நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஒரு நல்லவன் தண்டிக்கப்பட்டு விட கூடாது
இந்த நோக்கத்தில் தான் ஒவ்வொரு நாடும் தனது நாட்டு அரசியலமைப்பு சட்டத்தை இயற்றுகின்றன, மேல் முறையீடு செய்வதற்கான வாய்ப்பினை வழங்குகின்றன. இந்தியாவை பொறுத்தவரை மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் இறுதியாக உச்சநீதிமன்றம் என பல படிநிலைகளை கொண்டிருக்கிறது. இது மிக சிறப்பான கட்டமைப்பு தான் .
ஆனால் வழங்கப்படுகிற தீர்ப்பு, அரசியல் அமைப்பு சட்டத்தின்படி இல்லாமல் நீதிபதிகளின் சுய சிந்தனைகளின் அடிப்படையில் அதிகமாக வழங்கப்படுகிறதோ என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்படுகிறது. அரசியல் சட்டத்தின்படி ஒரு தண்டனையோ தீர்ப்போ அளிக்கப்படுகிறது எனில் எந்த நீதிபதி விசாரித்தாலும் ஒரே தீர்ப்பைத்தானே வழங்கிட வேண்டும் அல்லது சிறு வேறுபாட்டுடன் தீர்ப்பு இருக்க வேண்டும்.
ஒரே சட்டப்புத்தகம் மாறுபடும் தீர்ப்புகள் :
மேல் முறையீடு செய்யும் போது சாட்சிகள் மாறலாம், வழக்காடும் விதம் மாறலாம் ஆகவே தீர்ப்பு மாறி வருவதில் கூட ஓரளவு நியாயம் இருக்கிறது. ஆனால் தற்போது 18 உறுப்பினர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த வழக்கினை இரண்டு நீதிபதிகள் விசாரிக்கிறார்கள். ஒரே சட்டப்புத்தகத்தை படித்தவர்கள், வழக்கறிஞர்கள் வாதாடுவதை இருவருமே ஒன்றாக பார்த்தவர்கள். ஆனால் இருவரும் வழங்குகின்ற தீர்ப்பு மட்டும் மாறுபட்டு இருக்கிறது.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் செய்தது சரி என தீர்ப்பளிக்கிறார்.
அடுத்த நீதிபதி எம்.சுந்தர், சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என தீர்ப்பளிக்கிறார்.
இதனை எந்த விதத்தில் நீதித்துறை நியாயப்படுத்தும்?
ஒருவேளை இந்திரா பானர்ஜி அவர்கள் மட்டும் விசாரித்து இருந்தால், இந்நேரம் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்தது சரியென்றாகி இருக்கும். தேர்தல் வந்திருக்கும்.
ஒருவேளை நீதிபதி எம்.சுந்தர் விசாரித்து இருந்தால், இந்நேரம் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியை பெற்று இருப்பார்கள். ஆட்சி கவிழ்ப்பு கூட நடந்திருக்கும்.
மூன்றாவது நீதிபதி சொல்வது மட்டும் சரியாகி விடுமா ?
இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பளித்ததால் முறைப்படி மூன்றாவது நீதிபதி தீர்ப்பளிப்பார். ஆனால் அவர் சொல்வது மட்டும் எப்படி சரியானதாக இருக்கும்? இந்நேரம் இரண்டு மூத்த நீதிபதிகள் விசாரித்து மாறுபட்ட தீர்ப்புகளை அளித்திருந்தால் இறுதியாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மூன்றாவது நீதிபதியாக வந்திருந்தால், சபாநாயகர் செய்தது சரி என்பார். நீதிபதி எம்.சுந்தர் விசாரித்து இருந்தால் தவறு என்பார்.
அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும்
இவ்வளவு முன்னேறிய சமூகத்தில், இவ்வளவு பிரச்சனைகள் நடக்கும் சமூகத்தில், இது நடந்தால் இது தான் தீர்ப்பு என வரைமுறை படுத்த முடியாதா என்ன? நிச்சயமாக முடியும். தற்போது தமிழகத்தில் நடக்கும் பிரச்சனை கர்நாடகாவில் ஏற்கனவே நடந்திருக்கிறது. அப்படியானால் அப்போதே இதற்க்கு ஒரு வரைமுறையை ஏற்படுத்தி இருந்தால் மிகவும் எளிதாக முடிந்திருக்கும். ஒரே நாளில் எளிமையாக விசாரித்து முடித்திருக்க வேண்டிய வழக்கு பல மாதங்களாக நடப்பது என்பது அநியாயத்தின் உச்சம்.
இந்த பிரச்சனைக்கு இதுதான் தீர்வு என இருந்தால் சபாநாயகர் தவறாக செயல்பட மாட்டார். நீதிபதிகளும் தங்களது விருப்பப்படி தீர்ப்புகளை வழங்கிட முடியாது.
பணக்காரன் மேல்முறையீடு செய்து பிழைத்துக்கொள்கிறான், ஏழை எளியவன் டெல்லிக்கு போக வசதியில்லாமல் வெற்றியோ தோல்வியோ ஏற்றுக்கொண்டு வாழ்கிறான். இதுதான் இந்தியாவின் தற்போதைய நிலைமை.
பாமரன் கருத்து