Site icon பாமரன் கருத்து

28 வருடமாக மறுக்கப்பட்ட நீதி அபயாவிற்கு கிடைத்தது எப்படி?

1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதி சிஸ்டர் அபயாவின் சடலம் டெந்த் கான்வென்ட் ஹாஸ்டல் அருகே இருந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. பலமுறை தற்கொலை என முடித்துவைக்க முயன்ற இவ்வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் தான் பாதிரியார் தாமஸ் எம்.கோட்டூர், சிஸ்டர் செஃபி ஆகியோர் தான் கொலை செய்தனர் என்றும் அவர்கள் குற்றவாளிகள் என்றும் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

விசாரணை அமைப்பு மற்றும் வழக்கு விசாரணைகளின் மந்தமான செயல்பாட்டினை தோலுரித்துக்காட்டும் ஒரு வழக்காகவே சிஸ்டர் அபயாவின் கொலை வழக்கு அமைந்துவிட்டது. ஆனாலும் அதுபற்றி எவரும் கவலைப்படாமல் நகன்று சென்றுவிடுவார்கள். இவ்வழக்கு விசாரனையில் காவல்துறையின் அலட்சியம், சிபிஐ போன்ற உயரிய அமைப்புகளின் புலனாய்வுத்திறன் தோல்வி, சிஸ்டர் அபயாவின் பக்கம் கடைசிவரைக்கும் நிற்காத சர்ச் அமைப்பு, நீதித்துறையின் விடாத அக்கறை, தாமதமானாலும் கிடைத்துவிட்ட நீதி என பல விசயங்களை பார்ப்போம். 

1990 களில் கன்னியாஸ்திரி ஆகும் நோக்கத்தில் கான்வென்டில் இணைந்த அபயா அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர் அறிந்திருந்த ஒரு உண்மைக்காக இறப்பார் என எவரும் நினைக்கவில்லை. 1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதி சிஸ்டர் அபயாவின் சடலம் டெந்த் கான்வென்ட் ஹாஸ்டல் அருகே இருந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. சிஸ்டர் அபயா சடலம் கண்டறியப்பட்டபோது கிடைத்த சில பொருள்கள் மற்றும் அவரது உடலில் இருந்த காயங்கள் இது தற்கொலை அல்ல கொலை என்பதை சுட்டிக்காட்டின. ஆனால் காவல்துறை மற்றும் கிரைம் பிரான்ச் ஆகிய இரண்டு அமைப்புகளும் விசாரித்து ‘தற்கொலை’ என்ற முடிவுக்கு வந்தன. அதன் பிறகு இவ்வழக்கை விசாரித்த சிபிஐ கூட மூன்று முறை இவ்வழக்கை முடித்து வைக்க முயற்சி செய்தது. 

ஆனால் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. 1996 இல் நீதிமன்றத்தில் கொலைக்கான காரணத்தை கண்டறியமுடியவில்லை என கூறியது. 1999 இல் ஆமாம் கொலை செய்யப்பட்டுள்ளார் ஆனால் கொலையாளிகளை கண்டறியமுடியவில்லை என கூறியது. 2005 இல் மீண்டும் உள்ளூர் விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி விசாரணையை மேற்கொள்ளலாம் என பரிந்துரைத்தது. 

கொலை செய்யப்பட்டது உண்மை தான் என கண்டறியப்பட்டபோதிலும் கொலையாளியை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டதற்கு காரணம் ஆரம்பத்தில் வழக்கை விசாரித்த அதிகாரியொருவர் திட்டமிட்டு சாட்சியங்களை அழித்தது தான் என குற்றம் சுமத்தப்பட்டது. இவ்வழக்கை முதல் முறையாக  விசாரித்த சிபிஐ அதிகாரி வர்கீஸ் பி தாமஸ் என்பவர் நடத்திய முதல் விசாரணையிலேயே கொலை என ரிப்போர்ட் செய்தார்.



