என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். என் கதைகளில் எந்தத் தவறும் இல்லை. என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்த சமூக அமைப்பைத் தான் குறிக்கிறது…. – மண்டோ
உண்மையை எந்தவித தயக்கமும் இன்றி எழுதக்கூடிய சில எழுத்தாளர்களில் முக்கியமானவர் மண்டோ. அவரின் அவமானம் என்ற நாவல் பலரால் விரும்பப்பட்டு படிக்கப்படும் ஒரு நாவல். படிப்பாளிகள் மட்டத்தில் மட்டுமே நடமாடிக்கொண்டிருந்த அவமானம் எனும் புத்தகம் தற்போது சாமானியர்களின் தேடலுக்கும் வந்திருக்கிறது. இதற்கு ஒரு காரணம் கமல் ஹாசன். இவர் ஒரு நிகழ்ச்சியில் அவமானம் புத்தகத்தை படிக்க பரிந்துரைத்திருந்தார்.
Download/Buy : அவமானம் [Avamaanam]
அவமானம் என்ற கதை உங்களுக்காக ராமானுஜம் அவர்கள் தமிழாக்கம் செய்திட்ட ‘மண்டோ படைப்புகள்’ எனும் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நீங்கள் மண்டோவைப் பற்றியும் அவரது பல கதைகள் கட்டுரைகள் பற்றியும் படிக்க விரும்பினால் ராமானுஜம் தமிழாக்கம் செய்த மண்டோ படைப்புகள் எனும் புத்தகத்தை அமேசான் தளத்தில் வாங்கி படிக்கலாம். இலவசமாக அமேசான் கிண்டில் [kindle trial] மூலமாக படிக்கலாம்.
அவமானம் முழுக்கதை
முழுமையாக அசதியுற்ற அவள் கட்டிலில் படுத்த உடனே உறங்கத் தொடங்கி விட்டாள். முனிசிபாலிட்டியின் சுகாதார இன்ஸ்பெக்டர் – அவளால் சேட் என்று அழைக்கப்பட்டவன், அவளின் உடலை மணிக்கணக்காகச் சூறையாடி விட்டு, குடிபோதையில் அப்போதுதான் வீட்டிற்குக் கிளம்பிச் சென்றான். அவன் இரவு முழுக்க அவளோடு தங்கியிருக்கவே விருப்பம் கொண்டாலும், அவன் மீது அன்பு கொண்ட மனைவி அவனுக்காக வீட்டில் காத்திருப்பதால் கிளம்பிச் சென்றான்.
உடல் ரீதியான சித்திரவதைகளுக்காக அவள் பெற்ற பணம், அவளின் இரவிக்கைக்குள், சுகாதார இன்ஸ்பெக்டரின் எச்சிலோடு கலந்து துருத்திக் கொண்டிருந்தது. சில சமயங்களில் அவள் பெருமூச்சுவிடும் போது, நாணயங்கள் ஒன்றோடு ஒன்று உரசி எழுப்பிய சத்தம், அவளின் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு சத்தத்தோடு கலந்தது. அந்த நாணயங்கள் உருகி, அவளின் இதயத்தின் ரத்தத்தோடு கலந்து விட்டது போல, இதயத்தில் அசாத்திய எரிச்சலைக் கொண்டிருந்தாள் அவள். அதற்குப் பாதி காரணம் சுகாதார இன்ஸ்பெக்டர் கொண்டு வந்திருந்த அரை பாட்டில் பிராந்தி. சோடா தீர்ந்து விட்டதால் உள்ளூர் சாராயத்தை, தண்ணீர் கலந்து குடித்தது மிச்சக் காரணம்.
பெரிய தேக்குக் கட்டிலில் கவிழ்ந்து படுத்துக்கிடந்தாள். தோள் பட்டைவரை நிர்வாணமாய் இருந்த அவளின் கைகள், பனியில் நனைந்த காற்றாடியிலிருந்து பிரிந்து வந்த பிரம்பு போல் இருந்தது. அவளின் இடது அக்குளில் கட்டியான சதை பிதுங்கிக் கிடந்தது. அடிக்கடி அங்குச் சவரம் செய்யப்பட்டதால் அது நீல நிறத்திற்கு மாறியிருந்தது. பார்ப்பதற்குக் கோழிக்குஞ்சின் தோலை உரித்தெடுத்து அங்கு ஒட்ட வைத்தது போல் இருந்தது.
அது மிகச்சிறிய அறை. பல பொருட்கள் அறை எங்கும் தாறுமாறாய் இறைந்து கிடந்தன. கட்டிலுக்கு அடியில் மூன்று நான்கு உலர்ந்து போன பழைய செருப்புகள் கிடந்தன. அதில் தன் தலையை வைத்து சொறி பிடித்த – கலப்பின நாய் ஒன்று படுத்துறங்கிக் கொண்டிருந்தது. அது உறங்கும் போது கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஒன்றைப் பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றும். சொறி சிரங்கு வந்ததால், பல இடங்களில் அது தன் முடியை இழந்து பார்ப்பதற்கு மடிக்கப்பட்ட தடித்த மிதியடி போன்ற தோற்றத்தைக் கொடுத்தது.
ஒரு பக்கத்திலிருந்த சிறிய அலமாரியில், அழகு சாதனங்கள் – கன்னங்களைச் சிவப்பாக்கிக் காட்டும் கிரீம், உதட்டுச்சாயம், பவுடர், சீப்பு, கொண்டை போட்டுக்கொள்ளுவதற்கான பின்கள் கிடந்தன. ஒரு கொம்பில் கட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருந்த கூண்டில் ஒரு பச்சைக்கிளி தன் இறக்கைகளில் தலையை மறைத்து வைத்து உறங்கிக்கொண்டிருந்தது. கூண்டிற்குள் அழுகிய சாத்துக்குடித் தோலும், கொய்யாப்பழமும் சிதறிக்கிடந்தன. நாற்றமடித்துக்கொண்டிருந்த இவற்றின் மேல் கொசுக்களும், விட்டில் பூச்சிகளும் சுற்றிக் கொண்டிருந்தன. கட்டிலுக்கு அருகில் ஒரு பிரம்பு நாற்காலி கிடந்தது. பயன்படுத்தப்பட்டதால் தலை வைக்கும் இடத்தில் மோசமாக அழுக்கேறிக் கிடந்தது. நாற்காலிக்கு வலது பக்கத்தில், அழகான சிறிய மேசையில் எளிதாகத் தூக்கிச் செல்லக்கூடிய ‘ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்’ இசைத்தட்டுப் பெட்டி கிடந்தது. அதனை மூடியிருந்த கருப்புத் துணி படு மோசமான நிலையில் இருந்தது. துருப்பிடித்த அதன் ஊசிகள், அந்த சிறிய மேசையில் மட்டுமல்லாமல் அறை எங்கும் சிதறிக் கிடந்தன. மேசைக்கு மேல் நான்கு வெவ்வேறு மனிதர்களின் புகைப்படங்கள் சட்டம் போடப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தன. அந்த புகைப்படங்களுக்குச் சற்றுத் தள்ளி, வாயிற்படி அருகில் இடது பக்கத்தில் அடர்த்தியான வண்ணங்களில் ‘கணேஷ்ஜி ‘யின் படம் தொங்கிக்கொண்டிருந்தது. அதன் மேல் பூ வைக்கப்பட்டிருந்தது. சில வாடியவை, சில புதியவை. (இந்தப்படம் துணிச்சுருளைச் சுற்றி இருந்ததிலிருந்து எடுக்கப்பட்டு சட்டம் போடப்பட்டிருக்க வேண்டும்). படத்திற்கு அருகில் எண்ணெய் வழிந்து கொண்டிருந்த சிறிய அலமாரியில் ஓர் எண்ணெய்க் கிண்ணமும், அதன் அருகில் ஓர் எண்ணெய் விளக்கும் இருந்தன. அதன் திரி, சாதி அடையாளத்தை நெற்றியில் போட்டுக்கொள்வது போல், காற்று இல்லாததால், நேராக நின்று கொண்டிருந்தது. அந்தச் சிறிய அலமாரியில் பெரிதும் சிறிதுமாக உடைந்துபோன ஊதுபத்திகளும் கிடந்தன.
ஒவ்வொருநாளும் முதல் வருமானம் கிடைத்தவுடன், அதை கணேஷ்ஜி’யின் படத்திற்குத் தொலைவிலிருந்தே காணிக்கையாய் வைத்துத் தன் நெற்றியில் ஒற்றிக்கொள்வாள். பிறகு அது அவளின் இரவிக்கைக்குள் சென்றுவிடும். அவளுக்குப் பெரிய மார்பகங்கள் இருந்ததால், இரவிக்கைக்குள் எவ்வளவு பணம் போட்டாலும் அது பத்திரமாய் இருந்தது. இருந்தாலும் பல சமயங்களில் மாது விடுமுறையில் புனேவில் இருந்து வந்தால், கொஞ்சம் பணத்தை மறைத்து வைக்க வேண்டி, கட்டிலின் கால் ஒன்றிற்கு அடியில் இதற்காகவே சிறிய பள்ளம் தோண்டி, அதில் பணத்தை மறைத்து வைத்தாள். மாதுவிடமிருந்து பணத்தைப் பாதுகாக்க, சுகந்திக்கு இதைக் கற்றுக்கொடுத்தவன் அவளின் தரகர் ராம்லால் மாது புனேவில் இருந்து வந்து அவளின் பணத்தை எல்லாம் எடுத்துப் போகிறான் என்று கேள்விப்பட்டபோது, அவளிடம் “எப்போதிலிருந்து அந்தத் தேவடியா மவன் உன் காதலனாக மாறினான். இது விசித்திரமான காதல் விவகாரம். தன் பையிலிருந்து சல்லிக்காசு செலவு செய்யாததோடு, உன்னோடு சந்தோஷமாகவும் இருந்து விட்டுப் போகிறான். இத்தோடு நிற்காமல் உன்னிடமிருந்து பணத்தையும் எடுத்துப் போகிறான். நான் இந்தத் தொழிலில் ஏழு வருஷங்களாக இருக்கிறேன். உன்னைப் போன்ற பெண்களின் பலவீனங்களை நான் முழுமையாக அறிவேன்” என்றான் ராம்லால். பிறகு, பம்பாயில் பத்து ரூபாயிலிருந்து நூறு ரூபாய் வரை பெண்களை ஏற்பாடு செய்து கொடுக்கும் ராம்லால், “என் பேச்சைக் கேள். முட்டாள் போல், பணத்தை எல்லாம் விரயம் ஆக்காதே. தாயோளி மவன் ஒரு நாள் நீ உடுத்தியிருக்கும் துணியைக் கூட எடுத்துச்சென்று விடுவான். கட்டிலின் காலுக்கடியில் ஒரு சின்ன பள்ளம் தோண்டி அதில் உன் பணத்தை வைத்துக்கொள். அவன் வந்தால், ‘மாது, சத்தியமாக இன்று காலையில் இருந்து சல்லிக் காசைக் கூடப் பார்க்கவில்லை. சாப்பாட்டிற்குக் கூட கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன், இரானி டீக்கடையிலிருந்து டீயும் பிஸ்கட்டும் வாங்கித் தா’ என்று சொல்!… புரிகிறதா? இப்ப எல்லாம் காலம் மோசமாக இருக்கும்மா. பாழாய்ப் போன இந்தக் காங்கிரஸ் மதுவிலக்குச் சட்டத்தைக் கொண்டு வந்து, நம் பிழைப்பைக் கெடுத்து விட்டது. உனக்கு ஒருவன் இல்லை என்றால் இன்னொருவன் என்று குடிக்க ஏதாவது கிடைக்கிறது. கடவுள் மீது சத்தியமாகச் சொல்கிறேன். உன் வீட்டில் காலி புட்டிகளைப் பார்க்கும் போதும், சாராயத்தின் வாசனையை நுகரும்போதும், நானும் உன்னைப்போல் வேசியாய் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பதுண்டு” என்றான்.
