புதிய கல்விக்கொள்கை குறித்து பெற்றோர்களும் மாணவர்களும் ஆசிரியர்களும் கவனியுங்கள், அதுதான் உங்களின் எதிர்காலம்
புதிய கல்விக்கொள்கை குறித்தும் நுழைவுத்தேர்வுகள் குறித்தும் தனது கருத்துக்களை தெரிவித்த சூர்யா அவர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு ஆளுமைகள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். சூர்யா அவர்கள் வன்முறையை தூண்டும் விதமாகவும், முழுமையாக அறிந்துகொள்ளாமல் பேசுகிறார் என்றும் பல்வேறு எதிர்கருத்துக்கள் வந்தன. இன்னும் சிலரோ சூர்யா ஜோதிகா அவர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியிலா படிக்கிறார்கள் , அவருக்கு அரசுப்பள்ளி குறித்து பேச தகுதி இருக்கிறதா என கேள்வி எழுப்புகிறார்கள். இவை அனைத்திற்குமான விளக்கங்களை தான் நாம் இங்கே பார்க்க இருக்கிறோம். மறவாமல் உங்களது கருத்துக்களை பகிருங்கள்.
சூர்யா என்ன பேசினார்?
ஜூலை 13, 2019 அன்று அகரம் அறக்கட்டளையின் 40 ஆம் ஆண்டு விழாவில், புதிய கல்விக்கொள்கை குறித்தும் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் குறித்தும் தனது கருத்துக்களை முன்வைத்தார். அவற்றில் சில
>> மிகக்குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கின்ற பள்ளிகள் மூடப்படும் என்றால் அவர்கள் கல்விக்கு எங்கே போவார்கள்?
>> எனது குழந்தைக்கே மூன்றாவது மொழியை சொல்லிக்கொடுப்பது சவாலாக இருக்கிறது. கிராமப்புற , முதல் தலைமுறை மாணவர்கள் எப்படி பள்ளிக்கு வந்து படிப்பார்கள்?
>> அடிக்கடி வரும் பொதுத்தேர்வுகளினால் மாணவர்கள் தங்களது நம்பிக்கையை இழந்து இடைநிற்றலுக்கு தானே வழிவகுக்கும். மேலை நாடுகளில் அப்படி இல்லையே?
>> ஆசிரியர் இல்லாமல் கல்வி கற்கின்ற மாணவர்கள் இருக்கக்கூடிய சூழலில் அனைவருக்கும் பொதுவான தேர்வு எப்படி சரியானதாக இருக்கும்?
>> இத்தனை கஷ்டங்களையும் தாண்டி வந்தால் ஒரே ஒரு நுழைவுத்தேர்வில் தேர்ச்சி அடைந்தால் தான் மருத்துவம் படிக்க முடியும்.
>> தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து இடங்களை பெற்றவர்களில் பலர் முந்தைய ஆண்டுகளில் 12 படித்த மாணவர்கள்.
>> நீட் போன்ற தேர்வுகளுக்கு சிறப்பு கட்டமைப்புகளை கொண்டிருக்கின்ற தனியார் பள்ளிகள் இங்கு இருக்கின்றன. மேலும் கோச்சிங் சென்டர்கள் புதிது புதிதாக முளைத்திருக்கின்றன.
சமநிலை இல்லாத கல்வி வாய்ப்பில் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களால் எப்படி போட்டி போட முடியும்?
இதுபோன்ற பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.
சூர்யாவிற்கு எதிரான கருத்துக்கள்
திரு H ராஜா அவர்கள் “சூர்யாவின் கருத்துக்கள் வன்முறையை தூண்டும் விதமாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார். தமிழக பாஜகவின் தலைவர் திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் “புதிய கல்விக்கொள்கை என்றால் என்னவென்றே தெரியாமல் சூர்யா பேசுகிறார்” என கருத்து தெரிவித்து இருந்தார். அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்கள் “சூர்யா அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார்” என்றார். இன்னும் பல்வேறு விதமான எதிர்கருத்துக்கள் சூர்யாவுக்கு எதிராக வந்துகொண்டு இருக்கின்றன.
சூர்யாவிற்கு குவியும் ஆதரவு கருத்துக்கள்
சூர்யா அவர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு மிகப்பெரிய அளவிலான ஆதரவு கிடைத்திருக்கிறது. குறிப்பாக கல்விக்கொள்கை குறித்த தனது பார்வையினை முன்வைக்க, கேள்வி எழுப்ப சூர்யாவிற்கு முழு உரிமை இருக்கிறது என மக்கள் நீதி மையம் கமல் ஹாசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிட கழக தலைவர் கீ வீரமணி, அன்புமணி ராமதாஸ் உட்பட பலரும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவிலான ஆதரவு சூர்யாவிற்கு குவிந்து வருகிறது. பிற நடிகர்கள் அமைதி காக்கும் போது சூர்யா இப்படிப்பட்ட கருத்தினை முன்வைத்ததற்காக அவரை பாராட்டி இருக்கிறார்கள்.
புதிய கல்விக்கொள்கை குறித்து சூர்யா பேச தகுதி இருக்கிறதா? அவரது பிள்ளைகள் அரசுப்பள்ளியிலா படிக்கிறார்கள்? என்ற மடத்தனமான கேள்விகளை முன்வைத்தவர்களுக்கு பின்வரும் பதில் நல்ல புரிதலை கொடுக்கும் என நம்புகிறேன்.
