நாத்தனாளுக்கு பச்சை சேலை , ஆடி தள்ளுபடி போன்ற வியாபார தந்திரவரிசையில் முன்நிலை வகிக்கின்றது அட்சய திரிதியை .
எதையும் கண்டுகொள்ளாமல் மக்கள் கூட்டம் அட்சய திரிதியை நாளன்று தங்கம் வாங்கும் முனைப்பில் நகைக்கடைகளில் அலைமோதுகிறது . காரணம் என்னவென்று கேட்டால் , அட்சய திருதியை நாளன்று தங்கம் வாங்கினால் அடுத்தடுத்து செல்வம் பெருகும் என்கிறார்கள் .
அட்சய திரிதியை உருவான கதை :
மகா விஷ்ணு தரிசனம் அளித்த தினம் “திருதியை” . அன்று செய்யும் தான தர்மங்கள் அளவில்லாத பலனை கொடுக்கும் என்பதால் அந்த திரிதியை “அட்சய திரிதியை” என அழைக்கப்படுகிறதாம் .
வியாபாரமாக மாற்றப்பட்ட கதை :
தான தர்மம் செய்தால் அளவற்ற பயனை கொடுக்கும் என சொல்லப்பட்ட அட்சய திரிதியை நாளை தங்கம் வாங்க உகந்த நாள் என மாற்றியது வியாபார தந்திரமன்றி வேரொன்றும் இல்லை .
தங்கத்தை வாங்கி வீட்டில் வைப்பதனால் எவ்வாறு புண்ணியம் சேரும் என்கிற அடிப்படை அறிவு மக்களுக்கு இருக்க வேண்டாமா ?
கடன்வாங்கியாவது இன்று வாங்கியே ஆகவேண்டும் என்கிற அளவிற்கு மக்களின் மனநிலையை மாற்றிவைத்திருக்கும் நகைக்கடை விளம்பரங்களின் வெற்றிதானே இது ?
அறிவார்ந்த படித்த மக்கள் ஒரு கருத்தை ஏற்று நடந்திடும் போது படிக்காத பாமர மக்களும் அதனை உண்மையென நம்பி விடுகிறார்கள் .
தங்கம் நல்ல முதலீடு தான் , அதற்காக அதிக விலை கொடுத்தாவது அட்சய திரிதியை அன்றே வாங்கியாக வேண்டும் என கூட்டமாக அலைமோதுவதுதான் தவறு .
வியாபார தந்திரங்களை உணர்ந்து செயல்படுங்கள் மக்களே !
Subscribe :