தன்னுடைய உடம்பில் மார்பகங்களைத்தான் சுகந்திக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு முறை ஜமுனா அவளிடம், ” இந்த உருண்டையான ஆப்பிளை அடியிலிருந்து முட்டுக் கொடுத்துக் கட்டிக்கொள். நீ பிரா அணிந்தால் அது நேராக நிற்க உதவும்” என்றாள். சுகந்தி சிரித்தாள். “ஜமுனா, நீ எல்லோரையும் உன்னைப்போலவே என்று நினைத்துக்கொள்கிறாய். பத்து ரூபாய்க்காக அவர்கள் உன் சதையையெல்லாம் ஈவு இரக்கம் இன்றிப் பிடுங்கி எடுக்க அனுமதிக்கிறாய். அது போலவே மற்றவர்களுக்கும் நடக்கிறது என்று நினைத்துக்கொள்கிறாய்… எவனாவது என்னிடம் புத்திசாலியாய் நடந்து கொள்ளப் பார்க்கட்டும்… நேற்று என்ன நடந்தது என்று உன்னிடம் சொல்ல வேண்டும்… இரவு இரண்டு மணிக்கு ராம்லால், ஒரு பஞ்சாபியை அழைத்து வந்தான். அவன் கட்டிலுக்கு வந்தவுடன் நான் விளக்கை அணைத்தேன்… நீ அவனைப் பார்த்திருக்க வேண்டுமே… அவன் பயந்த பயம்… என்னை நம்பு. அறை முழுக்க இருட்டானவுடன், அவனுடைய பந்தாவெல்லாம் காணாமல் போனது… நான் சொன்னேன்: ‘ஏன் எதுவும் செய்யமாட்டேன் என்கிறாய். இப்போது மணி மூன்றை நெருங்கிக்கொண்டிருக்கிறது. சீக்கிரத்தில் விடிந்துவிடும். சீக்கிரம்…’ அவன் சொன்னான்: ‘விளக்கு… விளக்கு…’ அவன் மிரண்டு போனதைப் பார்த்து, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. நான் சொன்னேன்: ‘நான் விளக்கைப் போடப் போவதில்லை…’ அப்புறம் அவனின் சதைப்பிடித்த தொடையைக் கிள்ளினேன். அவன் வலியால் குதித்தெழுந்து விளக்கைப் போட்டான். நான் உடனடியாக ஒரு துணியை எடுத்து என்னைச் சுற்றிக்கொண்டு கத்தினேன்: ‘பொறுக்கி, நீ செய்வது உனக்கே அசிங்கமாக இல்லை’; அவன் கட்டிலுக்கு வந்தான். நான் பாய்ந்தெழுந்து மறுபடியும் விளக்கை அணைத்தேன். அவன் மறுபடியும் பயம் கொள்ளத் தொடங்கினான். சத்தியமாகச் சொல்கிறேன், இரவு முழுக்க இப்படிச் சௌகரியமாகக் கழிந்தது… ஒரு கணம் விளக்கு எரிந்தது… ஒரு கணம் இருண்டு கிடந்தது…. ஒரு கணம் இருண்டு கிடந்தது… ஒரு கணம் விளக்கு எரிந்தது… டிராம் வண்டியின் போக்குவரத்துத் தொடங்கியவுடன் அவன் தன் டிரௌசரை அணிந்து கொண்டு வெளியேறினான். அந்தத் தேவடியாமகன் முப்பது ரூபாயைச் சூதாட்டத்தில் சம்பாதித்திருக்கணும், இல்லை என்றால் இந்த இழப்பை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொண்டிருக்க மாட்டான்… ஜமுனா நீ முட்டாள்… இது போன்ற மனிதர்களைக் கையாளுவதற்கு நான் நிறைய தந்திரங்களை வைத்திருக்கிறேன்’.
‘ சுகந்திக்குப் பல தந்திரங்கள் தெரியும் தான். அவளின் தோழிகள் ஒரு சிலருக்கு அதைச் சொல்லியும் இருக்கிறாள். உண்மையில், எல்லோரிடமும் அவள் அந்தத் தந்திரங்களைச் சொல்லியிருக்கிறாள். அதிகம் பேசாத மதிப்பிற்குரிய கனவான் வந்தால், அவனிடம் குறும்பாக நடந்து கொள், நிறுத்தாமல் பேசிக்கொண்டே இரு, அவனைக் கோபப்படுத்து; சீண்டிவிடு; அவனோடு விளையாடு… வந்தவனுக்குத் தாடியிருந்தால், உன் விரல்களை அதன் ஊடாகச் செலுத்தி ஓரிரு முடியைப் பிடுங்கிவிடு… பெரிய தொந்தியோடு ஒருத்தன் வந்தால் அதில் தாளம் தட்டு… அவன் எதையும் தொடங்குவதற்குச் சந்தர்ப்பமே கொடுக்காதே… அவன் சந்தோசமாய்ப் போய்விடுவான், நீயும் தப்பித்துக்கொள்வாய்… அமைதியான சுபாவம் கொண்டவன் தான் ரொம்பவும் ஆபத்தானவன்… சந்தர்ப்பம் கிடைத்தால் உன் எலும்புகளை உடைத்துவிடுவான்.”
சுகந்தி தன்னை வெளிப்படுத்திக் கொண்டது போல, அவ்வளவு ஒன்றும் புத்திசாலி இல்லை. அவள் குறைவான வாடிக்கையாளர்களைத் தான் கொண்டிருந்தாள். அத்தோடு எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய பெண். அதனாலேயே அவளுக்குத் தெரிந்த தந்திரங்கள் எல்லாம், அவளின் மண்டையிலிருந்து வயிற்றுக்கு இறங்கி வந்து, குழந்தையாய்ப் பெற்றெடுக்கப்பட்ட பின், வயிற்றில் பல கோடுகளைக் கொடுத்தன. இதை முதலில் அவள் பார்த்த போது, அவளின் வெறி பிடித்த நாய் அதனுடைய நகங்களால் உருவாக்கியது என்று நினைத்தாள். யாரேனும் அந்த நாயைக் கண்டு கொள்ளாமல் கடந்து சென்றால், அது, தான் அவமானப்படுத்தப்பட்டதை மறைத்துக்கொள்ள, தரையில் பிறாண்டத் தொடங்கும்.
சுகந்தியின் தனித்தன்மையில் அவளின் உணர்வுகளே பிரதானமாக ஆக்கிரமித்திருந்தன. எவனாவது ஒருவன் இனிமையாகப் பேசினால் போதும் அவள் உருகிவிடுவாள். அவளின் மூளை மட்டும், ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஆன உடல் ரீதியான உறவு என்பது மேம்போக்கானது என்று கருதியது. ஆனால் அவள் உடலின் மற்ற பகுதிகள் அதற்காக ஏங்கின. அவளின் கை, கால்கள் அசதியுறவேண்டும் என்றது – அந்த அசதி அவள் மீது தூக்கத்தைத் திணிக்க வேண்டும், ஆழமான தூக்கம், சந்தோஷத்தைக் கொடுக்கும் தூக்கம், உணர்வுகளை மறக்கடிக்க வைக்கும் தூக்கம், ஓரிடத்தில் இருப்பது போன்ற உணர்வையும், இல்லாதது போன்ற உணர்வையும் கொடுக்கக் கூடிய தூக்கம். இத்தகைய உணர்வில் தான் – இருப்பது போன்ற உணர்வும், இல்லாதது போன்ற உணர்வும், வான்வெளியில் மிதந்து கொண்டிருப்பது போலவும், சுற்றிலும் காற்று மட்டுமே சூழ்ந்திருப்பது போலவும் தோன்றும். அத்தகையச் சூழ்நிலையில் கழுத்து நெரிக்கப்படுவது கூட இன்பத்தைத் தரும்.
அவள் குழந்தையாய் இருந்தபோது, கண்ணாமூச்சி விளையாட்டில், அம்மாவின் பெரிய பெட்டிக்குள் ஒளிந்து கொள்வாள். விளையாட்டில் மாட்டிக்கொள்வோம் என்ற பயமும், பெட்டிக்குள் போதுமான காற்று இல்லாததால் மூச்சு அடைத்துக் கொள்ளும் என்ற பயமும் இணைந்து அவளின் இதயத்தை வேகமாக அடித்துக்கொள்ள வைக்கும். ஆனாலும் அந்த உணர்வு எவ்வளவு சந்தோசமானது!
சுகந்தி தன் வாழ்நாள் முழுக்க ஒரு பெட்டிக்குள்ளேயே காலம் கடத்த விரும்பினாள். அவளைக் கண்டுபிடிக்க முயலுபவர்கள், திரும்பத் திரும்பச் சுற்றி அவளைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். சில சமயங்களில் இவள் கண்டுபிடிக்கப்படுவாள். அவர்களைத் தேடி இவள் சுற்றிச் சுற்றி வருவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்வாள். கடந்த ஐந்து வருடங்களாக, அவள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை கண்ணாமூச்சி விளையாட்டைத் தவிர வேறெதுவும் இல்லை. சில சமயங்களில், இவள் எவரையோ எவரையோ கண்டுபிடித்தாள். சில சமயங்களில் எவரோ இவளைக் கண்டுபிடித்தார்கள். இப்படியே நாட்கள் நகர்ந்தன. அவள் சந்தோஷமாக இருந்தாள் – சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதால். ஒவ்வோர் இரவும் இவன் அல்லது அவன் என்று எவனோ ஒருவன் அவளின் பெரிய தேக்குக் கட்டிலில் அவளோடு படுத்திருந்தான். ஆண்களைக் கையாளுவதில் பல தந்திரங்கள் தெரியும் என்று அவள் பெருமைப்பட்டுக்கொள்வதை மீறியும், ஆண்களால் மோசமாக நடத்தப்பட்டதை அனுமதிக்க மறுக்கும் அவள் தீர்மானத்தை மீறியும், அவர்களை வியாபார ரீதியாகக் கையாளத் தெரியும் என்ற எண்ணத்தை மீறியும் அவள் எப்போதும் உணர்வுகளால் பலவீனப்படுத்தப்பட்டு, கவனிப்புக்காக ஏங்கும் பெண்ணாக மாறிவிடுவாள். ஒவ்வோர் இரவும் அவளின் பழைய மற்றும் புது வாடிக்கையாளர்கள் அவளிடம் சொல்லுவதுண்டு: ‘சுகந்தி! நான் உன்னைக் காதலிக்கிறேன்’. அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அவளுக்குத் தெரியும். இருந்தாலும் அவள் உருகிப்போய் அந்த மனிதன் உண்மையிலேயே தன்மீது காதல் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்வாள். காதல்…. எவ்வளவு அழகான சொல்… அதை உருக்கி, அதனை உடல் முழுக்கப் பூசிக்கொள்ள வேண்டும் என்றும், அது அவளின் உடலில் உள்ள ஒவ்வொரு தசை துவாரத்திலும் நுழைய வேண்டும் என்றும் நினைத்தாள். அல்லது அதனுள் குதித்து, தன்னை முழுமையாய் மூழ்கடித்துக்கொண்டு மூடியை மூடிவிட நினைத்தாள். சில சமயங்களில் இந்தக் காதல் கொள்ளும் உணர்வோ , அல்லது காதலிக்கப்படும் உணர்வோ தீவிரமடையும்போது, அந்த மனிதனை அள்ளி எடுத்துத் தன் மடியில் படுக்க வைத்து, தட்டிக்கொடுத்து, தாலாட்டுப் பாடி உறங்க வைக்க விரும்பினாள்…
அவளிடம் வரும் எந்த ஆணையும் காதல் கொள்ளும் அளவுக்கு, அவளிடம் அந்த உணர்வு அத்தனை தீவிரத்தோடு ஆக்கிரமித்திருந்தது. அந்தக் காதலை அவள் தக்கவைத்துக்கொள்வாள். எதிரே சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் அந்த நான்கு ஆண்களின் புகைப்படங்கள், அந்த உணர்வை, அவள் தக்கவைத்துக் கொண்டிருப்பதால் தான்.