ஆனால் இவரது மேல் அதிகாரிகள் மற்றும் கிரைம் பிரான்ச் மேல் அதிகாரிகள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தனர். நீங்கள் கண்டறிந்த விசயங்களை மாற்றிவிடுங்கள் என கடுமையான அழுத்தம் கொடுத்த போதிலும் அவர் தொடர்ச்சியாக மறுத்து வந்திருக்கிறார். ஒப்புக்கொள்ளாத அவரை வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்திட முயன்றார்கள். இதனால் 7 ஆண்டுகள் பதவிக்காலம் இருந்தபோதிலும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அபயா கொலை வழக்கில் இப்போது இருவர் தண்டனை பெறுவதற்கு ஒரு திருடனின் சாட்சி முக்கியமானதாக அமைந்துள்ளது. ஆமாம், கொலை நடந்த இரவில் இந்த இரண்டு போரையும் கான்வென்ட் பகுதியில் கண்டதாக அவர் தெரிவித்த சாட்சியம் அவ்விருவரையும் குற்றவாளி என நிரூபிக்க வலுவான சாட்சியாக அமைந்துவிட்டது.

கிட்டத்தட்ட அபயா கொலை செய்யப்பட்டு 15 ஆண்டுகளுக்கு பிறகுதான் முதல் கைது நடந்தது. 28 ஆண்டுகளுக்கு பின்னர் தான் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுளார்கள். இந்த வழக்கில் ஆரம்பகால விசாரணை அமைப்புகள் திட்டமிட்டு அபயாவின் கொலையை தற்கொலை என மூடிமறைக்க உதவியுள்ளன. அபயாவின் பெற்றோர் மற்றும் சமூகப்போராளிகள் தான் உண்மையை வெளிக்கொண்டுவர கடுமையாக முயற்சி செய்திருக்கிறார்கள். அபயாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என நீதியின் பக்கம் நிற்க வேண்டிய சர்ச்சில் குற்றவாளிகள் இருவரும் நிரபராதிகள் என தீர்ப்பு வரவேண்டும் என்பதற்காக இறை கூட்டங்கள் நடத்தியதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாயின.

பாதிரியார் தாமஸ் எம்.கோட்டூர், சிஸ்டர் செஃபி இவ்விருவருக்கும் தவறான உறவு இருப்பது சிஸ்டர் அபயாவிற்கு தெரிந்ததே அவர் கொலை செய்யப்பட காரணமாக அமைந்துவிட்டது. அபயா என்ற அப்பாவி பெண்ணுக்காக நிற்கவேண்டிய பல அமைப்புகள் குற்றவாளிகளுக்கு சாதமாகவே இருந்திருக்கின்றன. ஆனால் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒவ்வொருமுறையும் வழக்கை முடித்து வைக்க முடியாது என மறுத்து வந்தது. இதனாலேயே 28 வருடங்கள் இவ்வழக்கு நீடித்து வந்திருக்கிறது.

தனது மகளின் கொலைக்கு நீதி கேட்டு போராடிய பெற்றோர் ‘நீதி கிடைத்துவிட்டது’ என்ற மன நிறைவோடு இறக்கவில்லை என்பது தான் துன்பகரமான விசயம். தீர்ப்பு கிடைப்பதற்கு முன்னதாகவே அவர்கள் மறைந்துவிட்டார்கள். 

சாமானியர்கள் விரைவாக நீதி பெறுவது இன்றளவும் எவ்வளவு கஷ்டமான விசயமாக இருக்கிறது என்பதற்கு அபயாவின் வழக்கு மிகச்சிறந்த உதாரணம். தற்போது கிடைத்துள்ள தீர்ப்பு யாருக்கு கிடைத்த வெற்றி என்ற கேள்விக்கு முன்னாள் நீதிபதி ஒருவர் இப்படித்தான் தெரிவித்தார் ‘அபயா வழக்கில் நீதி கிடைத்தது வர்கீஸ் தாமஸ் எனும் சிபிஐ அதிகாரிக்குதான். அபயாவிற்கு அல்ல, காரணம் அவர் சேவையாற்றிய சர்ச்சே அவருக்கு நீதி கிடைப்பதை விரும்பவில்லை’ என தெரிவித்திருந்தார்.

நீதி விரைவாகவும் குறைந்த செலவிலும் கிடைப்பதே ஜனநாயகம்.

பாமரன் கருத்து 

Exit mobile version