Site icon பாமரன் கருத்து

பக்தி – பாரதியார் கவிதைகள்


(பல்லவி)
பக்தியினாலே-தெய்வ-பக்தியினாலே

(சரணங்கள்)

பக்தியினாலே-இந்தப்
பாரினிலெய்திடும் மேன்மைகள் கேளடி!
சித்தந் தெளியும்,-இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,
வித்தைகள் சேரும்,-நல்ல
வீர ருறவு கிடைக்கும்-மனத்திடைத்
தத்துவ முண்டாம்,-நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கும். (பக்தியினாலே)

காமப் பிசாசைக் -குதிக்
கால்கொண் டடித்து விழுத்திட லாகும்;இத்
தாமசப் பேயைக்-கண்டு
தாக்கி மடித்திட லாகும்;எந் நேரமும்
தீமையை எண்ணி-அஞ்சுந் தேம்பற்
பிசாசைத் திருகியெறிந்து பொய்ந்
நாம மில்லாத-உண்மை
நாமத்தினாலிங்கு நன்மை விளைந்திடும், (பக்தியினாலே)

ஆசையைக் கொல்வோம்,-புலை
அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்,கெட்டட
பாச மறுப்போம்,-இங்கு
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல்-உண்மை
முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கி யோர்
ஈசனைப் போற்றி-இன்பம்
யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம், (பக்தியினாலே)

சோர்வுகள் போகும்,-பொய்ச்
சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெற லாகும்,நற்
பார்வைகள் தோன்றும்,-மிடிப்
பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல
சேர்வைகள் சேரும்,-பல
செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்
தீர்வைகள் தீரும்,பலபல இன்பங்கள் சேர்ந்திடும், (பக்தியினாலே)

கல்வி வளரும்,-பல
காரியுங் கையுறும்,வீரிய மோங்கிடும்,
அல்ல லொழியும்-நல்ல
ஆண்மை யுண்டாகும்,அறிவு தெளிந்திடும்,
சொல்லுவதெல்லாம்-மறைச்
சொல்லினைப் போலப் பயனுள தாகும் மெய்
வல்லமை தோன்றும்,-தெய்வ
வாழ்க்கையுற்றே யிங்கு வாழ்ந்திடலாம்,உண்மைப் (பக்தியினாலே)

சோம்ப லழியும்-உடல்
சொன்ன படிக்கு நடக்கும்,முடி சற்றுங்
கூம்புத லின்றி-நல்ல
கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும்
வீம்புகள் போகும்-நல்ல
மேன்மையுண்டாகிப் புயங்கள் பருக்கும்,பொய்ப்
பாம்பு மடியும்-மெய்ப் பரம் வென்று நல்ல நெறிகளுண்டாய் விடும். (பக்தியினாலே)

சந்ததி வாழும்,-வெறுஞ்
சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும்
இந்தப் புவிக்கே-இங்கொர்
ஈசனுண்டாயின் அறிக்கையிட் டேனுன்தன்
கந்த மலர்த்தாள்-துணை;
காதல் மகவு வளர்ந்திட வேண்டும்,என்
சிந்தை யறிந்தே-அருள் செய்திட வேண்டும்’ என்றால் அருளெய்திடும் (பக்தியினாலே)

பாரதியார்


மேலும் பல பாரதியார் கவிதைகள் படிக்க Click Here

Share with your friends !
Exit mobile version