அவள் நல்லவள் என்ற உணர்வு அவளின் இதயத்தில் எப்போதும் நிலைத்து நின்றது. ஆனால் ஆண்கள் ஏன் நல்லவர்களாக இல்லை? இதற்கு அவளால் எப்போதும் விடை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு முறை கண்ணாடியில் அவள் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்தபோது. திடீரென்று இப்படிச் சொன்னாள்: “சுகந்தி… இந்த உலகம் உன்னை நல்லமுறையில் நடத்தவில்லை”.
இந்த ஐந்து வருடகாலம் – பகலும், இரவும் நிறைந்த இந்த ஐந்து வருடகாலம், அவளின் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாதது. இந்தக் காலங்கள் அவள் ஏங்கிய சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை என்றாலும், இப்போது இருப்பது போலவே, மிச்சவாழ்க்கையும் போக வேண்டும் என்று விரும்பினாள். பணத்தின் பின்னால் போவதற்கு நான் மாளிகை ஏதும் கட்ட வேண்டாம்.’ என்று அவளுக்குள் சொல்லிக்கொள்வாள். அவளுக்கான விலை பத்து ரூபாய். அதில் இரண்டரை ரூபாய் தரகர் ராம்லாலுக்கு அவனின் பங்காய்ச் சென்றுவிடும். மிச்சமிருக்கும் ஏழரை ரூபாய் அவளின் தேவைகளுக்குப் போதுமானதாய் இருந்தது. அவள் ஒண்டிக் கட்டைதானே. மாது புனேயில் இருந்து வந்தால் – ராம்லால் வார்த்தைகளில் சொல்வதென்றால், அவள் மீது படையெடுத்து வந்தால், அவனுக்காகப் பத்துப் பதினைந்து ரூபாய் செலவு செய்தாள். இந்தப் பணத்தை அவள் செலவு செய்யக் காரணம், அவனிடம் இருந்த ஏதோ ஒன்று அவளைச் சுற்றி வளைத்துக் கிடந்தது. அதையேன் மறைக்க வேண்டும்? அதை ஏன் அனுபவிக்கக் கூடாது?… சுகந்தி மாதுவை முதன் முறையாகச் சந்தித்தபோது, “இதுபோல பேரம் பேசுவதற்கு உனக்கு அவமானமாக இல்லையா? என்னிடம் நீ எதற்கு பேரம் பேசுகிறாய் என்று உனக்குத் தெரியுமா? நான் ஏன் உன்னிடம் வந்தேன்? கேவலம்… பத்து ரூபாய், அதுவும் அதில் இரண்டரை ரூபாய் நீ சொல்வது போல தரகருக்குப் போகிறது. மிச்சமிருப்பது ஏழரை ரூபாய். அந்த ஏழரை ரூபாய்க்கு உன்னால் கொடுக்க முடியாத ஒன்றைக் கொடுக்கிறேன் என்று உறுதியாய்ச் சொல்கிறாய். என்னால் எடுத்துக்கொள்ள முடியாத ஒன்றை எடுத்துக்கொள்ள நான் வந்திருக்கிறேன். எனக்கு இப்போது ஒரு பெண் தேவைப்படுகிறாள், ஆனால் உனக்கு இப்போது ஒரு ஆண் தேவைப்படுகிறானா? எனக்கு எந்தப் பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் ஒரு ஆணாக என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா? உனக்கும் எனக்கும் இடையே உள்ள உறவுதான் என்ன? ஒன்றுமில்லை. ஒன்றுமேயில்லை… உனக்கும் எனக்கும் இடையில் குலுங்கிக் கொண்டிருப்பது, வெறும் பத்து ரூபாய்தான் – அதுவும் அதில் இரண்டரை ரூபாய், தரகருக்குப் போக மிச்சம் இங்கே அங்கே என்று சிதறிக் கிடக்கும். இந்தப் பத்து ரூபாய் குலுங்கிக்கொண்டிருக்கும் சத்தத்தை நீயும் கேட்கிறாய், நானும் கேட்கிறேன். நீ ஒன்றை நினைத்துக்கொண்டிருக்கிறாய், நான் ஒன்றை நினைத்துக்கொண்டிருக்கிறேன். உன்னுடைய தேவையை நான் பூர்த்தி செய்வது போலவும், என்னுடைய தேவையை நீ பூர்த்தி செய்வது போலவும். நாம் ஏன் ஏதாவது செய்யக்கூடாது? நான் புனேவில் ஏட்டாக இருக்கிறேன். நான் மாதம் ஒருமுறை மூன்று அல்லது நான்கு நாட்கள் வருவேன்… இந்தத் தொழிலை விட்டுத் தொலை… உன் தேவைகளுக்கு நான் பணம் அனுப்புகிறேன்… இந்த அறைக்கு வாடகை எவ்வளவு?” என்றான்.
மாது இன்னும் நிறையப் பேசினான். இவை எல்லாம் சுகந்தியிடம் மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்த, ஒரு கணம் ஏட்டின் மனைவியாகத் தன்னைக் கற்பனை செய்து பார்த்தாள். அவளிடம் பேசி முடித்த பிறகு, மாது அறை முழுக்கத் தாறுமாறாய்ச் சிதறிக்கிடந்த பொருட்களை ஒழுங்குப்படுத்தத் தொடங்கினான். சுகந்தியின் கட்டிலுக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த நிர்வாணப்படத்தை, அவளைக் கேட்காமலேயே கிழித்து எறிந்தான். அவளிடம், ”சுகந்தி இதுபோன்ற படங்கள் இங்கு இருப்பதை நான் அனுமதிக்க மாட்டேன்…இந்தத் தண்ணீர் பானையைப் பார், எவ்வளவு அழுக்காக இருக்கிறது… அப்புறம் இந்தக் கந்தல்… நீயே பார் எவ்வளவு நாற்றம் அடிக்கிறது, இதையெல்லாம் தூக்கி வெளியே போடு… அப்புறம் உன் தலைமுடியைப் பார், எவ்வளவு அழுக்காய் இருக்கிறது… அப்புறம்… அப்புறம்…” என்றான்.
மூன்று மணிநேரம் ஒருவரோடு ஒருவர் பேசிய பிறகு, சுகந்தியும் மாதுவும் மிகவும் நெருக்கமானார்கள். ஏட்டைப்பலவருடங்களாக அறிந்தது போல், சுகந்தி உணரத் தொடங்கினாள். இதுவரை அழுக்கடைந்த தண்ணீர்ப்பானையையோ, நாற்றம் அடித்த கந்தல் துணிகளையோ, நிர்வாணப்படத்தையோ எவனுமே கவனித்தது இல்லை. அத்தோடு இதுவரை இதுதான் அவளின் வீடு என்றும், இதை வீடு போல் வைத்திருக்க முடியும் என்றும் எவனுமே அவளுக்கு உணரவைத்தது கிடையாது. ஆண்கள் வந்தார்கள், அழுக்கேறிய படுக்கையைக் கூட கவனியாமல் வெளியேறினார்கள். யாரும் அவளிடம், இங்க பார் சுகந்தி, இன்று உன் மூக்கு ரொம்பச் சிவந்து கிடக்கிறது. ஜாக்கிரதையாக இரு. இல்லை என்றால் சளி பிடிக்கும்… இரு… நான் போய் உனக்கு ஏதாவது மருந்து வாங்கி வருகிறேன்’ என்று சொன்னது கிடையாது. மாது எவ்வளவு நல்லவனாக இருக்கிறான்… எவ்வளவு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்கிறான். சுகந்தி முதல் முறையாக அவனைச் சந்தித்தபோது, கண்டித்ததை நினைவுகூர்ந்தாள்…. மாது தனக்குத் தேவை என்று அவள் உணரத் தொடங்கினாள். இருவரும் இதனாலேயே நண்பர்கள் ஆனார்கள்.
புனேவிலிருந்து மாதத்திற்கு ஒருமுறை என்று மாது வந்து போகும்போது, “இங்க பார் சுகந்தி, நீ உன் தொழிலை மறுபடியும் தொடங்கினால் நீயும் நானும் நண்பர்களாக இருக்க முடியாது. இனி ஒரே ஒரு முறை நீ எந்த ஆணையாவது இந்த அறைக்குள் நுழையவிட்டால், உன் மயிரைப் பிடித்திழுத்து இந்த வீட்டை விட்டு வெளியே தூக்கியெறிவேன். நான் புனே போய்ச் சேர்ந்தவுடன், உன் மாதச் செலவுக்கான பணத்தை மணியார்டர் மூலம் அனுப்பிவைக்கிறேன்… ஆமாம், இந்த அறைக்கு எவ்வளவு வாடகை? மாது புனேவிலிருந்து பணமும் அனுப்பியதில்லை, சுகந்தி தன் தொழிலை நிறுத்தியதும் இல்லை. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று இருவருக்கும் தெரிந்து தான் இருந்தது. சுகந்தி மாதுவிடம், ‘நீ என்ன முட்டாள் தனமாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாய்? ஒரு நயாபைசா நீ எனக்குக் கொடுத்திருக்கிறாயா?’ என்று கேட்டதும் இல்லை , மாதுவும் சுகந்தியிடம், ‘உனக்கு நான் பணம் ஏதும் அனுப்பாதபோது எங்கிருந்து இந்தப் பணம் எல்லாம் உனக்குக் கிடைக்கிறது? என்று கேட்டதுமில்லை. இருவரும் பொய்யர்கள். இருவரும் நம்பத் தகுந்தது போன்ற உலகில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனாலும் சுகந்தி சந்தோஷமாக இருந்தாள். தங்கத்தை அணியக்கூடாது என்று விதிக்கப்பட்டவர்கள், கவரிங் நகைகள் தானே அணிய முடியும்?
