தேர்தல் காலங்களில் மட்டும் அதிகமாக அரசியல் பேசிவந்த காலம் மாறி சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி ,செய்தி சேனல்களின் 24 மணி நேர சேவை ஆகியவை நொடிக்கு நொடி அரசியல் குறித்து மக்களை பேச வைத்துக்கொண்டே இருக்கிறது. இதில் தற்போது மீம்ஸ் கூட முக்கிய பங்காற்றுகிறது.
தற்போது கமல் ரஜினி இருவரும் அரசியலுக்குள் நுழைந்த பிறகு இன்னும் மும்முரமாகிவிட்டது.
கமல் எங்காவது சென்று பேசினாலோ ரஜினி எது குறித்தாவது பேசினாலோ அது இரண்டு பக்கத்தில் உள்ள ஆதரவாளர்களால் வரவேற்கப்படுகிறது அல்லது எதிர் தரப்பால் விமர்சிக்கப்படுகிறது .
- இந்த சூழலில் யாரையும் சாராத, நல்லதொரு அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிற மக்களுக்கு யாரை ஆதரிப்பது என்கிற குழப்பம் வர துவங்கியிருக்கிறது .
சரி , யாரைத்தான் ஆதரிப்பது ?
- யாரைத்தான் ஆதரிப்பது என்ற கேள்வி உங்களுக்கு எழுந்தால் இந்த கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள் “ஆதரித்தே ஆகவேண்டும் என கட்டாயமா ? “
கமல் ரஜினி இருவரும் தற்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள் . இப்போது தான் கருத்து சொல்லவும் தங்களின் நிலைப்பாடு குறித்தும் மெல்ல மெல்ல பேசி வருகிறார்கள் .
நடுநிலையாக இதுவரை யாரையும் தலைவரை ஏற்காத மக்கள் உடனடியாக ரஜினி கமல் இருவரில் ஒருவரை ஆதரித்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை . ஆகவே பொறுமையாக காத்திருங்கள் .
தேர்தல் வருவதற்கு இன்னும் சில ஆண்டுகள் இருக்கும் சூழ்நிலையில் இருவரின் செயல்பாடுகளை , கொள்கைகளை கவனியுங்கள் . அதனை ஏற்கனவே களத்தில் இருப்பவர்களுடன் ஒப்பிட்டு பாருங்கள் . உங்களுக்கு யார் தகுந்தவராக படுகிறாரோ அவர்களுக்கு வாக்கு அளியுங்கள் .
அதுவரைக்கும் யாரைத்தான் விமர்சிப்பது ?
நம்மிடம் தற்போது இருக்கும் பிரச்சனையே யாரை , எதை விமர்சிப்பது என தெரியாமல் இருப்பதுதான் . ஒருவரின் ஆதாரவாளராக இருக்கின்றோம் என்பதால் அவர் தவறான நிலைப்பாடு எடுத்தால் கூட அதற்கு ஆதரவாக பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றோம் .
சற்றும் கவலைப்படாமல் தவறு யார் செய்தாலும் தயங்காமல் விமர்சிக்கும் பழக்கம் கொண்டவராக மாறிடுங்கள் .
அதுவே சிறந்தது , அதுவே அரசியல்வாதிகளுக்கு பயத்தை கொடுக்கும் .
ரஜினி கமல் விஜயகாந்த் திமுக அதிமுக சீமான் திருமா வைகோ ராமதாஸ் என கட்சி பாகுபாடு இல்லாமல் கவனியுங்கள் , ஆய்வு செய்யுங்கள் ,விமர்சியுங்கள் , பிறகு முடிவெடுங்கள் “யாருக்கு ஆதரவு என்பதை”
நன்றி
பாமரன் கருத்து