திருக்கோகர்ணம்]
தந்தை : நாராயண சாமி
தாய் : சந்திரம்மாள்
ஆரம்பகால வாழ்க்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கக்கூடிய திருக்கோகர்ணம் எனும் பகுதியில் ஜூலை 20,1886 ஆம் நாள் நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்கு முதல் குழந்தையாக பிறந்தார். அந்த காலகட்டத்தில் பெண்கள் கல்வி கற்க செல்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று, விமர்சனத்திற்கு உட்பட்ட ஒன்று. அந்த காலகட்டத்தில் கல்வி கற்க செல்லும் பெண்களை வீதியில் நின்று கேளி செய்கின்ற பழக்கம் கூட இருந்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும் அத்தனை தடைகளையும் கடந்து முத்துலட்சுமி ரெட்டி கல்வி கற்பதற்காக சென்றார்.
மருத்துவர் கனவு
இப்படி நோயினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இருக்க முடியுமா? சுற்றிலும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட ஒரு பெண்ணை பார்க்க முடியுமா? என ஆச்சர்யப்பட்டுப்போகும் அளவிற்கு ஏராளமான நோயினால் இளம் பிராயத்தில் பாதிக்கப்பட்டு இருக்கிறார் முத்துலட்சுமி ரெட்டி. பிறக்கும் போதே நோயுடன் பிறந்த அவர் பள்ளியில் படிக்கும் போது கிட்டபார்வை ஏற்பட்டு கண்ணாடி அணிந்தார். நாளடைவில் ரத்த சோகை வந்தது. பின்பு ஆஸ்துமாவும் தொற்றிக் கொண்டது. மூச்சுத் திணரலால் இரவு ஒழுங்காக தூங்க முடியாது. திருமணம் நடந்து பிறந்த முதல் குழந்தைக்கு கக்குவான் இருமல் பாதிப்பு இருந்தது. குழந்தைக்கு தாய்பால் கொடுக்கவும் சக்தி இல்லை. இரண்டாவது குழந்தையின் கண்ணை பயன்படுத்தக் கூடாத திரவத்தை கொண்டு கழுவி விட்டார்கள். அக்குழந்தையின் கண்கள் வீங்கிவிட்டது. குடல் மந்தமும், மல சிக்கலும் இரண்டாவது குழந்தைக்கு ஏற்பட்டது. ஏற்கனவே பிறந்த முதல் குழந்தைக்கு வலிப்பு நோய் வந்து நினைவாற்றல் இழந்து போனது. அந்த பெண்ணின் முதல் தங்கைக்கு தொடர் வயிற்றுப் போக்கு இருந்தது. இரண்டாவது தங்கை, திருமணம் நடந்து சில நாட்களிலேயே புற்றுநோய் ஏற்பட்டு இறந்து போனார்.
இப்படி பல்வேறு விதமான நோய்களின் பாதிப்பினை கண்ட அவருக்கு உதித்தது தான் “மருத்துவர் ஆகவேண்டும்” என்ற கனவு.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்
அன்றைய காலகட்டத்தில் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் பெண்கள் உயர்கல்வி படிப்பதில் சிக்கல் இருந்தது. அப்போது புதுக்கோட்டை மாகாணத்தில் இருந்த கல்லூரியில் பெண்கள் படிக்க அனுமதி கிடையாது. ஆனால் பெண் கல்வியில் பெரும் ஆர்வமும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் எதிர்ப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு, முத்துலட்சுமிக்கு கல்லூரியில் பயில அனுமதி அளித்தார். அதில் வெற்றி பெற்ற பிறகு, சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கல்வி தடைபட்டது.
நமக்கு வந்த மற்றும் நாம் சந்தித்த நோய்களால் பிறரும் பாதிக்கப்படக்கூடும் அவர்களை மீட்க வேண்டுமானால் நாம் மருத்துவர் ஆகித்தான் தீர வேண்டும் என்ற எண்ணம் முத்துலட்சுமி ரெட்டிக்கு வந்தவண்ணம் இருந்தது. அதனை பூர்த்தி செய்வதற்காக சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயில சேர்ந்தார். நாட்டிலேயே அப்போது தான் ஒரு பெண் மருத்துவம் பயில கல்லூரியில் சேர்ந்திருந்தார். அவருடன் பயின்ற பெரும்பாலான ஆண்களுக்கு அது பிடிக்கவில்லை.
கர்னல் ஜிப்போர்டு – முத்துலட்சுமி ரெட்டி
சென்னை மருத்துவக்கல்லூரியில் பணியாற்றிய கர்னல் ஜிப்போர்டு எனும் அறுவை சிகிச்சை பிரிவு பேராசிரியர் பெண்களை தங்களது வகுப்பில் அமர அனுமதிப்பதில்லை. ஆனால் அவருடைய பாடமாக இருந்த அறுவை சிகிச்சை பாடத்தில் தங்கப்பதக்கம் பெற்றார் முத்துலட்சுமி ரெட்டி. இதனால் மனம் மாறிய ஜிப்போர்டு பெண்களை தங்களது வகுப்பில் அனுமதிக்க துவங்கினார்.
முன்னர் பெண்களை அனுமதிக்காத ஜிப்போர்டு பின்னாளில் ‘சென்னை மருத்துவக்கல்லூரி வரலாற்றில் இது பொன்னான நாள்’ இதுவென முத்துலட்சுமி ரெட்டி மருத்துவராக பட்டம் பெற்ற நாளை குறிப்பிட்டார். இது எவ்வளவு பெரிய வெற்றி, இப்போதிருக்கும் இளைய தலைமுறையினர் இதனை கவனிக்க வேண்டும்.