அந்தச் சமயத்தில் சுகந்தி பெரும் அசதியில் உறங்கிக் கொண்டிருந்தாள். அவளின் தலைமேல் தொங்கிக்கொண்டிருந்த விளக்கை அவள் அணைக்க மறந்ததால் இன்னும் எரிந்து கொண்டிருந்தது. அதன் பிரகாசமான ஒளி அவளின் கண்களைத் தாக்கியது. ஆனாலும் அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
அறையின் கதவு தட்டப்பட்டது…. இரவு இரண்டு மணிக்கு யாராக இருக்கும்? சுகந்தியின் காதுகளில் அந்தச் சத்தம் மிக மெல்லியதாகப் பாய்ந்தது. கதவு தட்டப்படும் சத்தம், அதிகமானதுடன் திடுக்கிட்டு எழுந்து கொண்டாள். இரண்டு மது வகைகளும், அவளின் பற்களில் சிக்கியிருந்த மீன் துண்டுகளும் ஒன்று சேர்ந்து, அவளின் எச்சிலை அடர்த்தியாகவும் புளித்து துர்நாற்றமெடுப்பதாகவும் ஆக்கியிருந்தது. அது அவளின் உதட்டோரத்தில் வழிந்தது. அவள் அணிந்திருந்த லுங்கியில் அதைத் துடைத்துக்கொண்டு, தன் கண்களைக் கசக்கிக்கொண்டாள். அவள் கட்டிலில் தனித்துக்கிடந்தாள். குனிந்து கட்டிலுக்கடியில் பார்த்தாள். அவளின் சொறிபிடித்த நாய் உலர்ந்து போன செருப்புகள் மீது தலைவைத்து, கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஒன்றைப் பார்ப்பது போல முகத்தை வைத்து உறங்கிக் கொண்டிருந்தது. பச்சைக்கிளியும் உறங்கிக்கொண்டிருந்தது – அதன் சிறகுகளில் தலையை மறைத்துக்கொண்டு. மறுபடியும் கதவு தட்டப்பட்டது. சுகந்தி படுக்கையில் இருந்து எழுந்தாள். அவளுக்குப் படுமோசமான தலைவலி. பானையில் இருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து வாயைக் கொப்பளித்தாள். பிறகு ஒரு முழுக் குவளை தண்ணீர் குடித்து விட்டு, கதவைக் கொஞ்சம்போல் திறந்தாள்.
“ராம்லால்…!”
கதவை இத்தனை நேரம் தட்டியதால் சோர்வுற்ற ராம்லால், “பிணம் போலவா தூங்கிக்கொண்டிருப்பாய்? நான் ஒரு மணி நேரமாய்க் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறேன். உனக்கு என்னதான் அப்படி இழவு நடந்தது?” என்று எரிச்சலோடு கத்தினான். பிறகு தன் குரலைத் தாழ்த்தி, “உள்ளே யாரும் இல்லை என்று நினைக்கிறேன்” என்றான். சுகந்தி தனியாக இருப்பதாகச் சொன்னவுடன் ராம்லால் மறுபடியும் தன் குரலை உயர்த்தினான். “பிறகு ஏன் கதவைத் திறக்கவில்லை ?… இது தான் உன் எல்லை …. அப்படி என்ன தூக்கம் உனக்கு? ஒவ்வொருத்தியிடமும் நான் இரண்டு மணிநேரம் செலவு செய்தால், நல்ல வியாபாரம் தான் நான் செய்ய முடியும்… என்னை ஏன் அப்படிப் பார்த்துக்கொண்டு நிற்கிறாய்? போய்ப் புடவையை – பூப்போட்ட அந்தப் புடவையைக் கட்டிக்கொண்டு வா. கொஞ்சம் பவுடரும் போட்டுக்கொள்… நீ என்னோடு வந்தாக வேண்டும். வெளியே சேட்டு உனக்காக அவரின் காரில் காத்துக் கொண்டிருக்கிறார்… சீக்கிரம் கிளம்பு”
சுகந்தி பிரம்பு நாற்காலியில் அசதியோடு உட்கார்ந்து கொள்ள, ராம்லால் அவளின் தலையைக் கண்ணாடிக்கு முன்னால் சீவி விடத் தொடங்கினான்.
சுகந்தி சிறு மேசை பக்கம் தன் உடலை நீட்டி, அதில் இருந்த தைலத்தை எடுத்தாள். மூடியைத் திறந்து, “ராம்லால்! எனக்கு இன்று உடம்பு சரியில்லை” என்றாள்.
ராம்லால் சீப்பை அலமாரியில் தூக்கிப் போட்டு, அவள் பக்கம் திரும்பி, “ஏன் இதை நீ முன்பே சொல்லவில்லை?” என்று கேட்டான்.
தைலத்தை முன் நெற்றியிலும், நெற்றிப்பொட்டிலும் தேய்த்துக் கொண்டு, ராம்லால் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதைச் சரி செய்தாள். “அது இல்ல ராம்லால்…. உடம்பு ஒரு மாதிரி இருக்கிறது. நேற்றிரவு நிறையக் குடித்துவிட்டேன்”
ராம்லால் வாயில் எச்சில் ஊறியது. “ஏதாவது மிச்சமிருந்தால் என்னிடம் கொடு நானும் அது எப்படி இருக்கிறது என்று பார்க்கிறேன்.”
சுகந்தி தைலத்தை மீண்டும் சிறிய மேசையில் வைத்தாள். “கொஞ்சம் மிச்சமிருந்திருந்தால், இவ்வளவு மோசமான தலைவலியில் நான் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருக்க மாட்டேன்… இங்க பாரு ராம்லால், வெளியே கார்ல உட்கார்ந்திருக்கிற அந்த மனுஷன. அவனை ஏன் இங்கு அழைத்து வரக் கூடாது?” ராம்லால் பதில் தந்தான் : “முடியாது. அவரால் இங்கு வர முடியாது. அவர் மிகவும் கண்ணியமான மனிதர். இந்தச் சந்தில் காரை நிறுத்தக்கூட அவர் மிகவும் பயப்பட்டார். உன் உடையை மாற்றிக்கொண்டு, என்னோடு சந்து முனைக்கு வா… எல்லாம் சரியாகிப் போகும்”
இது வெறும் ஏழரை ரூபாய் சம்பந்தப்பட்டது. இந்த நிலையில் – இவ்வளவு மோசமான தலைவலியில், சுகந்தி நிச்சயமாக இந்த ஏற்பாட்டிற்குச் சம்மதித்திருக்க மாட்டாள். ஆனால் அவளுக்கு அவசரமாகப் பணம் தேவைப்பட்டது. பக்கத்து அறையில் இருந்த ஒரு மதராஸி பெண்ணின் கணவர் மீது கார் ஒன்று ஏறிவிட்டது. அந்தப் பெண் அவசரமாக மெட்ராஸ் போய் ஆக வேண்டும். புனேயில் இருந்து வருபவனைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அவனிடமிருந்து கடன் வாங்கி, அவள் புறப்பட ஏற்பாடு செய்வதாகவும் நேற்றுதான் உறுதி அளித்திருந்தாள்.
மாது புனேவிலிருந்து வரும் சமயம் தான். ஆனால் பணத்திற்குச் சுகந்திதான் ஏற்பாடு செய்தாக வேண்டும். அதனால் அவள் எழுந்து உடைகளை மாற்றிக்கொள்ளத் தொடங்கினாள். ஒரு சில நிமிடங்களில் அவள் பூப்போட்ட புடவையை அணிந்து கொண்டு, கன்னத்தில் கொஞ்சம் போல் கிரீம் பூசிக்கொண்டு, கழுத்தில் பவுடர் போட்டுக்கொண்டாள். பிறகு கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு ராம்லாலோடு படியிறங்கினாள்.
சிறு நகரங்களில் இருக்கும் பஜார் தெருக்களைக் காட்டிலும் சற்று அகலமான அந்தச் சந்து, முற்றிலும் அமைதியாய் இருந்தது. கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த காஸ் விளக்குகள், வழக்கத்தை விட மங்கலான வெளிச்சத்தைக் கொடுத்தன. போர் காரணமாக விளக்குகளின் பிரகாசம் கொஞ்சம் மங்கலாக்கப்பட்டிருந்தது. அந்த மங்கலான வெளிச்சத்தில், அந்தச் சந்தின் மறுகோடியில் ஒரு கார் நின்று கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.
இந்த இரவின் கடைசிப் பகுதியில், முற்றிலுமான அமைதியில், காரின் நிழலைப் பார்த்த போது தனக்கு இருந்த தலைவலி அந்தப் பகுதி முழுவதுக்கும் பரவிவிட்டது போல் சுகந்தி உணர்ந்தாள். பிராந்தியும், உள்ளூர் சாராயமும் கலந்து காற்றும், புளித்த துர்நாற்றத்தை வீசிக் கொண்டிருப்பதாக உணர்ந்தாள். ராம்லால் முன்னே போய் காரில் அமர்ந்திருந்த அந்த மனிதனிடம் ஏதோ பேசினான். அதே சமயத்தில் சுகந்தியும் காருக்கு அருகாமையில் வர, அவளைக் காண்பித்து, “இதோ இவள் தான் ஃபர்ஸ்ட் கிளாஸ் பொண்ணு . சமீபத்தில் தான் தொழிலில் சேர்ந்தாள்” என்று சொல்லி, அவள் பக்கம் திரும்பி, “இந்தப் பக்கமாக வா சுகந்தி. சேட் உன்னைக் கூப்பிடுகிறார்” என்றான். சுகந்தி முன்னே வந்தாள், தன் புடவை முந்தானையின் ஒரு முனையைத் தன் விரல்களில் சுற்றிக்கொண்டு, கார் கதவருகே நின்றாள். சேட் அவன் கையிலிருந்த டார்ச் வெளிச்சத்தை அவளின் முகத்தை நோக்கிப் பாய்ச்சினான். ஒரு நிமிடம் டார்ச்சிலிருந்து பாய்ந்த ஒளி, போதையேறியிருந்த அவளின் கண்களைக் குருடாக்கியது. பிறகு டார்ச்விளக்கு அணைக்கப்படும் சத்தம் கேட்டது. மீண்டும் அங்கு இருட்டு பரவியது. அதோடு சேட்டின் வாயிலிருந்து ‘ந்நோ!’ என்ற சத்தம் வெளியேறியது. காரின் இன்ஜின் இயக்கப்பட்டு, ஒரு சில வினாடிகளுக்குள் அது தன் முழு வேகத்தை எடுத்தது.
சுகந்தி என்ன நடந்தது என்று சிந்திப்பதற்குள் கார் வேகமாகப் புறப்பட்டுப் போனது. டார்ச் ஒளியின் பிரகாசம் இன்னும் அவளின் கண்களில் இருந்தது. அவளால் சேட்டின் முகத்தைக் கூட ஒழுங்காகப் பார்க்க முடியவில்லை. என்னதான் நடந்தது? அவளின் காதுகளில் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்த ‘ந்நோ!’ சத்தம் என்ன சொல்கிறது?… அப்போது ராம்லாலின் குரல் கேட்டது. “உன்னைப் பிடிக்கவில்லை… சரி, நான் கிளம்ப வேண்டும்… இரண்டு மணி நேரம் கொஞ்சமும் பிரயோசனம் இல்லாமல் போனது…”
இதைக் கேட்டவுடன், அவளின் கைகால்கள் மற்றும் மண்டையில் வினோதமான உணர்வு பாய்ந்ததை உணர்ந்தாள்.
