சமையலில் அப்படி என்ன சாதித்துவிட முடியும், கொரோனவால் ஒன்றுமே செய்ய முடியவில்லை : இந்த இரண்டு சாக்கு போக்குகளை பயன்படுத்தி காலம் கடத்தியவர்களுக்கு சத்தமில்லாமல் பதில் சொல்லியிருக்கிறார் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சிறுமி லட்சுமி சாய் ஸ்ரீ
கொரோனா உலகம் முழுவதையும் முடக்கிப்போட்டது அனைவரும் அறிந்ததே. இந்த இக்கட்டான காலகட்டத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொண்டதாக சிலர் மட்டுமே கூறினார்கள். அவர்கள் தங்கள் தொழில் நிமித்தமாக வேகமாக சுழன்று வேலைபார்த்துக்கொண்டு இருந்தவர்கள். இந்த கொரோனா அவர்களுக்கு சற்று ஓய்வு அளித்தது. தங்கள் துறைகளில் திறனை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பாக இந்த ஓய்வை பயன்படுத்திக்கொண்டார்கள். அப்படித்தான் இந்த முடக்க காலத்தை சாதனைக்கான விளைநிலமாக மாற்றியிருக்கிறார் 9 வயதான லட்சுமி சாய் ஸ்ரீ.
கொரோனா முடக்க காலத்தில் தனது அம்மாவிற்கு சமையலில் உதவியாக இருந்திருக்கிறார். பிறகு அதில் ஈர்ப்பு ஏற்படவே சில சமையல் நுட்பங்களை கற்றுத்தேர்ந்துள்ளார். கொரோனா காலத்தில் மாணவர்கள் முடங்கிப்போய்விடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலமாக கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர்கள் வாங்கிக்கொடுக்கும் மொபைல் போன்களை பயன்படுத்தி பல மாணவர்கள் விளையாடவே செய்கிறார்கள். ஆனால் அதனையும் தாண்டி சாதித்து இருக்கிறார் லட்சுமி சாய் ஸ்ரீ.
இவருக்கு சமையலில் இருக்கும் ஆர்வத்தை உணர்ந்த இவரது அம்மா கூடுதலாக சமையல் கலைகளை கற்றுக்கொடுத்து யுனிகோ சாதனை முயற்சியில் அவரை ஈடுபடச்செய்தார். தமிழர்களின் பாரம்பரிய உணவுகளான கம்பு தோசை, கேழ்வரகு இட்லி, கேழ்வரகு புட்டு என பல்வேறு வகையான சிறுதானிய கொளுக்கட்டைகள், அசைவ உணவுகளான மீன் வருவல், இறால் வருவல், சிக்கன் 65 என அசத்தி இருக்கிறார். இவர் குறிப்பிட்ட 1 மணி நேரத்தில் 45 உணவுகளை சமைத்து அசத்தி சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றார்.
இந்த சாதனையில் இருந்து நாம் சில பாடங்களை கற்பிக்க வேண்டும். மாணவர்களாக இருக்கக்கூடிய இளம் பருவத்தினர் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தை வீணடிக்கக் கூடாது. இந்த ஓய்வு நேரத்தை உங்களது தனித்திறமைகளை வளர்த்தெடுக்க நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பெற்றோர்களின் பங்கும் இதில் இருக்க வேண்டும். பள்ளிகள் தான் மூடப்பட்டிருக்கிறதே என அலட்சியம் காட்டாமல் பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து அவர்களை அந்தத்துறையில் திறமைகளை வளர்த்தெடுக்க ஊக்கப்படுத்தி உதவ வேண்டும். வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. அதையே இந்த சிறுமியும் அவரது அம்மாவும் உணர்த்தி இருக்கிறார்கள்.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!