Site icon பாமரன் கருத்து

பொறுமையின் பெருமை – பாரதியார் கவிதைகள்


திருத்தணிகை மலைமேலே குமார தேவன்
திருக்கொலுவீற றிருக்குமதன் பொருளைக் கேளர்!
திருத்தணிகை யென்பதிங்கு பொறுமை யின்பேர்,
செந்தமிழ்கண் டீர்,பகுதி: ‘தணியே னுஞ்சொல்,
பொருத்தமுறுந் தணிகையினால் புலமை சேரும்,
‘பொறுத்தவரே பூமியினை ஆள்வார்’என்னும்
அருத்தமிக்க பழமொழியும் தமிழிலுண்டாம்
அவனியிலே பொறையுடையான் அவனே தேவன்.

பொறுமையினை அறக்கடவுள் தல்வனென்னும்
யுதிட்டிரனும் நெடுநாளிப் புவிமேல் காத்தான்,
இறுதியிலே பொறுமைநெறி தவறிவிட்டான்
ஆதலாற் போர்புரிந்தான் இளையா ரோடே;
பொறுமையின்றிப் போர்செய்து பரத நாட்டைப்
போர்க்களத்தே அழித்துவிட்டுப் புவியின் மீது
வறுமையையுங் கலியினைம் நிறுத்தி விட்டு
மலைமீது சென்றான்பின் வானஞ் சென்றான்.

ஆனாலும் புவியின்மிசை உயிர்க ளெல்லாம்
அநியாய மரணமெய்தல் கொடுமை யன்றோ?
தேனான உயிரைவிட்டுச் சாகலாமோ?
செத்திடற்குக் காரணந்தான் யாதென் பீரேல்,
கோனாகிச் சாத்திரத்தை யாளு மாண்பார்
ஜயதீச சந்த்ரவ கூறுகின்றான்;
(ஞானானு பவத்திலிது முடிவாங் கண்டீர்!)
“நாடியிலே அதிர்ச்சியினல் மரணம்”என்றான்.

கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்;
கொடுங்கோபம் பேரதிர்ச்சி:சிறிய கோபம்
ஆபத்தாம்,அதிர்ச்சியிலே சிறிய தாகும்;
அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;
தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்.
கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;
கோபத்தை வென்றிடலே பிறவற் றைத்தான்
கொல்வதற்கு வழியெனநான் குறித்திட் டேனே.

பாரதியார்


மேலும் பல பாரதியார் கவிதைகள் படிக்க Click Here

Share with your friends !
Exit mobile version