அந்தக் கார் எங்கே?.. அந்தச் சேட்டு எங்கே?. அப்போ அந்த ‘ந்நோ’க்கு என்னைப் பிடிக்கவில்லை என்று அர்த்தம்..” கெட்ட வார்த்தைகள் அவளின் அடி வயிற்றிலிருந்து புறப்பட்டு உதடுகளில் சிக்கிக்கொண்டது. அவளால் யாரைத் திட்ட முடியும்? அந்தக் கார் போய்விட்டது. அதன் பின்பகுதியின், சிவப்பு விளக்கு கருமையில் முழுகிக்கொண்டிருந்தது. காரின் சிவப்பு விளக்குகள், எரிந்து கொண்டிருக்கும் கரித்துண்டாய் அவளின் இதயத்தைத் துளைத்துக் கொண்டிருப்பது போல உணர்ந்தாள். சுகந்திக்குக் கத்த வேண்டும் போல் இருந்தது…. ‘உன் காரை நிறுத்து சேட்டு… ஒரே ஒரு நிமிடத்திற்கு ‘ ஆனால் அந்தச் சேட்டு போய்விட்டான்… ரொம்ப தொலைவிற்கு. கடவுள் அவனைச் சபிக்கட்டும்.
சுகந்தி வெறிச்சோடிக் கிடந்த பஜாரில் தனித்து நின்று கொண்டிருந்தாள். மிக முக்கியமான விசேஷங்களுக்கு மட்டுமே அவள் அணிந்து கொள்ளும் அந்தப் பூப் போட்ட புடவை, இரவுக் காற்றில் படபடத்துக்கொண்டிருந்தது. சுகந்திக்கு இது எரிச்சலைக் கொடுத்தது. அதன் சத்தம் சேட்டின் ‘ஓ…!’ போல இருந்தது. அவளுக்குப் புடவையைச் சுக்கு நூறாகக் கிழித்துப் போடவேண்டும் போல் தோன்றியது.
சுகந்தி கன்னத்தில் கிரீமும், உதட்டில் சாயமும் பூசியிருந்தாள். இதை எல்லாம் செய்வது தன்னை அழகாகக் காட்டிக் கொள்ளத்தானே என்று உணர்ந்த போது, அவமான உணர்வால் தாக்கப்பட்டு, அவளுக்கு வியர்த்துக் கொட்டியது. இந்த அவமான உணர்வை எதிர்கொள்ள அவள் நினைத்தாள். அந்தத் தேவடியா மகனுக்காக நான் என்னை அழகு படுத்திக்கொள்ளவில்லை. நான் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்னை அழகு படுத்திக்கொண்டேன்…. இது என் பழக்கம். நான் மட்டும் இல்லை, எல்லோரும் தங்களை அலங்கரித்துக் கொள்கிறார்கள். ஆனால் இந்த இரவு நேரத்தில்?.. அதுவும் இரண்டு மணிக்கு?… அப்புறம் தரகர் ராம்லால்?… பஜார்… அப்புறம் கார்… டார்ச் விளக்கின் ஒளி…’. இவை எல்லாம் அவள் நினைவில் இருந்தது. திட்டுத் திட்டாக ஒளி அவள் கண்களில் மிதந்து கொண்டிருந்தது. காற்றின் ஒவ்வோர் அசைவிலும் கார் இஞ்ஜின் இயக்கப்படும் சத்தத்தைக் கேட்டாள்.
அவள் தன்னை அலங்கரித்துக்கொண்டபோது நெற்றியில் போட்டுக்கொண்ட தைலம் ஏறக்குறைய மறைந்து விட்டது. இப்போது வியர்வைத்துளிகளோடு மெல்லிய இழைகளாய் மீண்டும் நெற்றியில் தோன்றியது. சுகந்தி அவளுடைய நெற்றியை, வேறு எவருடையதோ போல் உணர்ந்தாள். வியர்வைத்துளிகள் நிரம்பிய அவளது நெற்றியில் காற்று படர்ந்த போது அவள் யாரோ குளிர்ச்சியான சரோடினைத் துண்டாக்கி அவள் நெற்றியில் ஒட்டிவைத்தது போல் உணர்ந்தாள். அவளுக்குத் தலைவலி இன்னுமிருந்தது. ஆனால் அவளுள் எழுந்த சிந்தனைகளும் அவை எழுப்பிய சத்தங்களும் அதை அழுத்தியது. சுகந்தி பலமுறை அவளின் சிந்தனைகளுக்கு அடியில் சிக்கிக்கொண்ட தலைவலியை வெளியே எடுக்க முயன்றாலும் தோற்றுப்போனாள். அவளுக்கு, அவளின் கைகால்கள், வயிறு என்று எல்லாம் வலியை உணரவேண்டும் என்று விரும்பினாள். இதயம் சுருங்கும் அளவிற்கு வலியின் தீவிரம் வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அவளின் இதயம் விரிந்தது. இழவு… அந்தச் சேட்டின் ‘ஓ..!’ அவளின் இதயத்தில் சுருங்கிக்கொண்டும் விரிந்து கொண்டும் இருந்தது.
அப்போது தன் அறையை நோக்கி நடக்கத் தொடங்கிய சுகந்தி, சட்டென்று நின்றாள். அவள் மீண்டும் சிந்திக்கத் தொடங்கினாள் : ‘சேட்டுக்கு என்னுடைய முகத்தைப் பிடிக்கவில்லை என்று தரகர் ராம்லால் நினைக்கிறான். இல்லை ராம்லால் என் முகத்தைப் பற்றி ஏதும் சொல்லவில்லை, அவன் சொன்னது, ‘அவருக்கு உன்னைப்பிடிக்கவில்லை. அவனுக்கு என் முகத்தைப் பிடிக்கவில்லை… அதனால் என்ன… எனக்குக் கூடத்தான் சில ஆண்களின் முகம் பிடிக்கவில்லை . அமாவாசை இரவு அன்று வந்தவன் அவன் எவ்வளவு கோரமாய் இருந்தான். நான் அவனை வெறுப்போடு பார்க்கவில்லையா? அவன் கட்டிலில் படுக்க வந்தபோது அவனிடமிருந்து விலக வேண்டும் என்று நினைக்கவில்லையா? எனக்கு ஏறக்குறைய குமட்டிக் கொண்டு வரவில்லையா? உண்மைதான். ஆனால் சுகந்தி நீ அவனைத் திருப்பி அனுப்பவில்லை. காரில் வந்த சேட்டு உன் முகத்தில் காறி உமிழ்ந்துள்ளான். ‘ந்நோ..!’ இந்த ந்நோ…!’க்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்?… இது தான் : ஓணான் போன்ற முகம், அதுவும் தலைக்கு மல்லிகைப்பூ மணம் கொண்ட எண்ணெயைத் தடவிக் கொண்டு! எப்படிப்பட்ட முகம். என்ன ஒரு எதிர்பார்ப்பு! ராம்லால் அந்த ஓணானை எங்கிருந்து பொறுக்கி வந்தாய்? இந்தப் பெண்ணையா நீ இவ்வளவு புகழ்ந்து கொண்டிருந்தாய் ? இவளுக்கா பத்து ரூபாய்?… ஒரு கோவேறு கழுதையே மேலானது…’
சுகந்தி சிந்தித்துக்கொண்டிருக்க. அவளின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வெப்பம் வெளியேறிக் கொண்டிருந்தது. சில கணங்களில் அவள் மீதே எரிச்சல் கொண்டாள். வேறு சில கணங்களில் இப்படி நடு ராத்திரி இரண்டு மணிக்கு இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வைத்த ராம்லால் மீது கோபம் கொண்டாள். பிறகு திடீரென்று இருவரையும் குறை சொல்ல முடியாது என்று நினைத்து சேட் மீது எரிச்சல் கொண்டாள். இந்த எண்ணத்தில் அவளின் கண்கள், கைகால்கள் என்று உடலில் உள்ள ஒவ்வோர் அங்கமும் சேட்டை எங்காவது காண முடியுமா என்று வளைந்து கொடுத்தது. அவளுள் என்ன நடந்ததோ அது மறுபடியும், ஒரே ஒரு முறை மீண்டும் நடக்க வேண்டும் என்ற சங்கடமான ஏக்கம் தோன்றியது.. அவள் மறுபடியும் அதேபோல் நடத்தப்பட்டால்… வெறிபிடித்த பூனை நகங்களைக் கொண்டு அந்த சேட்டின் தலை முடியைப் பிடித்துக் காரில் இருந்து வெளியே இழுத்துப்போட்டு அசதியுறும் வரை உதைக்கத் தொடங்கி… சக்தியெல்லாம் இழந்து, அசதியில் அமர்ந்து அழத் தொடங்கி…..
சுகந்தியின் அசாத்தியக் கோபமும், இயலாமையும் மூன்று நான்கு பெரிய நீர்த்துளிகளை அவளின் கண்களில் இருந்து வெளிக் கொணர்ந்தது. சுகந்தி அவளின் கண்களைப் பார்த்துக் கேட்டாள், “எதற்காக அழுகிறாய்? அப்படி என்ன நடந்தது என்று இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கிறாய்?”
அவள் தன் கண்களைப் பார்த்துக் கேட்ட இந்தக் கேள்வி, அந்தக் கண்ணீர்த் துளிகளில் சில கணங்கள் நீந்திக்கொண்டிருக்க, அந்தக் கண்ணீர்த்துளியோ, கண் இமையில் தொங்கிக்கொண்டிருந்தது. சுகந்தி இந்தக் கண்ணீர்த்துளி ஊடாக, மறைந்து போன சேட்டின் கார் நின்று கொண்டிருந்த வெற்றிடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். கர்…. கர்… கர். இந்தச் சத்தம் எங்கிருந்து வந்தது? சுகந்தி சுற்றிலும் பார்த்தாள். எவரும் அங்கில்லை . ஆங்….! அந்தச் சத்தத்தை எழுப்பியது அவளின் இதயம் தான் என்றாலும், ஏனோ கார் இஞ்ஜின் இயக்கப்படுவதாக நினைத்தாள்… ஏன் அவளின் இதயம் – இதுவரை ஒழுங்காக இயங்கிக்கொண்டிருந்தது, திடீரென்று விரிசல் விழுந்த இசைத்தட்டில் சிக்கிக்கொண்ட ஊசி போல, கர்.கார்…’ என்ற சத்தத்தை எழுப்புகிறது? ‘அன்று இரவு வானிலிருந்த நட்சத்திரங்கள் எண்ணப்பட்டே கழிந்தது’ என்பது, நட்சத்திரங்கள்… நட்சத்திரங்கள்… என்று இழுபட்டது போன்று.
வானம் நட்சத்திரங்களால் நிரம்பியிருந்தது. சுகந்தி நிமிர்ந்து பார்த்து, “எவ்வளவு அழகாக இருக்கிறது” என்றாள். அவளின் சிந்தனையை வேறு எதிலாவது திசை திருப்ப வேண்டும் என்று விரும்பினாள். ஆனால் அவள் ‘அழகாக இருக்கிறது’ என்று சொன்னவுடன், அவள் நினைத்தாள்… ‘நட்சத்திரங்கள் அழகாக இருக்கின்றன. ஆனால் நீ கோரமாய் இருக்கிறாய். சற்று நேரத்திற்கு முன் எவனோ ஒருத்தன் அப்படிச் சொன்னதை நீ மறந்து விட்டாயா?’
