சிலை கடத்தல் என்றாலே “ஐம்பொன்” என்கிற வார்த்தை அடிக்கடி இடம்பெறுவதை பார்த்திருப்போம். சாதாரண மக்களிடத்தில் ஐம்பொன் சிலை என்றால் முற்றிலும் பொன்னால் அதாவது தங்கத்தால் ஆன சிலையாக இருக்குமோ என்கிற எண்ணம் இருக்கின்றது. உண்மையாலுமே ஐம்பொன் சிலை தங்கத்தால் ஆனதா? எதற்காக சிலைகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன? என்பது போன்ற கேள்விகளுக்கு விடைகளை பார்ப்போம்.
Table Of Content :
ஐம்பொன் சிலை என்றால் என்ன? தங்கம் இருக்குமா?
ஐம்பொன் சிலையில் தங்கம் அதிகமாக இருக்குமா?
சிலைகளின் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
வெளிநாட்டுக்காரர்கள் சிலைகளை வாங்குவது ஏன்?
சிலைகள் எவ்வாறு திருடப்படுகின்றன?
சிலை கடத்தல்கள் தடுக்கப்பட வேண்டும்? ஏன்?
ஐம்பொன் சிலை என்றால் என்ன? தங்கம் இருக்குமா?
‘பொன்’ என்பதற்கு ‘உலோகம்’ என்று தான் பொருள். ஆனால் தற்போது வழக்கத்தில் பொன் என்றால் தங்கத்தை மட்டுமே குறிப்பதற்கு பயன்படுத்துகிறோம். இதற்க்கு மிகச்சிறந்த உதாரணமாக திருவள்ளுவரின் பின்வருகின்ற திருக்குறளை கூறலாம். இந்த குறளில் இரும்பு என்பதனை குறிப்பிட “பொன்” என்ற சொல்லினை பயன்படுத்துகிறார் வள்ளுவர்.
வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉந்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று
ஐம்பொன் என்றால் ஐந்து உலோகங்களின் கலவை. ஐம்பொன் சிலை என்றால் ஐந்து உலோகங்களின் கலவையினால் செய்த சிலை என்பதே பொருள்.
ஐம்பொன் சிலையில் தங்கம் அதிகமாக இருக்குமா?
இதற்க்கு சரியான பதில், இருக்கும். ஆனால் மற்ற உலோகங்களை காட்டிலும் மிக மிக குறைவான அளவிலேயே (கிராம் கணக்கில்) மட்டுமே தங்கம் இருக்கும். பொதுவாக ஐம்பொன் சிலை செய்யப்படும்போது 85% செம்பு, 13% பித்தளை, 2% காரியம் இருக்கும். இதன் கூட்டுத்தொகையே 100% விழுக்காடு வந்துவிடும். சிலை செய்யும்போது மிக மிக குறைந்த அளவில் தங்கமும் வெள்ளியும் சேர்க்கப்படும் என்பதனால் அவை ஐம்பொன் சிலையின் எடையில் சேர்க்கப்படுவது இல்லை.
சிலைகளை செய்யசொல்பவர்கள் சம்பிரதாயமாக தங்களின் தங்க மற்றும் வெள்ளி நகைகளை போடுவார்களாம். இது அந்தக்கால அரசர் வழக்கத்தில் இருந்து இன்றுவரை நீடிக்கின்றது. ஆகவே மிக மிக குறைந்த அளவிலேயே தங்கம் வெள்ளி ஐம்பொன் சிலையில் இருக்கும்.
சிலைகளின் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
பொதுவாக சிலைகளின் விலைகள் அவற்றின் தொன்மையை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த சிலைக்கு இன்னவிலை என்பதெல்லாம் யாரும் நிர்ணயிக்கவில்லை. சிலை கடத்தல் கும்பல்களும் சிலைகளை வாங்குபர்களும் தான் விலைகளை நிர்ணயித்துக்கொள்கிறார்கள்.
வெளிநாட்டுக்காரர்கள் சிலைகளை வாங்குவது ஏன்?
சிலைகளை வைத்து கடவுளை வணங்கும் பழக்கவழக்கம் பொதுவாக நம் பகுதியில் தான் அதிகம். நம் சிலைகளை வெளிநாட்டுக்காரர்கள் வாங்கி கும்பிடவோ பூஜைகளை செய்திடவோ போவது கிடையாது. மாறாக அவர்கள் நம் கோவில் சிலைகளை வாங்குவதன் முக்கிய நோக்கமே வெறும் அலங்காரத்திற்காகத்தான்.
வாங்குகிற சிலை பழமையானதாக சித்திர வேலைப்பாடுகள் கொண்டதாக இருந்தால் அதிக விலை கொடுக்க ஒப்புக்கொள்கிறார்கள். அந்த பணத்திற்கு ஆசைப்பட்டு நம் ஊர் கொள்ளைக்காரர்கள் சிலைகளை திருடி விற்பனை செய்கின்றனர்.
சிலைகள் எவ்வாறு திருடப்படுகின்றன?
சிலை கடத்தல் கும்பல்கள் போலீசாரை விட மிக புத்திசாலித்தனமாக சிலைகளை திருடுகிறார்கள். குறிப்பாக திருடப்படும் சிலைக்கு மாற்றாக அதேமாதிரியான போலியான சிலைகளை வைப்பதுதான் பெரும் கொடுமை. இப்படிப்பட்ட சிலை திருட்டுக்களை வெறுமனே ஏதோ திருட்டுக்கும்பல்கள் மட்டுமே நிகழ்த்தி விடுவது கிடையாது. மிகப்பெரிய பணக்காரர்கள், கோவில் நிர்வாகத்தினர், உள்ளூர் போலீசார், பூஜை செய்திடும் பூசாரி, சுங்கத்துறை அதிகாரிகள் என அனைவருக்குமே பல சமயங்களில் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது.
திருடப்படும் சிலைகள் தனியார் பார்சல் சர்விஸ் மூலமாக சென்னை போன்ற நகரங்களை வந்தடைவதாகவும். அங்கிருந்து மும்பை உள்ளிட்ட வட பகுதிகளுக்கு அனுப்பப்படும் சிலைகள் விமானங்களின் மூலமாகவும் கப்பல்களின் மூலமாகவும் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
சிலை கடத்தல்கள் தடுக்கப்பட வேண்டும்? ஏன்?
சிலைகளை வெறுமனே கடவுள் என்றோ கல் என்றோ பக்தியை அடிப்படையாக மட்டுமே வைத்து அதன் மதிப்பை நிர்ணயிக்க கூடாது. மாறாக அவற்றை கலை சம்பந்தப்பட்டதாக பார்க்க வேண்டும். நம்முடைய கலாச்சாரம் பண்பாட்டின் அடையாளமாக சிலைகளை பார்த்து பராமரிக்க வேண்டும்.
கோவில்களை முறையாக பராமரித்து பாதுகாத்தோமேயானால் அதன் மூலமாக நம் பாரம்பரிய கலாச்சார புகழை பாதுகாப்பதோடு சுற்றுலாத்துறையையும் ஊக்கப்படுத்தி வருமானத்தை உயர்த்திட முடியும்.
பாமரன் கருத்து