தண்ணீர் பிரச்சனை இன்று அனைவருக்குமான பிரச்சனையாக மாறிவிட்டது. கிராமம், நகரம் என்ற பாகுபாடு ஏதுமின்றி இந்தப்பிரச்சனை இருக்கிறது. இது வெறும் தனிப்பட்ட பிரச்சனையாக மட்டுமல்லாமல் உறவுகளுக்குள்ளும் சில மாற்றத்தை ஏற்படுத்திவிட்டு போகிறது. அதை விரிவாக விவரிக்கிறது அசோகமித்திரன் எழுதிய தண்ணீர் கதை.
எதார்த்த எழுத்துக்களை எழுதுவதில் வல்லமை மிக்க சிலரில் முக்கியமானவர் அசோகமித்திரன். அசோகமித்திரன் அவர்கள் அந்தரங்கமானதொரு தொகுப்பு, கரைந்த நிழல்கள், எரியாத நினைவுகள் என பல நாவல்களை எழுதியுள்ளார். அசோகமித்திரன் எழுதிய தண்ணீ நாவலுக்கு இதிலே முக்கியமானதொரு இடம் உண்டு. நீங்கள் இந்த நாவலை வாசிக்கும் போது இது தண்ணீர் பிரச்சனை தொடர்பான நாவல் போல தோன்றலாம். ஆனால் இந்த நாவல் மனித மனங்களில் ஆழமாக புதைந்துள்ள உணர்வுகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. சாதாரண மக்களிடம் உள்ள தவிப்பு, கோபம், தந்திரம், மிருகத்தனமான சுயநலம், இவற்றுடன் தாராள குணமும் மேன்மையும் தென்படுவதை நாம் உணரலாம்.
புத்தகத்தின் பெயர் : தண்ணீர்
எழுத்தாளர் : அசோகமித்திரன்
விலை : ரூ 123
எனக்குத் தெரிந்து 1948 இல் இருந்தே சென்னையில் தண்ணீர் ஒரு கவலைப்பட வேண்டிய பொருள் தான். தனித்தனி வீடுகள், கிணறுகள். ஆனால் தண்ணீர் குடிக்கும்படியாக இருக்காது. ஆதலால் கார்ப்பரேஷன் குழாய் தண்ணீரை நம்பித்தான் சென்னைவாசிகள் அனைவரும் இருந்தார்கள். தெருக்குழாய்கள் பல இருந்தன. அவற்றில் எந்நேரமும் தண்ணீர் வரும். தண்ணீருக்கென்று யாரும் தனியாக செலவு செய்தது கிடையாது. குழாய் தண்ணீரை நேரடியாகவே பயன்படுத்துவார்கள். நானே சிறுவனாக இருந்தபோது குழாயடியில் உள்ளங்கையை குவித்துக்கொண்டு தண்ணீர் குடித்து இருக்கிறேன். ரயிலில் வெளியூர் போவதாக இருந்தால்தான் ஒரு கூஜாவில் தண்ணீர் எடுத்துப்போவார்கள். வாழ்க்கையில் உன்னதமானதெல்லாம் இலவசம் என்று ஒரு பழமொழி அன்று உண்டு. அன்று அது உண்மை.
தண்ணீர் நூல் குறித்து அசோகமித்திரன் அவர்க்ளின் குறிப்பு…..
முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்புதான் தண்ணீர் வரி விதிக்கக்கூடியதாகவும் விலை கொடுக்க வேண்டியதாகவும் மாறத் தொடங்கிற்று. இந்த மாற்றம் மிக மெதுவாக வந்தது. இது எளிதில் புலப்படவில்லை. உண்மையில் அன்று சென்னை மக்கள் அனுபவித்த பல இன்னல்கள் இந்த மாற்றம் வந்து கொண்டிருப்பதை உணராதது தான். தண்ணீர் விநியோகமும் ஒழுங்குப்படவில்லை. இன்று சென்னை நகரில் குடிசைவாசிகள் உள்படத் தண்ணீருக்கு கட்டணம் ஏதாவது ஒரு வகையில் கட்ட வேண்டியிருக்கிறது. கூரையிட்ட வீடுகளில் ஒரு குடும்பம் நூறில் இருந்து ஆயிரம் வரை மாதாமாதம் தண்ணீருக்கே செலவழிக்க வேண்டியிருக்கிறது.
பத்து மாடி, பன்னிரண்டு மாடிகளில் வசிக்கும் செல்வந்தர்கள் மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் தண்ணீர் வசதிக்காக ஏராளமாகச் செலவழிக்க வேண்டியிருக்கிறது.
தண்ணீர் நாவல் இதெல்லாம் பற்றியல்ல. ஆனால் இவற்றுக்கான அறிகுறிகள் கொண்டதுதான். இதெல்லாம் நான் திட்டமிட்டு எழுதவில்லை. ஊர் பெயர் தெரியாத ஒரு பெண் குடத்தை வைத்துக்கொண்டு அலைவதை திரும்பத் திரும்பப் பார்த்ததன் விளைவாகத்தான் கதை எழுதப்பட்டது.
இந்த 2006 ஆம் ஆண்டில் இந்தத் தண்ணீர் நாவலுக்கு எப்படிப் பொருத்தம் தேடுவது? தண்ணீர் மூலம் இருக்க முடியாது. ஆனால் இந்தக் கதையிலுள்ள நெருக்கடிகள் வேறு வேறு பொருள்களுக்காகவும் காரணங்களுக்கவும் நிகழ்கின்றன. நிர்பந்தங்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. முயற்சி, வெற்றி, தோல்வி, நிராசை, இன்னமும் வாழத்தான் வேண்டுமா என்ற கேள்வி எழுப்பும் தருணங்கள் இருந்து கொண்டுதான் உள்ளன.
Asokamitran Thaneer PDF Download
தண்ணீர் கதை பற்றி….
ஆசிரியர் கூறியபடி இந்த நூல் தண்ணீர் பிரச்சனையை மையப்படுத்தியது அல்ல. மனிதர்களின் பல்வேறுபட்ட உணர்வுகளை நம்மிடம் கடத்திட பல்வேறு கதாபாத்திரங்களை பயன்படுத்தி இந்த நாவலை எழுதி இருக்கிறார். ஜமுனா, சாயா, பாஸ்கரன் ஆகியோரின் வாழ்வியலை சுற்றி நகரும் இந்தக்கதையில் தண்ணீர் பிரச்சனையை பல கோணங்களிலும் அசோகமித்திரன் விவரித்து நம்மிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். சோகம், ஆணாதிக்கம், கனவு என பல உணர்வுமிக்க கதாபாத்திரங்கள் இந்தக்கதைக்கு வழு சேர்க்கின்றன.