கொரோனாவால் உலகம் முழுமைக்கும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள், பலரது குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பெரிதளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் சுற்றுசூழல் மாசுபாட்டை பொறுத்தவரைக்கும் மிகப்பெரிய நன்மை ஏற்பட்டு இருக்கிறது.
கடந்த வாரங்களில் டெல்லியில் இருப்பவர்களின் வாட்ஸ்ஆப் குழுக்கள் இடையே ஒரு நம்பமுடியாத ஆச்சர்யமான செய்தி பரவிக்கொண்டு இருந்தது. அதில் “இதுவரைக்கும் சுவாசிக்க ஏதுவான காற்று டெல்லியில் இல்லை எனவும் நீங்கள் சுவாசிக்கும் காற்று நுரையீரலுக்கு வைக்கப்படும் வேட்டு எனவும் கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது காற்றின் தர அட்டவணையை பார்த்தால் “நன்று [Good]” என வருகிறது. இப்படி வருவது ஆல்ப்ஸ் மலைத்தொடரில் மட்டும் தான் சாத்தியம், நம்பமுடியவில்லை” என தங்களது சந்தோசத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்தப்பதிவு டெல்லிக்கு மட்டுமேயானது அல்ல. தமிழகம் உட்பட இந்த உலகில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இது பொருந்தும்.
கொரோனா ஊரடங்கால் பாதிப்புகள் நடந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாவிட்டாலும் இப்படியொரு ஊரடங்கை உலக நாடுகள் திட்டமிட்டு பூமியின் நலனுக்காக நடத்திடுவது சாத்தியம் என்பதை இப்போது உணர முடிகிறது. இதுவரைக்கும் நிறுத்தப்படாத தொழிற்சாலைகள் தற்போது நிறுத்தப்பட்டு இருக்கின்றன. வரலாற்றில் இதுவரைக்கும் தடைபடாத கொண்டாட்டங்கள் தடை பட்டிருக்கின்றன.
காற்று மாசு டெல்லியில் மிகக்கொடுமையாக அதிகரித்தபோதும் நாம் ஒட்டுமொத்தமாக வாகனங்களை நிறுத்த துணியவில்லை. ஒற்றை இலக்க வாகனம், இரட்டை இலக்க வாகனம், அத்தியாவசிய வாகனம் என பிரித்து அவற்றை பயணிக்க அனுமதிக்கப்பட்டதே தவிர முற்றிலுமாக தடை செய்ய முடியவில்லை.அப்படியே தடை செய்ய அரசு முடிவெடுத்தாலும் “அப்படியெல்லாம் செய்வது சாத்தியமா? அது பொதுமக்களின் வாழும் உரிமையை பறிக்கும் செயல் ஆகாதா? நாங்கள் இதை எதிர்த்து வழக்கு தொடருவோம்” என பல பல பேச்சுக்கள் நடைபெற்று இருக்கும்.
டெல்லியில் இன்று தூய்மையான காற்று வீசுகிறது. ஆனால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு முன்பை விடவும் வேகமாக காற்று மாசு அங்கு ஏற்படும். அரசும் சரி மக்களும் சரி அந்த பிரச்சனையை உணரவே மாட்டார்கள். நாம் மீண்டும் பழையபடியே நடந்துகொள்வோமாயின் கொரோனாவால் உயிரிழந்தவர்களைக் காட்டிலும் அதிகப்படியான மக்கள் சுவாசக்கோளாறு காரணமாக உயிரிழப்பார்கள். அதில் பெரும்பாலும் AC வாகனத்தில் செல்லும் பணக்காரர்கள் தப்பித்துக்கொள்வார்கள். ஏழைகளே அதிகம் பாதிக்கப்படுவார்கள். மீண்டும் ஒரு கொரோனா வரும் மக்களை காப்பதற்காக அல்ல, பூமியை காப்பதற்காக.
நாம் எப்போதும் திருந்தப்போவது இல்லையே. இருக்கும் போது அருமையை உணராத மனித இனம் இல்லாத பிறகு தான் உணரும். அற்புதமான பூமியையும் அப்படித்தான் நாம் உணர்ந்துகொண்டு இருக்கிறோம். கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக இப்படியொரு ஊரடங்கை உலக நாடுகள் இணைந்து நடத்த முடியுமா என எவரும் நம்பி இருக்க மாட்டார்கள். காரணம், ஒரு நாடு அப்படி ஒரு ஊரடங்கை கடைபிடித்தால் அந்த சூழ்நிலையை பிற நாடுகள் பயன்படுத்திக்கொண்டு அந்த நாட்டின் மொத்த வணிகத்தையும் பிடித்துக்கொள்வார்கள். இதனால் தான் எந்தவொரு நாடும் நிறுவனமும் தங்களது தொழிற்சாலைகளை நிறுத்துவதற்கு ஒப்புக்கொள்வது இல்லை.
பாரிஸ் ஒப்பந்தங்களில் அக்கறையோடு கையெழுத்து போடும் நாடுகள் நடைமுறையில் எதனையும் ஆக்கப்பூர்வமாக செய்தது இல்லை. காரணம் என்ன தெரியுமா “பொருளாதாரம்” என்ற ஒற்றைக்காரணம் மட்டும் தான். ஆனால் இப்போது என்னவாயிற்று இவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை என இயற்கை கொந்தளித்ததோ என்னவோ தெரியவில்லை. கண்ணுக்கு புலப்படாத கொடிய வைரஸ் ஒன்றை ஏவி ஒட்டுமொத்த உலகத்தையும் தனக்கு கீழே அடிபணியவைத்துவிட்டது இயற்கை.
வைரஸ் பரவலையும் பொருட்படுத்தாமல் செயல்பட்ட பல மேதாவி நாடுகள், அதிகாரத்தின் உச்சம் என அடிக்கடி தானே சொல்லிக்கொண்ட அமெரிக்கா கூட பேரிழப்புகளை சந்தித்து வருகிறது. இனிமேலும் வெட்டி மாநாடுகள் நடத்துவது, கையெழுத்துக்கள் போடுவது என இருந்துவிட்டு சுற்றுசூழல் மாசுபாட்டை களைவதற்கு உலக நாடுகள் இணைந்து செயல்படாமல் இருந்தால் மீண்டும் இயற்கை கொந்தளிக்கும். வலிமையான இனத்திற்கு மட்டுமே வாழத்தகுதி உண்டு என கூறுவோமாயின் இயற்கை பிற உயிர்களுக்கு வாய்ப்புகளை வழங்கத்தயங்காது. இயற்கையை இப்போதாவது உலக நாடுகளின் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ ஒட்டுமொத்தமாக ஊரடங்கை கடைபிடிக்கும் முடிவிற்கு வரவேண்டும். தீபாவளி, புது வருட கொண்டாட்டம் போல இதையும் நாம் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இயற்கைக்கு புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பினை வழங்க வேண்டும்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!