அவர் பணக்காரர்களின் பிள்ளை கிடையாது, முன்னாள் தலைவர்களின் வாரிசு கிடையாது. சாமானியர் வீட்டுப்பெண், சட்டக்கல்லூரி மாணவி. வாய்ப்பு கொடுத்த கட்சி, வாக்களித்த மக்கள் அனைவரும் சாதனைக்கு சொந்தக்காரர்கள்.
அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அபார வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. அந்த வெற்றியோடு கேரளா புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தவிருக்கிறது. ஆமாம். 21 வயதே ஆன ஆர்யா ராஜேந்திரன் [Arya Rajendran] இந்த இளம் வயதில் திருவனந்தபுரம் பகுதியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இந்திய அளவில் குறைந்த வயதில் மேயர் ஆகும் சாதனையை ஆர்யா நிகழ்த்தவிருக்கிறார்.
தற்போது சட்டக்கல்லூரியில் [ All Saints College] மாணவியாக இருந்து வருகிறார். இவர் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பங்குகொண்டு மடுவன்முகள் எனும் இடத்தில் வெற்றிபெற்று கவுன்சிலராக தேர்வானார். இவரை மேயர் பதவிக்கு மாவட்ட செயலர் பரிந்துரை செய்திருப்பதாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த பரிந்துரை ஏற்கப்படும் என்றும் முடிவு சனிக்கிழமை வெளியாகும் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவரது அப்பா ஒரு எலெட்ரிஷியன் மற்றும் அவரது அம்மா ஒரு LIC ஏஜென்ட். இவர்கள் இருவருமே கம்யூனிஸ்ட் கட்சிக்காக பணியாற்றிடும் அதிதீவிர உறுப்பினர்கள். இவர்கள் இருவரைத்தொடர்ந்து கட்சிக்குள் நுழைந்தவர் தான் ஆர்யா. அரசியல் ஆர்வமிக்க துணிவு கொண்ட இவருக்கு கட்சி வாய்ப்பு கொடுத்ததும் அவர் வெற்றி பெற்றதும் அவர் இளம் வயது மேயராக வரப்போவதும் நல்ல அரசியலுக்கு உதாரணங்கள்.
தமிழகத்தில் கொள்கைக்காக அரசியலுக்குள் நுழைகின்ற இளம் தலைமுறைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வாரிசுகளின் தலைமுறைகள் தான் அரசியலுக்குள் நுழைகிறார்கள். அப்படி சாமானியர் ஒருவர் நுழைந்தாலும் கூட அவருக்கான மேடையோ அங்கீகாரமோ கிடைப்பதென்பது அரிதாக இருக்கிறது. பெற்றோர்களும் அரசியலுக்கு பிள்ளைகள் செல்வதை விரும்புவதில்லை. இவை அனைத்தும் மாற்றப்பட வேண்டும். மாற்றங்களை முன்னேற்றங்களை உண்டாக்க நினைக்கும் இளைய தலைமுறை அரசியலுக்குள் நுழைய வேண்டும். பெற்றோர்கள் உடன் நிற்க வேண்டும். கட்சிகள் அங்கீகாரம் கொடுக்க வேண்டும்.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!