‘சுகந்தி! நீ ஒன்றும் பார்க்க அவ்வளவு அசிங்கமாக இல்லை ‘. இந்த எண்ணம், இந்த ஐந்து வருட காலங்களாக அவளைக் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டது, பிம்பங்களாக ஒன்றன்பின் ஒன்றாக அவளுள் தோன்றியது. உண்மைதான், இதில் எந்தச் சந்தோசமும் இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன் எந்தக் கவலைகளும் இல்லாமல் பெற்றோருடன் வாழ்ந்து வந்தபோது, அவள் இருந்தது போல் இன்று இல்லை தான். ஆனாலும் அவள் ஒன்றும் கோரமாக மாறிவிடவில்லை. ஒரு கணப்பொழுது ஆணின் கவனத்தைக் கவரக்கூடிய எல்லாப் பெண்களைப்போலத்தான் இருந்தாள். அவளைப் பொறுத்தவரை ஓர் ஆண், ஓரிரு இரவுகளுக்காக ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கும் எல்லாத் தகுதிகளும் அவளிடம் இருந்தன. அவளின் உடலில் இன்னும் இளமை இருந்தது. அவளின் அங்கங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் இருந்தன. சில சமயங்களில் அவள் குளிக்கும் போது அவளின் தொடையைப் பார்த்துக் கொண்டாள். அவை திடமானதாகவும், உருண்டையாகவும் சிறப்பாக உருக்கொண்டும் இருந்தன. அவள் நல்ல இயல்புகளைக் கொண்டிருந்தாள். ஒரே ஒரு வாடிக்கையாளர் கூட அவளிடம் திருப்தி இல்லாமல் திரும்பிப் போனது கிடையாது. அவள் இளகிய மனதோடும் அந்நியோன்னியமாகவும் பழகினாள். போனமுறை கிறிஸ்துமஸ் பண்டிகையில் அவள் கோல்பேட்டாவில் இருந்த போது, ஓர் இளைஞன் அவளிடம் வந்தான். காலையில் எழுந்து அவன் போட்டுக்கொள்ள தன் கோட்டை எடுத்த போது அதில் அவனின் பர்ஸ் இல்லாததைக் கண்டான். அவன் நிலைகுலைந்து போனான். அவன் தன் விடுமுறையைக் கழிக்க ஹைதராபாத்திலிருந்து பம்பாய்க்கு வந்திருக்கிறான். இப்போது திரும்பிப் போவதற்குப் பணம் இல்லை. சுகந்தி அவன் மீது இரக்கம் கொண்டு அவன் கொடுத்த பத்து ரூபாயை அவனிடமே திருப்பிக் கொடுத்தாள்.
‘என் மீது என்ன தவறு இருக்கிறது?’ சுகந்தி இந்தக் கேள்வியைப் பார்த்த எல்லாவற்றிடமும் கேட்டாள் – மங்கலான கேஸ் விளக்குகள், இரும்புத் தூண்கள், நடைபாதையில் உள்ள சதுரமான கற்கள், தெருவில் குவிந்து கிடந்த பெயர்த்தெடுக்கப்பட்ட கற்கள். எல்லாவற்றையும் வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாகப் பார்த்தாள். பிறகு அவள் மீது தொங்கிக் கொண்டிருக்கும் வானத்தை நிமிர்ந்து பார்த்தாள். ஆனால் அதனிடமிருந்தும் பதிலேதும் கிடைக்கவில்லை.
பதில் அவளுக்குள்ளேயே இருந்தது. அவள் கோரமாய் இல்லை. பார்க்கச் சுமாரானவள் என்று அவளுக்கே தெரியும். ஆனால் இதை வேறு யாரேனும் ஊர்ஜிதப்படுத்த வேண்டும் என்று ஏங்கினாள்… யாரேனும்… யாரேனும் ஒருவன்.. அவளின் தோளில் கைவைத்து, “யார் சொன்னது சுகந்தி நீ அசிங்கமானவள் என்று, நீ அழகாக இருக்கிறாய்” என்று சொல்ல ஏங்கினாள். யாராவது தன்னைப் புகழ வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறேன் என்று கேட்டுக்கொண்டாள். இதற்கு முன் இது போன்ற தேவையை, இவ்வளவு தீவிரமாக அவள் உணர்ந்ததே கிடையாது. ஏன் அவள் அழகாக இருக்கிறாள் என்று, உயிரற்ற பொருட்கள் கூட ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பார்க்கிறாள்? ஏன் அவளின் உடலில் ஒவ்வொரு துவாரமும் ‘தாயாக’ மாறுகிறது? ஏன் இந்தப் பூமியில் உள்ள அனைத்தையும் ஒரு தாயைப்போல அள்ளி எடுத்துத் தன் மடியில் போட்டுக்கொள்ள நினைக்கிறாள்? ஏன் அந்த கேஸ் விளக்கைத் தாங்கிக்கொண்டிருக்கும், இரும்புத் தூணைத் தட்டிக்கொடுத்து, அதன் சில்லிட்ட உடலில் தன் முகத்தைப் பதித்து, அதன் குளிர்ச்சியை உறிஞ்சிக்கொள்ள நினைக்கிறாள்?…..
சிறிது நேரம் கழித்து மங்கிய கேஸ் விளக்குகளும், இரும்புத் தூண்களும், நடைபாதையில் உள்ள சதுரமான கற்களும், இந்த இரவில் அசைவற்றுக் கிடந்த எல்லாமும் அவள் மீது இரக்கம் கொண்டு பார்ப்பதாக உணர்ந்தாள். கணக்கிலடங்கா ஓட்டைகளைக் கொண்ட, அடர்த்தியான பழுப்பு நிறத் துணியைப் போல, அவளின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த வானம் கூட அவளைப் புரிந்து கொண்டது என்று நினைத்தாள். மினுமினுக்கும் நட்சத்திரங்கள் கூட தன்னைப் புரிந்து கொண்டதாக நினைத்தாள். ஆனால் அவளுள் இன்னும் எது அவளின் எலும்புகளைக் குடைந்துகொண்டிருக்கிறது? ஏன் அவளுள் – மழைக்கு முந்திய வான்வெளியில் காணப்படுவது போன்ற, நிலையற்ற தன்மை காணப்படுகிறது? அவளுள் புகைந்து கொண்டிருப்பது எல்லாம், அவளின் உடலில் உள்ள ஒவ்வொரு துவாரங்கள் வழியாக வெளியேறிவிட வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அது எப்படிச் சாத்தியமாகும்? எப்படி?…
சந்தின் ஒரு மூலையில் சிவப்பு நிறத் தபால் பெட்டி அருகே சுகந்தி நின்று கொண்டிருந்தாள். தபால் பெட்டியின் திறந்த வாயில் தொங்கிக் கொண்டிருந்த இரும்பு நாக்கு காற்று சற்று வேகமாக அடித்தபோது அசைந்து கொடுத்தது. திடீரென்று சுகந்தி கார் போன திசையைப் பார்த்தாள். ஆனால் அங்கு பார்ப்பதற்கு எதுவுமே இல்லை… அந்தக் கார் திரும்ப வரவேண்டும் என்று எவ்வளவு ஆவலோடு இருந்தாள்.
ஆனால்….. “அது ஒன்றும் வரவேண்டாம்” அவள் முணுமுணுத்தாள். “அது எக்கேடு கெட்டும் ஒழியட்டும். நான் ஏன் என்னை இப்படி இம்சைப் படுத்திக்கொள்ள வேண்டும்? அறைக்குப் போய் நிம்மதியாய்ப் படுத்து உறங்கலாம். இதனால் எல்லாம் என்ன கிடைத்துவிடப்போகிறது. தேவையில்லாத தலைவலி” ”சுகந்தி போ, வீட்டிற்குப் போ…” அவளுக்குள் சொல்லிக் கொண்டாள். ‘சில்லென்று ஒரு குவளை தண்ணீர் குடி, தைலம் தடவிக்கொண்டு படுக்கப் போ.. உனக்கு நன்றாகத் தூக்கம் வரும். பிறகு எல்லாம் சரியாகிவிடும். சேட்டும் அவனின் காரும் நரகத்திற்குப் போகட்டும்’
இந்த எண்ணம் குளிர்ச்சியான நீரைக் கொண்டிருந்த குளத்தில் குளித்தது போன்று சுகந்தியை இலகுவாக்கியது. இது அவளுக்குப் பிரார்த்தனை முடித்தபின் கிடைக்கும் உணர்வு போல் இருந்தது. அவள் வீட்டை நோக்கி நடந்தாள். இப்போது மனதில் உள்ள கவலைகளை எல்லாம் இறக்கி வைத்தது போல உணர்ந்ததால், அவளின் நடை அவ்வப்போது தடுமாறியது.
அவள் தன் வீட்டை நெருங்கியவுடன், நடந்தவையெல்லாம் வலியாய்த் திரும்ப வந்து அவளின் உடல் முழுக்க ஊடுருவியது. அவளின் நடை மீண்டும் இறுக்கமானது. அவள் வீட்டில் இருந்து அழைக்கப்பட்டதும், பஜாருக்குச் சென்றதும், டார்ச் விளக்கு ஒளி மூலமாய்க் கன்னத்தில் அறையப்பட்டு அவமானப்படுத்தப் பட்டதும், மீண்டும் அவளை மிரட்டத் தொடங்கியது. ஆட்டை வாங்க வந்தவன் அவனின் விரல்களால் ஆட்டுக்கு முடி மட்டும் இருக்கிறதா அல்லது சதையும் இருக்கிறதா என்று பரிசோதிப்பது போல் நடத்தப்பட்டதாக நினைத்தாள். அந்த சேட்… கடவுளே சுகந்தி அவனைச் சபிக்க விரும்பினாள். ஆனால் இப்போது சபிப்பதால் என்ன பயன்?’ என்று நினைத்தாள். அவன் என் முன்னே நிற்க என்னுடைய வசவுகள் அவனின் உடலில் உள்ள எல்லாத் துவாரங்களிலும் நுழைந்தால் அது வேடிக்கையாக இருக்கும். அவன் வாழ்நாள் முழுக்கச் சங்கடப்படும் அளவிற்கு நிச்சயம் நான் ஏதாவது சொல்லியிருப்பேன்…
நான் என் ஆடைகளைக் களைத்தெறிந்துவிட்டு அவன் முன்னே நிர்வாணமாக நின்று இப்படிச் சொல்லியிருப்பேன். இதை எடுத்துக்கொள்ளத்தானே நீ வந்தாய், பணம் ஏதும் கொடுக்காமல் நீ எடுத்துக்கொள். ஆனால் நான் எதுவாக இருந்தாலும் என்னுள் மறைந்து கிடக்கும் எதையும் உன் அப்பனால் கூட விலை கொடுத்து வாங்க முடியாது.’ விதவிதமாய்ப் பழிவாங்கும் உணர்வுகள் சுகந்தியின் மண்டைக்குள் ஏறத்தொடங்கியது. ஒரு முறை மட்டும், ஒரே ஒரு முறை, அந்த சேட். அவளால் அந்த சேட்டை சந்திக்க முடிந்தால் அவனைப் பழி வாங்குவதற்கு எதையும் செய்யத் தயாராக இருந்தாள். இல்லை , அது…. பிறகுதான் சேட்டைச் சந்திப்பது முடியாத காரியம் என்று உணரத் தொடங்கி, சிறு சிறு கெட்ட வார்த்தைகளைக் கொட்டித் திருப்திப்பட்டுக்கொண்டாள்… அந்தச் சிறு வசவுகள் அவளின் மூக்கின் மேல் ஈயைப்போல உட்கார்ந்து கொள்ளும் – திரும்பத் திரும்பப் பறந்து வந்து உட்கார்ந்து கொள்ளும். இத்தகைய போராட்டங்களைக் கொண்ட மனநிலையோடு, அவளது அறையிருந்த இரண்டாவது தளத்தை அடைந்தாள்.
