நடிகர் சூர்யாவுக்கு சப்போர்ட் செய்த 6 நீதிபதிகள்….அடடே!
நடிகரும் அகரம் அறக்கட்டளை மூலமாக பின்தங்கிய நிலையில் இருக்கும் ஏழை எளிய மாணவர்கள் கல்வி பயில்வதற்கு உதவிகரமாக இருபவருமான நடிகர் சூர்யா அவர்கள் நீட் தேர்வு குறித்து தனது ஆதங்கத்தை கடிதமாக வெளியிட்டார். இதில் நீட் தேர்வு மட்டுமல்லாது நீதிமன்றத்தின் நடவெடிக்கையையும் சாடி இருந்தார் சூர்யா.
பொதுமக்களின் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்த அந்தக் கடிதத்தில் நீதித்துறை குறித்து இடம் பெற்றிருந்த கருத்துக்கள் நீதிமன்றத்தை அவமதிப்பதாக இருப்பதாகவும் இதனால் அவர் மீது நீதிமன்றம் தானாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவேண்டும் எனவும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம். தற்போது 6 ஓய்வு பெற்ற நீதிபதிகள் சூர்யா மீது நடவெடிக்கை எடுக்க தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.
சூர்யாவின் கடிதம்
நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் ஏதுமில்லை. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.
அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.
தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாதப் பொருளாக மாறுகிறது. இறந்துபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள்.. அனல் பறக்க விவாதிப்பார்கள். நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது.
அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது. மாணவர்களின் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத நம் கல்விமுறையில், இனி பெற்றோர்களும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்கவேண்டும்.
நமது பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது. இந்த நியாயமற்ற தேர்வுகளுக்கு அவர்களைத் தயார்படுத்த துணை நிற்பது போலவே. மாணவர்கள் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளவும் தயார்படுத்த வேண்டும். அன்பு நிறைந்த குடும்பம், உறவு, நண்பர்கள் சூழ்ந்த அற்புதமான இந்த வாழ்விற்கு முன்பு, தேர்வுகளின் முடிவுகள் அற்பமானது என்பதை உணர்த்துவது முக்கியம்.
மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டும் காணிக்கையாக கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் கடந்து படித்து முன்னேறுகிறவர்களை பலியிட நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள். ஒரே நாளில் நீட் தேர்வு மூன்று மாணவர்களைக் கொன்று இருக்கிறது. இன்று நடந்ததே நேற்றும் நடந்தது. இனி நாளையும் நடக்கும்.
நாம் விழிப்புணர்வுடன் இல்லாமல் போனால் மீண்டும் மீண்டும் நடந்துகொண்டே இருக்கும். அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கக் கூடாது. சாதரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்.. வேதனையுடன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
6 நீதிபதிகளின் கடிதம்
தலைமை நீதிபதி அவர்களுக்கு,
இன்று காலை ஊடகங்கள் வாயிலாக ஒரு செய்தி அறிந்தோம், அதில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் எழுதியுள்ள கடிதம் குறித்த செய்தியை அறிந்தோம். நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அவரது அறிக்கையில், ‘கரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது’ எனப் பதிவிட்டுள்ளார்.
சூர்யாவின் இக்கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மையையும், சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. அவரது கருத்து தவறாகச் சித்தரிப்பது மட்டுமல்ல, நீதித்துறை குறித்த தவறான கருத்தை உருவாக்குவதாகவும் உள்ளது எனச் சுட்டிக்காட்டி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், அது நீதிமன்ற அவமதிப்புச் செயல் என உங்களுக்கு கடிதம் எழுதியுள்ளதை அறிந்தோம்.
சூர்யாவின் கருத்து குறித்து நீதிபதி சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளதுபோன்று எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறோம். 4 மாணவர்கள் மரணம் காரணமாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் கல்விக்கு உதவியுள்ளார். அவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்பை பெற்றுள்ள நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிடலாம்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதால், தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாமென கோரிக்கை விடுப்பது தங்கள் கடமை என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் உங்களுக்கு இந்த வேண்டுகோளை வைக்கிறோம்”.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக்கடிதத்தை சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், து.அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் இணைந்து அனுப்பியுள்ளனர்.
களமிறங்கிய நீதிமான்களுக்கு வாழ்த்துக்கள்
சூர்யா கூறியது காட்டமானது தான் என்றாலும் கூட அதில் உண்மை இருக்கவே செய்கிறது. சூர்யா போன்ற சமூக அக்கறை கொண்டவர்கள் இப்படி பேசுவதில் ஆச்சர்யம் இல்லை. நீதிமன்றமாவது _____ என சொன்னவர்களே சுதந்திரமாக திரிகின்ற நாட்டில் சூர்யாவிற்கு மட்டும் பொங்கிக்கொண்டு வருவதென்பது அர்த்தமற்றது.
சூர்யாவிற்காக ஓய்வு பெற்ற நீதிபதிகள் களமிறங்கி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. ஓய்வு பெற்றாலும் நீதியை காப்பாற்ற புறப்பட்டிருக்கும் நீதிபதிகளை பாமரன் கருத்து சார்பாக வாழ்த்துவதில் பெருமையே.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!