Site icon பாமரன் கருத்து

திராவிட அரசு பற்றி அறிஞர் அண்ணா கொடுத்த சூப்பர் பேட்டி

நாஞ்சில் மாவட்ட முதல் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த அண்ணாவை மளையாளப் பகுதியைச் சார்ந்த பத்திரிகை நிருபர்கள் 12 பேர் 31.12.1950 அன்று பேட்டி கண்டது. திராவிட அரசின் கொள்கைகள் குறித்த அண்ணாவின் பார்வையை இந்த பேட்டியின் வாயிலாக அறியலாம்.

நிரு: தங்கள் இயக்கத்தின் முக்கியக் குறிக்கோள்கள் என்ன?

பொ.செ: சமுதாயத் துறையில் சாதி, மத பேதங்களை ஒழிப்பதும், பொருளாதார நிலையில் சுரண்டல் ஒழியப் பொருளாதாரச் சமத்துவ நிலை ஏற்படுத்துவதும், அரசியலில் வடநாட்டு்ப் பிரிவினையிலிருந்து திராவிடத்தைப் பிரிப்பதுமாகும்.

நிரு: அகில உலக ஒற்றுமையில் (internationalism) உங்களுக்கு அக்கறை இல்லையா?

பொ.செ: பல தேசத் தோழர்களின் கூட்டு முன்னணிதானே அது?

நிரு: பின், திராவிட நாடு கேட்கிறீர்களே! பிரிவினையை அல்லவா வற்புறுத்துகிறீர்கள்?

பொ.செ: பிரிக்கச் சொல்கிறோம், இந்திய மத்திய தொடர்பிலிருந்து.

நிரு: இந்தியாவின் ஒரு பகுதிதானே, தாங்கள் கூறும் திராவிட நாடு?

பொ.செ: இல்லை. அது தனிநாடு, இந்தியாவின் பகுதியல்ல. இந்தியாவின் பகுதி என்று கூறிடுவதை நாங்கள் மறுக்கிறோம்.

நிரு: இந்தியாவிலிருந்து பிரிகிற நீங்கள் எப்படி அகில உலக ஒற்றுமையை ஏற்றவராவீர்?

பொ.செ: திராவிட நாட்டை, அகில உலக நாடுகளில் ஒன்றாக்கவே நாங்கள் பாடுபடுகிறோம்.

நிரு: திராவிட நாட்டைப் பற்றி இன்னும் சற்றுத் தெளிவாக விளக்குவீர்களா?

பொ.செ: தாராளமாக. திராவிட நாடு புதிதாகக் கேட்பதல்ல. ஏற்கனவே எங்களுக்குச் சொந்ததமாக இருந்த நாடு வெள்ளையர் ஆட்சியிலேதான் ஒரு பிணைப்புக்குள் சிக்கிக் கொண்டது. நாங்கள் இழந்த நாடு திராவிட நாடு. இழந்ததை மீண்டும் பெறும் உரிமை எமக்குண்டு.

நிரு: உங்கள் போராட்டத்திற்கு இந்தியச் சட்டம் இடந்தருமா?

பொ.செ: இந்திய அரசியல் சட்டத்தையே மாற்றியமைக்கவேண்டும் என்பது எங்கள் அவா. இந்தியச் சட்டத்தைத் திருத்தியமைத்து மாகாண சர்க்காரிடமே எல்லா அதிகாரங்களையும் இருக்கச் செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

நிரு: டெல்லிதானே உங்கள் பிரதிநிதி! அதனிடம் தெரிவிப்பதுதானே முறை.

பொ.செ: முதலில் திராவிட மக்களை அதற்குத் தயாராக்க வேண்டாமா? அதைத்தான் இப்போது செய்கிறோம்.

நிரு: திராவிடநாடு என்பது பிரிவினை கோரிக்கைதானே? டெல்லியிடம் சொல்லித்தானே பெற முடியும்?

பொ.செ: திராவிடஸ்தான் இயக்கத்தைச் சற்றுத் தெளிவாகத் தாங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

நிரு: திராவிடஸ்தான் என்று கேட்பது பாகிஸ்தான் போலத்தானே? அதில் ஒன்றும் தவறில்லையே.

பொ.செ: அந்த வகையில் சரிதான். காப்பியடிக்கிறோம் என்று கூறுவது தவறு. உதாரணமாகச் சொல்கிறேன். இந்தியாவில் பல வீடுகள் உள்ளன. இந்திய யூனியன் என்னும் சுற்றுமதில் இருந்தது. பாகிஸ்தான் வீட்டிற்குத் தனி மதிலும் வாயிற்படியும் அமைத்தது போலத் திராவிடஸ்தான் வீட்டிற்கும் வேண்டும் என்கிறேன்.

நிரு: வெளிநாட்டுப் படை எடுப்பு வந்தால்?

பொ.செ: அத்தகைய விருப்பத்தகாத நிலைகளை ஏன் கற்பனை செய்து கொள்ள வேண்டும்?

நிரு: பக்கத்து நாடுகளின் ஒத்துழைப்பு கிடைக்குமா?

பொ.செ: கிடைக்கும். ஆனால், திராவிட நாட்டின் எல்லைக்குள்ளேயே எங்கள் சொல்லுக்கு ஆதரவு திரட்டுகிறோம். வெளி நிலைகளைப்பற்றி இப்பொழுது யோசிக்க நேரமில்லை. அவசியமுமில்லை.

நிரு: திராவிடஸ்தானில் கேரளத்தின் நிலை என்ன?

