மகளிர் தினம் முடிந்த அடுத்த நாளே அஸ்வினி என்னும் கல்லூரி படிக்கும் இளம்பெண் அழகேசன் என்னும் நபரால் பட்டப்பகலில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார் . இதற்கு காரணம் ‘ஒருதலைக்காதல்‘ என்கின்றனர் காவல்துறையினர் .
தமிழகத்தில் இளம்பெண்கள் குறிப்பிட்ட இடைவெளியில் இவ்வாறு கொடூரமாக கொல்லப்படுவதும் அதற்கு காரணமாக சொல்லப்படுவது ஒருதலைக்காதலாகவும் இருந்துவருகிறது . சுவாதி என்னும் இளம்பெண் ராம்குமார் (இவர்தான் கொன்றாரா என தெரியவில்லை ) என்னும் இளைஞரால் இதே சென்னையில் ரயில் நிலையத்தில் வைத்து கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார் .அப்போதும் இதுபோன்ற மழுப்பலான பதிலையே காவல்துறையினர் சொல்லிவந்தனர் .
ஒருதலைக்காதலாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் வன்முறை என்பது துளியளவும் ஏற்றுக்கொள்ளப்பட தகுந்தது அல்ல .
ஆனால் அடுத்தமுறை ஒரு தவறு நடக்க கூடாது என்றால் அதைப்பற்றி பேசி புரிதலை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் . வெறுமனே இறந்த பெண்களின் மாண்பினை காப்பதாக நினைத்துக்கொண்டு ‘ஒருதலை காதல் ‘ என பொய்யுரைப்பது மறுபடியும் அதே குற்றம் நடைபெறவே உதவும் .
அஸ்வினி என்கிற இளம்பெண்ணை அழகேசன் என்னும் நபர் கத்தியால் குத்திக்கொன்றதை வன்மையாக கண்டிப்பதோடு அவருக்கு உயர்ந்தபட்ச தண்டணையை கொடுக்க வேண்டும் . அதே நேரத்தில் கொலைக்கான உண்மையான காரணம் பற்றியும் அஸ்வினி – அழகேசன் இருவருக்குமிடையில் உண்மையில் எப்படிப்பட்ட உறவு இருந்தது என்பதனையும் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் .
-
அஸ்வினி – அழகேசன் இருவருக்கும் இருவரின் சம்மத்துடனையே திருமணம் நடந்ததாகவும் பிறகு குடும்ப உறுப்பினர்களின் கட்டாயத்தால் பிரிக்கப்பட்டதாகவும் செய்திகள் பரவுகின்றன .
அஸ்வினி இறந்த இடத்திற்கு வந்த அவரது அம்மா அழுகும்போதும் “அழகேசனுடன் பழகாதே பேசாதே என கூறினேனே நீ கேட்கவில்லையே இப்போது கொன்றுவிட்டானே ” என கதறி அழுதுள்ளார் . அப்படியென்றால் அம்மாவின் சொல்லை ஏற்காமலும் அஸ்வினி அழகேசனுடன் பழகி வந்துள்ளார் என அறிய முடிகின்றது .
இதற்குமேல் என்ன நடந்திருக்கும் என்பதனை உங்களாலேயே எண்ணிக்கொள்ள முடியும் என நம்புகிறேன் .
இக்கால பெண்களுக்கும் ஆண்களுக்கும் அவசரம் அதிகமாகிவிட்டது :
காதல் என்னவென்று புரியாத வயதுடைய சின்னஞ்சிறுவர்கள் ‘எனக்கு ஆள் இருக்கு என்கிறார்கள்‘ , பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் மதிய உணவு இடைவேளையில் ‘ஒரு ரூபாய் காயின் போன் மூலமாக காதல் வளர்க்கிறார்கள் ‘ . உண்மையில் சொல்லப்போனால் தற்போது தனக்கு ஒரு ‘ஆள் ‘ இருக்கிறாள் என்றோ இருக்கிறான் என்றோ சொல்லிக்கொள்வதில் பெருமை அடைந்துகொள்கிறார்கள் இருபாலரும் .
இளம்பெண்களுக்கு நன்றாக படித்த , வேலைக்கு செல்கின்ற பையனை பிடிப்பதைவிட பொறுக்கித்தனம் செய்துகொண்டு வேலைவெட்டிக்கு போகாமல் பின்தொடரும் ஆண்களை மிக எளிதாக பிடித்துப்போய்விடுகிறது . வீட்டிற்கு தெரியாமல் காதலை வளர்த்துவிட்டு பிறகு வீட்டார் ஒப்புக்கொள்ளாமல் தற்கொலை செய்துகொள்வோம் என்பது உள்பட ஏதாவது காரணத்தை சொல்லி மிரட்டும்போது பெண்கள் எளிமையாகவோ அல்லது துன்பத்துடனோ அதனை ஏற்று காதலை முறித்துக்கொள்கின்றனர் .
-
பெரும்பான்மையான ஆண்களோ அமைதியாக போய்விடும்போது சிலரோ வன்முறையை கையிலெடுத்து உயிர்பலியில் முடித்துவிடுகின்றனர் .
இதில் யார் பக்கம் நியாயம் யார்பக்கம் அநியாயம் என்பதைவிட அந்ததந்த வயதில் அது அதை புரிந்து செய்தாலே பாதி பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும் . குறிப்பாக பிரச்சனை வரும்போது அதிகம் பாதிப்படைவது பெண்களாக இருப்பதனால் அதிக கவனமாக பெண்கள் இருக்கவேண்டிய கட்டாயமும் இப்போது உருவாகியிருக்கிறது .
-
வன்முறையால் உயிரை கொல்வது மூடத்தனம் .புரிந்து வாழ்வதே அறிவார்ந்த செயல் .
நன்றி
பாமரன் கருத்து