அவளின் இரவிக்கைக்குள் இருந்த சாவியை எடுத்துக் கதவைத் திறக்கக் கையை நீட்டினாள். சாவி காற்றில் நகர்ந்தது. கதவில் பூட்டு இல்லை. சுகந்தி கதவை உள் நோக்கித் தள்ளினாள். மெல்லியதான சத்தம் கேட்டது. உள்ளிருந்து யாரோ தாழ்ப்பாளைத் திறந்தார்கள். கதவு திறக்கப்பட சுகந்தி உள்ளே போனாள். தன் தாடியின் பின்னே சிரித்துக்கொண்டே, மாது கதவைத் தாழிட்டான். “கடைசியாக என் அறிவுரையை நீ ஏற்றுக்கொள்கிறாய். காலையில் நடப்பது உடலுக்கு மிகவும் நல்லது. ஒவ்வொரு நாளும் காலையில் நடக்க வேண்டும். சோம்பேறித் தனத்தை ஒழித்துக்கட்ட இது உதவும். நீ அடிக்கடி குறைப்பட்டுக்கொள்ளும் உன் முதுகுவலியைக் குறைக்கவும் இது உதவும். குறைந்தது விக்டோரியா பூங்கா வரை நீ கண்டிப்பாக நடக்க வேண்டும்… சரியா?”
சுகந்தி பதிலேதும் சொல்லவில்லை. மாதுவும் அவளின் பதிலுக்கு ஆர்வத்தைக் காட்டவில்லை. உண்மையில் மாது எப்போது என்ன பேசினாலும், சுகந்தி அதில் கலந்து கொள்ள வேண்டுமென்று அவன் எதிர்பார்த்ததே கிடையாது. அவர்கள் ஏதாவது பேசிக் கொள்வதற்குக் காரணம், ஏதாவது பேசிக்கொள்ள வேண்டுமே என்பதற்காகத்தான். மாது பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். நாற்காலியில் தலை வைக்கும் இடத்தில், அவனின் எண்ணெய்த் தலை பெரிய கறையை ஏற்படுத்தி இருந்தது. கால்மேல் கால் போட்டுக் கொண்டு தன் விரல்களால் தாடியைத் தடவிக் கொடுத்தான்.
சுகந்தி கட்டிலில் உட்கார்ந்த பிறகு, மாதுவிடம், “இன்று உனக்காகக் காத்திருந்தேன்” என்றாள். மாது ஆச்சரியத்தோடு, “காத்திருந்தாயா? நான் இன்று வருவது உனக்கு எப்படித் தெரியும் ” என்று கேட்டான். ஒட்டியிருந்த சுகந்தியின் உதடுகள் விரிந்து அசதி கொண்ட சிரிப்பை வெளிப்படுத்தியது. “நேற்றிரவு என் கனவில் உன்னைப் பார்த்தேன். நான் எழுந்து வந்து பார்த்த போது, எவரும் இங்கு இல்லை. அதனால் வெறுமனே நடைபோய் வரலாம் என்று நினைத்து… அப்புறம்…”
மாது மகிழ்ச்சியோடு, “அதான் நான் வந்து விட்டேன். காதலர்களின் இதயங்கள் ஒன்றாகத் துடிக்கும் என்று ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். நீ எப்போது கனவு கண்டாய்?”
சுகந்தி பதில் தந்தாள் : “சுமார் நாலு மணிக்கு ”
மாது நாற்காலியில் இருந்து எழுந்து சுகந்தி பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டான். “நீயும் என் கனவில் வந்தாய்” என்றான். “சரியாக இரண்டு மணிக்கு நீ என் அருகில் நின்று கொண்டிருந்தாய்… பூப் போட்ட புடவையை உடுத்திக்கொண்டு… ஆங்… இதே புடவை… உன் கையில்…
இப்போது உன் கையில் என்ன இருக்கிறது….ஆமாம்… நீ ஒருபை முழுக்க நாணயங்களை வைத்திருக்கிறாய்…நீ அந்தப் பையை என் மடியில் வைத்துச் சொன்னாய், மாது நீ ஏன் கவலைப்படுகிறாய்! இந்தப் பையை எடுத்துக்கொள்… என் பணமாக இருந்தால் என்ன, உன் பணமாக இருந்தால் என்ன… என்ன வித்தியாசம் இருக்கிறது’ சுகந்தி நான் சத்தியமாகச் சொல்கிறேன், உடனடியாக எழுந்து டிக்கெட் வாங்கி இங்கு நேராக வந்துவிட்டேன். நான் உன்னிடம் அதை எப்படிச் சொல்வேன் சுகந்தி… நான் ரொம்பவும் இக்கட்டான நிலையில் இருக்கிறேன்… எந்தக் காரணமும் இல்லாமல் நான் ஒரு வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளேன்… என்னிடம் மட்டும் இருபது ரூபாய் இருந்தால்… இன்ஸ்பெக்டருக்கு லஞ்சமாகக் கொடுத்து இந்தச் சிக்கலில் இருந்து வெளியே வந்துவிடுவேன்… உனக்கு அசதியாக இருக்கிறதா, ஏன் படுத்துக்கொள்ளேன்… நான் உன் காலைப் பிடித்து விடுகிறேன்… நடந்து பழக்கமில்லை என்றால் நிச்சயமாக அசதியாக இருக்கும்… இப்படிப் படுத்துக்கொள், உன் காலை என் பக்கமாக நீட்டிக்கொள்..” சுகந்தி படுத்தாள். இரண்டு கைகளையும் மடித்துத் தலைக்கடியில் வைத்துக்கொண்டாள். பிறகு அவளுக்குச் சொந்தமில்லாத குரலில் பேசத் தொடங்கினாள் : “மாது! உன்னை வழக்கில் சிக்க வைத்த அந்தப் பொறுக்கி யாரு? உன்னைச் சிறைக்கு அனுப்பும் சாத்தியங்கள் ஏதும் இல்லை என்று நம்புகிறேன். ஏன் இருபது, முப்பது ரூபாய்? இது போன்ற சூழ்நிலையில் ஐம்பது அல்லது நூறு ரூபாய் இன்ஸ்பெக்டருக்குக் கொடுத்தால் எல்லாம் இன்னும் எளிதாக முடியும்… இனியும் நீ கவலைப்படாதே நான் ஒன்றும் அசதியோடு இல்லை. காலைப் பிடிப்பதை நிறுத்திவிட்டு, முழு கதையையும் என்னிடம் சொல்…. வழக்குப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் என் இதயம் இன்னும் வேகமாக அடித்துக் கொள்கிறது… நீ எப்போது திரும்பிப் போவதாக இருக்கிறாய்?”
சுகந்தியின் மூச்சுக்காற்றில் மாது, மதுவின் நாற்றத்தை உணர்ந்தான். இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்து, “மதியம் இரயிலில் நான் புறப்பட வேண்டும். சாயந்திரத்திற்குள் நான் இன்ஸ்பெக்டருக்கு ஐம்பது அல்லது நூறு கொடுத்தாக வேண்டும். அதற்கு மேல் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நான் நினைக்கிறேன் ஐம்பதே போதுமானது.”
“ஐம்பது!” சுகந்தி மிக அமைதியாக எழுந்து சுவரில் தொங்கிக் கொண்டிருந்த நான்கு புகைப்படங்களை நோக்கி மெதுவாக நகர்ந்தாள். இடது பக்கத்தில் இருந்த மூன்றாவது படம் மாதுவின் படம். பெரிய பெரிய பூக்கள் போட்ட திரைச்சீலைக்கு முன்பு இருந்த நாற்காலியில் அவன் அமர்ந்திருந்தான். அவனின் கைகள் தொடையின் மேல் வைக்கப்பட்டிருந்தன. ஒரு கையில் ரோஜாப்பூ ஒன்றைப் பிடித்திருந்தான். பக்கத்திலிருந்த சிறிய ஸ்டூலில் இரண்டு தடித்தப் புத்தகங்கள் இருந்தன. இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட போது அவனுள் தான் புகைப்படம் எடுக்கப்படப்போகிறோம் என்ற எண்ணம், ‘ஓ… என்னைப் படம் பிடிக்கப்போகிறார்கள்… என்னைப் படம் பிடிக்கப்போகிறார்கள்’ என்று அவனின் கை கால்கள் மூலம் சொல்வது போல் இருந்தது. விரிந்திருந்த அவனின் கண்கள், அவன் சௌகரியமாக இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. சுகந்தி உரக்கச் சிரித்தாள். அவளின் அந்தச் சிரிப்பு குறி பார்த்துத் துளைப்பது போல் இருந்ததால், மாது மிகவும் சங்கடப்பட்டுப்போனான். கட்டிலில் இருந்து எழுந்து சுகந்தி அருகில் சென்று, “சுகந்தி யாருடைய படம் உன்னை இப்படிச் சிரிக்க வைத்தது?” என்று கேட்டான். சுகந்தி, இடது பக்கத்திலிருந்த முதல் படத்தைக் காட்டினாள், அது முனிசிபாலிட்டி சுகாதார இன்ஸ்பெக்டரின் படம். ” இதுதான்… முனிசிபாலிட்டி இன்ஸ்பெக்டருடையது… அவனுடைய கோரமான முகத்தைப் பார்…. அவன் சொல்வான், மகாராணி ஒரு காலத்தில், அவன் மீது காதல் கொண்டாளாம்… மகாராணி இந்தக் கோரமான முகத்திற்கு ஏங்கியிருப்பாள்தான்…” சுகந்தி அந்தப் புகைப்படத்தைப் பிடித்து இழுத்தாள். அவள் பலம் கொண்டு இழுத்த வேகத்தில் ஆணியும் சுவரில் இருந்து பெயர்ந்து வந்தது. சுகந்தி அந்தப் படத்தை ஜன்னலுக்கு வெளியே விட்டெறிந்ததைப் பார்த்தபோது, மாதுவால் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் போனது. இரண்டாவது மாடியிலிருந்து விட்டெறியப்பட்ட அந்தப் படத்தின் கண்ணாடி நொறுங்கும் சத்தம் கேட்டது. சுகந்தி சொன்னாள், “ இராணி, குப்பை பொறுக்க வரும்போது குப்பைகளோடு இந்த இராஜாவையும் சேர்த்து எடுத்துப் போவாள்”
பிறகு கத்தியைக் கூர்ப்படுத்துவது போன்று கிழித்தெடுக்கும் சிரிப்பு, சுகந்தியிடமிருந்து சீறி வெளிப்பட்டது. மாது சிரமப்பட்டுப் புன்னகைத்தான். பிறகு உரக்கச் சிரிக்கத் தொடங்கினான். “ஹி… ஹி… ஹி…”
சுகந்தி இரண்டாவது படத்தையும் பிடுங்கி ஜன்னலுக்கு வெளியே விட்டெறிந்தாள். ” இந்த ராஸ்கல் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறான்” என்றாள். “கோரமான முகத்தோடு எவரும் இங்கு இருக்கக் கூடாது … நான் சொல்வது சரிதானே மாது?'” மறுபடியும் மாது சிரமப்பட்டுப் புன்னகைத்து, பிறகு சிரிக்கத் தொடங்கினான் “ஹி… ஹி… ஹி…” டர்பன் அணிந்துகொண்டிருந்தவனின் புகைப்படத்தை சுகந்தி ஒருகையால் அகற்றி, மறு கையை, மாதுவின் படத்தை நோக்கி நீட்டினாள். அந்தக் கை தன்னை நோக்கி நீள்வது போல் நினைத்து மாது சுருங்கிப் போனான். ஒரு நொடியில் ஆணியோடு சேர்ந்து இரண்டு புகைப்படங்களும் அவள் கையில் இருந்தன. உரக்கச் சிரித்து அவள் சொன்னாள்: ‘ஓ..!’ பிறகு இரண்டு படங்களையும் ஜன்னலுக்கு வெளியே விட்டெறிந்தாள். படங்கள் தரையோடு மோதி, கண்ணாடி தூளாகும் சத்தம் கேட்டு, மாது அவனுள் ஏதோ உடைந்து போனது போல் உணர்ந்தான். வலுக்கட்டாயமாகச் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு அவனால் சொல்ல முடிந்ததெல்லாம் இவ்வளவுதான் : “சரியாகச் செய்தாய் சுகந்தி. எனக்கும் அந்த படத்தைப் பிடிக்கவே இல்லை”
சுகந்தி மெதுவாக மாதுவை நோக்கி நகர்ந்து, “அந்தப் படத்தை உனக்கும் பிடிக்கவில்லை இல்லையா? நான் கேட்கிறேன், எவரேனும் உன்னை விரும்புவதற்கு உன்னிடம் என்ன இருக்கிறது? உன்னுடைய தடித்த இந்த மூக்கா, அல்லது முழுவதுமாக முடியைக் கொண்டிருக்கும் இந்த நெற்றியா… இந்த அகன்ற மூக்கு துவாரம்… நேராகப் பார்க்க முடியாத திருட்டுக் கண்கள், உன் மூச்சின் துர்நாற்றம், உன் உடம்பில் உள்ள அழுக்கு…. உனக்கும் அந்தப் படத்தைப் பிடிக்கவில்லை , இல்லையா? ‘ஓ …!” உனக்கு எப்படிப் பிடித்திருக்கும்… அது உன் எல்லாக் குறைகளையும் மறைத்திருந்தது… இப்போது உலகம் இப்படித்தான் இருக்கிறது…. எவரெல்லாம் தங்களின் குறைகளை மறைக்கின்றார்களோ அவர்கள் எல்லோரும் தண்டிக்கப்படுவார்கள்.”