பொ.செ: திராவிடக் கூட்டாட்சியில் அது ஓர் அங்கம் வகிக்கும். மலையாளிகளையும் மற்றவர்களையும் ஆட்டிப்படைக்கத் தமிழர்கள் செய்யும் சூழ்ச்சியே திராவிடஸ்தான் இயக்கம் என்று வேண்டுமென்றே சிலர் கூறுவது தவறு.

நிரு: அப்படியானால்…

பொ.செ: திராவிடஸ்தான் ஒரு கூட்டாட்சி. அதில் தமிழகம், ஆந்திரம், கேரளம், கன்னடம் ஆகிய பகுதிகள் அடங்கி இருக்கும். அதற்குத் தனித்தனியே சட்ட சபைகள், சுதந்திர வாழ்க்கை, சுய நிர்ணய உரிமை எல்லாம் உண்டு. அங்கங்கே அந்தந்த வட்டார மொழியே ஆட்சி மொழியாக விளங்கும் அகில உலகத் தொடர்பிற்கும் கூட்டாட்சி முறைக்கும் ஆங்கிலமே ஏற்ற மொழி எனக் கருதுகிறோம்.

நிரு: நாஞ்சில் நாட்டின் நிலை என்ன?

பொ.செ: நாஞ்சில் தமிழகத்துடன் சேரும். இன்றும் திருவாங்கூரின் அரசியல் வாழ்வுச் சிக்கல்களைப் பற்றிய முழு உண்மைகள் கிடைக்கப் பெற்றவுடன் இன்னம் தெளிவான விளக்கங்கள் தர இயலும்.

நிரு: இமயம் இருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு எல்லையாக. அதுபோலத் திராவிடத்திற்கில்லையே!

பொ.செ: விந்தியமிருக்கிறது என்று உடனே சொல்லலாம். ஆனால் ஒரு நாட்டிற்கு மலைதான் எல்லையாக முடியும் என்பது சரியல்ல. பிரான்சு, அயர்லாந்து முதலியவை மலை எல்லையாக இல்லாத நாடுகளே.

நிரு: வட மொழிக்கு ஆதரவு அதிகமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

பொ.செ: அப்படி ஒன்றும் இல்லை. எங்கும் எதிர்ப்பு எண்ணம் பரவிக் கொண்டே இருக்கிறது. உதாரணமாக, ஆந்திர நாட்டில் வடமொழிக்கு எதிர்ப்பு இயக்கம் இருந்து வருகிறது. மலையாளம், தெலுங்கு, கன்னடம் எல்லாம் வடமொழியால் வாழ்விழந்தவைதான்.

நிரு: நீங்கள் எப்படித் திராவிடஸ்தான் இயக்கத்தைப் பரப்ப முயற்சி செய்வீர்கள்?

பொ.செ: பொதுமக்களிடம் திராவிட நாட்டுப் பிரிவினையைப் பற்றிப் பிரச்சாரம் செய்கிறோம். தமிழ்நாட்டு எதிர்ப்புணர்ச்சியை வடநாட்டு மந்திரிகளுக்கு கறுப்புக்கொடி மூலம் காட்டல், வடநாட்டுச் சுரண்டல் முறைகளைத் தடுக்க அடையாள மறியல் செய்தல் போன்றவைகள் வாயிலாக டெல்லி ஏகாதிபத்யத்திற்கும் எங்கள் கோரிக்கைகளை எடுத்துச் சொல்லி வருகிறோம்.

நிரு: உங்கள் கழகத்தின் சட்டதிட்டங்களை அறிய விரும்புகிறோம்.

பொ.செ: மாகாண மாநாட்டில்தான் அவை முழு உருவடையப் போகின்றன. இப்பொழுது பொதுச் செயலாளர் ஒருவர் தலைமையில் பல்வேறு குழுக்கள் வேலை செய்து வருகின்றன.

நிரு: நாகர்கோயில் மாநாடு என்றால் அது கேரள மாநாடு என்ற சொல்கிறார்களே! இது சரியா?

பொ.செ: நாஞ்சில் – கேரளத்தின் நுழைவாயில் எனினும் அது தமிழகத்தைச் சேர்ந்த மாவட்டமே.

நிரு: ஆரியர்கள் உங்கள் ஆட்சியில் எந்நிலை பெறுவார்கள்?

பொ.செ: பிரிவினை ஆட்சியை ஒத்துக்கொண்டவர்கள் எல்லாரும் நிம்மதியாக இருப்பர்.

நிரு: உங்கள் ஆட்சியில் விசுவாசம் கொண்டு அவர்கள் இருந்தால்…

பொ.செ: விசுவாசத்தோடு இருந்து. திட்டங்களை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டால், எவரும் திராவிட அரசியலே குடிமக்கள் ஆகிவிடலாம்.

(நாஞ்சில் மாவட்ட முதல் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த அண்ணாவை மளையாளப் பகுதியைச் சார்ந்த பத்திரிகை நிருபர்கள் 12 பேர் 31.12.1950 அன்று பேட்டி கண்டனர். மாநாட்டு வரவேற்புக் குழு இப்பேட்டிக்கு ஏற்பாடு செய்தது. இப்பேட்டியில் கலந்து கொண்டவர்களின் இதழ்கள் பின்வருமாறு:

கேரள கௌமதி

தேசபந்து

மலையாளி

தட்சணபாரதி

தென்குரல்

தென் திலகம்

வஞ்சிநாடு

தேவி

நண்பன்

ராஷ்டிரவேலி

மலையாள ராஜ்யம்

தியாக நாடு

திரு.வி.தாஸ் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை லிபரேட்டர் நிருபரும் உடன் இருந்தனர்.)

பேட்டி கண்ட நாள்: 31-12-1950

மூலம்: திராவிட நாடு, 28.01.1951

பொ.செ: – பொதுச்செயலாளர் அண்ணா

Exit mobile version