உண்டியல் பணத்தை கொடுத்து மனதை வென்ற அனுப்பிரியா | Anupriya from tamilnadu give her savings to kerala flood relief fund wins hearts
பாமரன் கருத்து
வரலாறு காணாத மழையினால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் உதவிகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அப்படி செய்யப்படும் உதவிகளில் சில நம்மை மெய்சிலிர்க்க வைக்க கூடியதாக இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு உதவிதான் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனுப்பிரியா என்கிற சிறுமி செய்த உதவி.
உண்டியல் பணத்தை கொடுத்த அனுப்பிரியா
கடவுளின் தேசம் என அழைக்கப்படும் அழகிய பசுமையான கேரளா தொடர் மழையினால் வெள்ளக்காடாய் மாறி கண்ணீர் தேசமாக மாறியிருக்கிறது. தொலைக்காட்சிகளும் சமூக வலைத்தளங்களும் கேரளாவின் பாதிப்பினை சரியான திசையில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையினை செய்துகொண்டு இருக்கின்றன. அதன் விளைவாகத்தான் பல இடங்களில் இருந்தும் உதவிகள் கேரளாவிற்கு கிடைத்தவண்ணம் இருக்கின்றன.
அப்படி தொலைக்காட்சிகளில் கேரளாவின் பாதிப்பை கண்ட விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிவசண்முகநாதன் லலிதா அவர்களின் மகள் அனுப்பிரியா [இரண்டாம் வகுப்பு] கேரளாவிற்கு உதவிட நினைக்கிறார். இரண்டாம் வகுப்பு படித்திடும் அனுப்பிரியா தனக்கு புதிய சைக்கிள் ஒன்றினை வாங்கிட சேமித்து வைத்த உண்டியல்களை உடைத்து ரூ 9000 த்தை அப்பாவிடம் கொடுத்து கேரளாவிற்கு கொடுக்க சொல்கிறார்.
அவரது அப்பாவும் மகளின் விருப்பப்படி வங்கிக்கு சென்று கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்புகிறார். பிறகு இந்த செய்தி சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் வெளியாகி அனுப்பிரியா பலரின் பாராட்டுகளை பெற்றார். அதுமட்டுமல்ல அவருக்கு ஆசைப்பட்ட சைக்கிளை வாங்கித்தர பலரும் முன்வந்தனர்.
இலவசமாக சைக்கிள் பரிசளித்த ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம்
Thanks to you dear Anupriya and pleasure to talk to your mom. I had read every act of kindness has a ripple effect. Through you I experienced, “Some act of kindness may bring an avalanche “. You are truly blessed and keep up this character of strength that you carry. pic.twitter.com/Ab8plZnKHM
ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியாக இருக்கக்கூடிய பங்கஜ் முன் லால் சிறுமி அனுப்பிரியாவுக்கு சைக்கிளை பரிசளிக்க விரும்புவதாக அறிவித்தார். பிறகு அனுப்பிரியாவை கடைக்கு அழைத்து அவர் விரும்பிய சைக்கிளை பரிசாகவும் அளித்தது ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம்.
Anupriya, parnam to you. You are a noble soul and wish you spread the good around. Hero is too pleased to give you one bike every year of your life. Pl share your contact on my account. Love you and best wishes. Prayers for Kerala https://t.co/vTUlxlTnQR
அதிலும் திருப்தி அடையாத பங்கஜ் முன் லால் “தூய்மையான உள்ளம் கொண்டவர் நீங்கள். உங்களுக்கு ஆண்டுதோறும் ஹீரோ பைக் ஒன்றினை கொடுக்கவும் விரும்புகிறேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அனுப்பிரியா ஒரு ஆச்சர்யம்
முல்லைக்கு தேர்கொடுத்த வள்ளல்களையும், குளிரில் வாடிய மயிலுக்கு போர்வை கொடுத்த வள்ளல்களையும் கதைகளாக கேட்டிருக்கிறோம். அது உண்மையா என்னவென்றெல்லாம் தெரியவில்லை. அவை அனைத்தையும் விட சிறுமி அனுப்பிரியா செய்ததை மிகப்பெரிய கொடையாகவே நான் பார்க்கிறேன். இரண்டாம் வகுப்பு படிக்கின்ற சிறுமிக்கு கேரளாவில் வெள்ளம் போவது தெரியும் ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்திடும் மன பக்குவம் வந்திருக்கின்றது. உதவ வேண்டும் என்கிற எண்ணமும் தோன்றியிருக்கிறது என்பதனை கேட்கும்போதும் வியப்பே வருகின்றது .
நான் உட்பட பல ஆயிரங்கள் சம்பாரிக்கும் நபர்களே யோசித்து யோசித்து குறைந்த அளவில் கிள்ளிக்கொடுக்கின்ற நிலையில் தான் ஆசையாக சைக்கிள் வாங்கிடவேண்டும் என பல ஆண்டுகளாக சேமித்து வைத்த ரூ9000 பணத்தை கொடுக்க முன்வந்தது என்பது அளவிட முடியாத சிறந்த கொடையாகவே நான் பார்க்கிறேன். அனுப்பிரியா எனக்குள் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார், வரும் காலங்களில் அவை என்னில் பல மாற்றங்களை விதைக்கும் என நம்புகிறேன்.