மாது பின்னுக்கு நகர்ந்தான். சுவரோடு அவன் முதுகு ஒட்டிக் கொண்டபின், குரலை உயர்த்தி, ” இங்க பார் சுகந்தி, நீ உன் தொழிலை மறுபடியும் தொடங்கிவிட்டாய் என்று நினைக்கிறேன். இப்போது நான் உனக்குக் கடைசி முறையாகச் சொல்கிறேன்..’
அதே தொனியில் சுகந்தி அவனின் பேச்சைத் தொடர்ந்தாள்:
“நீ மறுபடியும் உன் தொழிலைத் தொடங்கினால், நாம் நண்பர்களாக இருக்க முடியாது. இந்த அறைக்குள் எந்த ஆணாவது நுழைந்தால், நான் உன் தலைமுடியைப் பிடித்து இழுத்து வெளியே போடுவேன்… இந்த மாதத்திற்கான செலவுக்கு நான் புனே போய்ச் சேர்ந்தவுடன் பணம் அனுப்புகிறேன் – மணியார்டர் மூலமாக….” மாது பிரமித்துப் போய்க் கிடந்தான். சுகந்தி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். “நான் உன்னிடம் சொல்கிறேன், இந்த அறைக்கு வாடகை பதினைந்து ரூபாய். என்னுடைய கூலி பத்து ரூபாய்… அதில் இரண்டரை ரூபாய் தரகருக்குப்போய்விடும் என்று உனக்குத் தெரியும். எனக்குக் கிடைப்பது ஏழரை ரூபாய். இந்த ஏழரை ரூபாய்க்கு, நான் உனக்குக் கொடுக்க முடியாததைக் கொடுப்பதாக உறுதியளிக்கிறேன். உன்னால் எடுத்துக்கொள்ள முடியாததை, எடுத்துக்கொள்ள நீ வந்திருக்கிறாய்… நம்மிடையேயான உறவு என்ன… எப்படிப் பார்த்தாலும் ஏதும் இல்லை. நம்மிடையே இந்தப் பத்து ரூபாய்தான் குலுங்கிக் கொண்டிருக்கிறது… அதனால் நாம் ஒன்று சேர்ந்தோம். உனக்கு நான் தேவை, எனக்கு நீ தேவை… முன்னர் பத்து ரூபாய் நமக்கிடையே குலுங்கிக்கொண்டிருந்தது… இப்போது ஐம்பது ரூபாய் குலுங்கிக் கொண்டிருக்கிறது. அது குலுங்கும் சத்தத்தை நீயும் கேட்கிறாய், நானும் கேட்கிறேன்… பார், உன் தலை எப்படிக் கலைந்திருக்கிறது…”
பிறகு சுகந்தி தன் விரல்களால், மாது அணிந்திருந்த தொப்பியை எடுத்து விட்டெறிந்தாள். இதை மாதுவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் அதிகாரத்தோடு, “சுகந்தி!” என்று கத்தினான். சுகந்தி அவனின் சட்டைப்பையிலிருந்து கைக்குட்டையை எடுத்து முகர்ந்து பார்த்துக் கீழே விட்டெறிந்தாள். ” இந்தக் கந்தலைப் பார், என்ன துர்நாற்றத்தைக் கொடுக்கிறது… அதை எடுத்து வெளியே விட்டெறி…”
மாது கத்தினான்: “சுகந்தி!”
சுகந்தி கடுமையான குரலில், “என்ன இழவுக்குடா இங்க வந்த – தேவடியா பையா? உனக்கு ஐம்பது ரூபாய் கொடுக்க உன்னைப் பெற்றுப் போட்டவளா இங்கு இருக்கிறாள்? இல்லை நீ ரொம்ப அழகான, இளமையோடு ஆன வாலிபன் என்ற எண்ணத்தில், நான் உன் மீது காதல் கொண்டுள்ளேன் என்று நினைத்தாயா… பொறுக்கி, நீ என்னை அதிகாரம் செய்யப் பார்க்கிறாய். நான் என்ன உன் அடிமையா? பிச்சைக்கார நாயே, நீ உன்னை என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்? நான் கேட்கிறேன், உன்னைப்பற்றி நீ என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய். நீ என்ன பிக்பாக்கெட்டா இல்லை திருடனா?. இந்த நேரத்திற்கு ஏன்டா இங்கு வந்தாய்… நான் போலீசைக் கூப்பிடவா? புனேவில் வழக்கு இருக்கலாம், இல்லாமலும் போகலாம், ஆனால் நான் இங்கு ஒன்றைக் கொடுக்கிறேன்.”
மாது பயத்தால் உறைந்து போனான். அடங்கிய குரலில் அவனால் சொல்ல முடிந்தது எல்லாம் இதுதான் : “உனக்கு என்ன ஆயிற்று சுகந்தி”
”அதைக் கேட்க நீ யாருடா நாயே… இப்பவே வெளியே போ… இல்லை என்றால் ”
இதுவரை காய்ந்து போன செருப்பில் தலைவைத்துத் தூங்கிக் கொண்டிருந்த சொறிநாய், சுகந்தி போட்ட சத்தத்தில் விழித்துக் கொண்டது. மாது பக்கம் திரும்பி குரைக்கத் தொடங்கியது. சுகந்தி உரக்கச் சிரிக்கத் தொடங்கினாள். மாது பெரும் அச்ச உணர்வு தன்னைப் பீடித்திருப்பதை உணர்ந்தான். அவனின் தொப்பியை எடுக்கக் குனிந்தான். சுகந்தி, “எடுக்காதே” என்று கர்ஜித்தாள். “அது அங்கேயே இருக்கட்டும். போ… நீ புனே போய்ச் சேர்ந்தவுடன், அதை மணியார்டரில் அனுப்பிவைக்கிறேன்” என்றாள். பிறகு பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து மீண்டும் உரக்கச் சிரிக்கத் தொடங்கினாள். அவளின் சொறிபிடித்த நாய், குரைத்து மாதுவை அறையை விட்டு வெளியேற்றியது. பிறகு தன் வாலை ஆட்டிக்கொண்டு வந்த அது சுகந்தியின் காலடியில் அமர்ந்து, அவள் மீது தன் காதைத் தேய்க்கத் தொடங்கியது. சுகந்தி இந்த உலகிற்குத் திரும்பி வந்தாள். இது வரை அவள் அனுபவித்திராத மயான அமைதி அவள் அறையில் நிலவியது. எங்கும் வெறுமை சூழ்ந்திருப்பது போல – இரயில் தன் பயணிகளை எல்லோரையும் வெவ்வேறு நிறுத்தத்தில் இறக்கி விட்டு வெறுமையாய் திரும்புவதுபோல, உணர்ந்தாள். சுகந்தி இந்த வெறுமையைத் தாங்கிக் கொள்ள முடியாது என்று நினைத்தாள். பிரம்பு நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்து, அந்த வெறுமையை அகற்ற முயன்றாள். அவளால் முடியவில்லை. அவளின் மண்டையைப் பல எண்ணங்களால் நிரப்ப முயன்றாள். ஆனால் அவை, குழாயில் போய்க் கொண்டிருப்பது போன்று ஒரு கணத்தில் உள்ளே நுழைந்து மறுகணத்தில் வெளியேறியது. அவளின் சிந்தனையை வேறு எதற்கும் திசை திருப்ப முடியாமல் போனபோது, தன் சொறிபிடித்த நாயை, எழுந்து அள்ளி எடுத்துக்கொண்டாள்.
கட்டிலில் அந்தச் சொறிபிடித்த நாய் அவள் அருகில் படுத்திருக்க அவள் உறங்கிப்போனாள்.
ஆசிரியரின் அனுமதி இன்றி இந்தக்கதையை முழுவடிவில் இங்கே கொடுத்தமைக்கு நான் வருந்துகிறேன். ஆனாலும் இந்தக்கதையை பிரசுரிப்பதன் மூலமாக வாசகர்கள் விலை கொடுத்து முழு புத்தகத்தையும் வாங்குவார்கள், அதன் மூலமாக ஆசிரியர் அவர்களுக்கு நன்மையே நடக்கும் என்ற எண்ணத்தில் தான் இங்கே முழுக்கதையும் கொடுத்திருக்கிறோம்.