*Shared*
உம் புள்ள பிரைவேட்லதானே படிக்குதுன்னு சூர்யாவப் பாத்து கேக்கே!
அட நாயே, அவன் என்ன சொல்றான் தெரியுதா.. ’எனக்கு வசதி இருக்கு நான் படிக்க வைக்கிறேன்..
வசதி இல்லாதவன் எனன பண்ணுவான்? ‘அவன, அரசு கை விட்ருச்சி’ னு சொல்றான்..
அப்பறம் ‘மூணு மொழி கஷ்டம்’ னு சொல்றான். அது அவன் குழந்தைக்கும் பொருந்தும்.
அப்பறம் 3 வது, 5 வது, 8 வது ல பொதுத் தேர்வு இது தேவை இல்லாத ஆணி னு சொல்றான்..
அப்பறம் இவ்ளோ படிச்சும்.. கடைசியா பட்டயம் படிக்க, மருத்துவம் படிக்க ஒற்றை நுழைவுத் தேர்வு என்றால், என் பிள்ளையும் கடைக்கோடி கிராமத்துல இருக்குறவன் குழந்தையும் ஒன்னு இல்ல, ஒரே வாய்ப்பு கிடைக்கல, அப்பறம் எப்படி ஒரே தீர்வு..
அப்போ இவளோ நாள் படிச்சது என்ன மயிருக்கு னு கேக்குறான்..
சும்மா… ‘அவன் புள்ள அங்க படிக்குது அதனால அவன் பேசக்கூடாது’ னு சொல்ற நாயே… அரசு பள்ளில படிக்குற புள்ளையோட அப்பன் சொன்னா எத்தனை பேருக்குத் தெரியும்.
அதோடு அவன் ஆரம்பிக்கும்போதே சொல்றான். நான் படம் லாம் நடிச்சு கொஞ்சம் பிரபலம்; நான் சொன்ன நெறய பேருக்குப் போகும் னு சொல்றான், தெளிவா சரியா தன்னோட புகழைப் பயன் படுத்திருக்கான்..
சூர்யா கருத்துக்கு பாமரன் கருத்து?
இங்கே அரசு அல்லது அரசு சார்ந்த நிர்வாகம் அல்லது திட்டங்கள் இவற்றில் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டினால் அவர் அரசுக்கு எதிரானவர், எதிர்கட்சிகளோடு கூட்டணி வைத்திருப்பவர் என்பது போன்ற எண்ணத்தை உருவாக்கி விடுகிறார்கள். சூர்யா கருத்தும் அப்படித்தான் திரிக்கப்பட்டது. சூர்யா அகரம் அறக்கட்டளை மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு தன்னால் இயன்ற அளவிலான உதவியை செய்துவருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. நம் அனைவரை விடவும் அதிக எண்ணிக்கையிலான கிராமப்புற மாணவர்களை சந்திக்கிற வாய்ப்பும், கல்வியாளர்களை சந்திக்கிற வாய்ப்பும் அவருக்கு கிடைத்து இருக்கும் அல்லவா? அப்படிப்பட்ட ஒருவர் , கல்விக்கொள்கை சார்ந்த ஒரு கருத்தை முன்வைக்கிறார் என்றால் அதனை கவனிக்க வேண்டும்.
அவரது கருத்தில் தவறு இருந்தால் நீங்கள் சொல்லியவற்றில் இது தவறு, இதோ ஆதாரம் அல்லது புள்ளிவிவரம் என பதிலை கூற வேண்டும். பதில் எதனையுமே கூறாமல் உங்கள் படத்தின் டிக்கெட் விலையை குறைப்பீர்களா? நீங்கள் வன்முறையை தூண்டுகிறீர்கள் என பேசுவது எப்படி நியாயமாகும். சூர்யா கூறியது தவறு என்றே வைத்துக்கொள்வோம் : தமிழிசை அவர்கள் மத்தியில் இருக்கின்ற பாஜவின் மாநில தலைவர், கடம்பூர் ராஜு அவர்கள் தமிழக அமைச்சர். இவர்கள் நினைத்திருந்தால் உடனடியாக சூர்யாவின் கருத்துக்களுக்கு பதிலை திரட்டி வெளியிட்டு இருக்கலாமே? அதுதானே சரியான முறையாக இருக்க முடியும்.
சூர்யா பேசக்கூடாதென்றால் நாம்?
ஒரு மிகப்பெரிய திரைப்பிரபலம் சூர்யா அவர்கள் தனது கருத்துக்களை வெளியிட்டதற்க்கே இப்படிப்பட்ட எதிர்ப்புகள் என்றால் சாதாரண மனிதர்களால் எப்படி சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட முடியும். பொதுமக்கள் என்றால் அரசின் மீது ஆயிரம் குற்றசாட்டுகளை வைக்கத்தான் செய்வார்கள். பொதுமக்களின் பிரதிநிதியாகிய நீங்கள் அதற்கு விளக்கங்களை சொல்லவேண்டியது உங்களது கடமை. அதிலிருந்து மாறுபட்டு கேள்வி கேட்பவர்களை விமர்சிப்பதும் குறை கூறுவதும் விவேகமாக இருக்காது.
இனியாவது கேள்விகள் மதிக்கப்படுமா?
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!