மருத்துவர் மட்டுமே அல்ல
முத்துலட்சுமி ரெட்டி அவர்களை “இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்” என்ற ஒற்றை சாதனைக்குள் மட்டும் அடைத்துவிட முடியாது. அத்தனையும் தாண்டி பெண்ணிய விடுதலைக்காக குரல் கொடுத்திருக்கிறார்.
பாரிசில் 1926 ஆம் ஆண்டு மற்றும் சிகாகோவில் 1933 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டார். சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான முத்துலட்சுமி ரெட்டி, இந்திய மாதர் சங்கத்தின் முதல் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
தேவதாசி முறையை ஒழித்த போராளி
குறிப்பிட்ட சில சமூகத்தை சேர்ந்த பெண்களை கோயில்களில் பணிபுரிய கடவுளுக்காக அர்பணித்துவிடுவார்கள் . அவர்கள் கடவுளை கணவனாக நினைத்துக்கொண்டு தாலிகட்டிக்கொள்வார்கள் . இவர்களின் பணி கோயிலில் பணிவிடை செய்வது , நடனம் , பாடல் போன்றவற்றை கோயில்களில் அரங்கேற்றம் செய்வது என கோயில்பணிகளையே ஆரம்பகாலத்தில் செய்துவந்தனர் . நாளடைவில் கடவுளுக்கு பணிவிடை செய்ய நேர்ந்துவிடப்பட்ட பெண்களை பெரிய பெரிய செல்வந்தர்கள் அவர்களுக்கு பணிவிடை செய்ய நிர்பந்தித்தனர் . நாளடைவில் குறிப்பிட்ட சில சமூகத்தை சேர்ந்த பெண்கள் தாசிகளாக ஆக்கப்பட்டார்கள் , அவர்களின் குலத்தொழிலாகவே அது மாறிப்போனது .
இறுதியாக பிப்ரவரி 02 1929 இல் தேவதாசி ஒழிப்பு மசோதா டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் கொண்டுவரப்பட்டது . அப்போது அந்த மசோதாவினை எதிர்த்த சுயராஜ்ய கட்சியின் சத்திய மூர்த்தி அய்யர் பின்வருமாறு தனது எதிர்ப்பினை பதிவு செய்தார் . “தாசிகள் குலம் இன்பத்தை வாரி வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள் , அவர்களை ஒழித்துவிட்டால் சமூகத்திற்கு கெடுதல் தான் ஏற்படும் . குடும்பப்பெண்கள் சீரழிந்து போவார்கள் . பரதநாட்டிய கலை ஒழிந்துபோகும் . இறைவனுக்கு எதிராக இம்முறையை ஒழிப்பது கேடுவிளைவிக்கும் . “அடாத செயல் ” என தனது நிலைப்பாட்டை தெரிவித்தார் சுயராஜ்ய கட்சியின் சத்திய மூர்த்தி அய்யர்.
செல்வந்தர்களுக்கு சுகம் கொடுக்க சில குலத்துப்பெண்களை சின்னாபின்னமாக்குவது தவறல்ல என பேசிய சத்தியமூர்த்தி அய்யரின் பேச்சு முத்துலட்சுமி ரெட்டி அவர்களை கோபமடைய செய்தது . அவர் பின்வருமாறு பதில் அளித்தார் . குறிப்பிட்ட சில குலத்துப்பெண்கள் தேவதாசிகளாக இருந்து அலுத்துப்போய்விட்டார்கள் . அவர்கள் போதும் என நினைத்துவிட்டார்கள் . சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் , தாசிகள் சமூகத்திற்கு தேவையென கருதினால் தன் குலம் சார்ந்த பெண்களை தாசி தொழிலுக்கு அனுப்பி சிற்றின்பத்தை வாரி வழங்கிட செய்யலாம் என சீறினார் .1947-ம் ஆண்டு ஓமந்தூர் ராமசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது அந்த சட்டம் அமலுக்கு வந்தது
பிற சிறப்பான பணிகள்
சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பிரதமர் நேரு 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார். 1954-ல் தென்னிந்தியாவில் முதல் புற்றுநோய் சிகிச்சை மையமாக அது உயர்ந்தது.
அனாதைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்காக சென்னை அடையாறில் அவ்வை இல்லத்தை துவங்கினார்.
1956-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தது.
தமிழக அரசால் ‘டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித்திட்டம்’ என்ற திட்டம் துவங்கப்பட்டு ஏழை கர்ப்பிணிகளுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது.
தற்போது தமிழக அரசு முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த தினம் “மருத்துவமனை தினம்” ஆக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது.
பெண்களின் முன்னோடி முத்துலட்சுமி ரெட்டி
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தங்களுக்கென முன் மாதிரியானவர்களை வைத்துக்கொள்ளவேண்டியது அவசியமான ஒன்றாக இருக்கிறது. பெண்களுக்கு சாதகமான சூழல்கள் அறவே இல்லாத காலகட்டங்களில் ஒருவர் மருத்துவர் ஆகி இருக்கிறார் எனில் அவரை முன்மாதிரியாக கொண்டால் இப்போது எளிமையாக கல்வி கிடைக்கக்கூடிய காலகட்டத்தில் உயர்ந்த நிலையை அடைவது எவ்வளவு எளிமையான செயல் என்பதனை ஒவ்வொருவரும் உணர வேண்டும். முத்துலட்சுமி ரெட்டி தமிழகத்தின் பெருமை!
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!