பல பாதிப்புகளை உண்டாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் போராட்டங்கள் தொடங்கி (மே 22) 100 நாள் ஆகப்போகிற சூழ்நிலையில், நூறாவது நாளில் மாவட்ட ஆட்சி தலைவர் ஆலையை முடிவிடுவோம் என உத்திரவாதம் அளித்திட வேண்டும். இல்லையேல் மே 22 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முற்றுகையிடப்படும் என அறிவித்தனர் ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழுவினர்.
இதற்கிடையில் மே 22 அன்று இப்படி ஒரு மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்பதை அறிந்திருந்த ஆட்சித்தலைவர் SAV விளையாட்டு திடலில் கூடுவதற்கு அனுமதி அளித்ததோடு 144 தடை உத்தரவையும் போட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் மே 22 க்குள் எந்த உறுதிமொழியையும் தராதபட்சத்தில் கிட்டத்தட்ட 1 லட்சம் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். ஏற்கனவே விதித்திருந்த 144 தடை உத்தரவை மீறி அமைதியாக சென்றனர் பொதுமக்கள்.
தடுத்த காவல்துறை, எகிறிய பொதுமக்கள் :
பாளையம்கோட்டை சாலை மார்க்கமாக பொதுமக்கள் பேரணியாக சென்று கொண்டிருக்கையில் காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தியது. தடுத்து நிறுத்தியவுடன் போலீசை மீறி பொதுமக்கள் செல்ல முற்பட அவர்களை கட்டுப்படுத்த லத்தி சார்ஜ் செய்தனர் போலீசார். அதுவரை அமைதியாக சென்று கொண்டிருந்த ஊர்வலம் கட்டுப்பாடற்ற கலவரமாக மாற ஆரம்பித்தது.
போலீசாரின் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன, தடுப்பு வேலிகள் அனைத்தும் பொதுமக்களால் சூறையாடப்பட்டன.
போராட்ட குழுவினரில் சிலர் ஏற்கனவே பெட்ரோல் குண்டுகளுடன் வந்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.யார் இவர்கள் ? பொதுமக்களாக இருக்க வாய்ப்பே இல்லை .
பற்றி எரிந்த போராட்டக்களம், போலீசார் துப்பாக்கி சூடு :
மாவட்ட ஆட்சி தலைவரின் அலுவலகம் தீவைக்கப்பட்டதாகவும் போராட்டகாரர்கள் பல இடங்களில் போலீசாரையே அடிக்க விரட்டி சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இதனை சமூக வலைத்தளங்களில் வெளியான சில வீடியோக்கள் உறுதிப்படுத்தின.
போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறிடும்போது ” போலீசார் எங்களது பெண்களையும் குழந்தைகளையும் கண்முடித்தனமாக தாக்கிடும் போது எங்களால் எப்படி வேடிக்கை பார்க்க முடியும். முதலில் பொதுமக்களின் மீது தாக்குதலை ஆரம்பித்தவர்கள் போலீசாரே” என்றார் [Source : The news minute]
போலீசாரின் தடியடி, கண்ணீர் புகை குண்டு அத்தனையையும் தாண்டி பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டதால் அமைதியை கொண்டுவர போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக முதல்வர் அறிவித்து இருக்கிறார்.
இப்படியா சுடுவார்கள் காக்கையை போல :
முழங்காலுக்கு கீழே ரப்பர் குண்டுகளால் சுடாமல் எல்லையில் எதிரிகளை சுட்டு வீழ்த்துவதைப்போல கொன்றது எதனால் ?
ஒரு லட்சம் மக்கள் பங்கேற்ற அமைதியான பேரணி போலீசார் தடுத்தவுடன் இவ்வளவு பெரிய கலவரமாக மாறும் என எவரும் அறிந்திருக்கவில்லை. போலீசாரை பொதுமக்கள் துரத்துகின்ற பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கின்றன.
இதனால் போலீசார் துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டனர். பொதுவாக ஒரு கலவரத்தை அடக்க முடியவில்லையெனில் போலீசாரின் கடைசி முயற்சியாக இருப்பது துப்பாக்கி சூடுதான். தங்களை தாக்க பொதுமக்கள் திரண்டு வரும்போது கலவரம் கட்டுப்பாடற்று போகும்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்துவது தவறானது என கூற முடியாது.
ஆனால் 12 பேர் உயிரிழக்கும் அளவிற்கு 25 பேருக்கு மேல் படுகாயம் அடையும் அளவிற்கு துப்பாக்கி சூடு நடத்தியிருப்பது என்பது மிக கொடுமையானது. யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியாதது.
முழங்காலுக்கு கீழே ரப்பர் குண்டுகளால் சுடாமல் எல்லையில் எதிரிகளை சுட்டு வீழ்த்துவதைப்போல கொன்றது எதனால் ?
இதுதான் காவலர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கக்கூடிய அதிகாரமா ?
அலட்சியமான அரசு, அடங்காத பொதுமக்கள் :
மிக அதிக அளவில் மக்கள் கூடுவார்கள் என்பது தெரிந்தும் அவர்களை முறையாக கையாளாமல் இப்படி கலவர பூமியாக மாற்றியிருப்பது என்பது காவல்துறையின் நிர்வாக தோல்வியையே காட்டுகிறது. எப்போதும் சிறு கூட்டங்கள் நடைபெற்றாலே போலீசாரை குவித்துவிடும் காவல்துறை இந்தமுறை போதுமான போலீசாரை களத்திற்கு அனுப்பாமல் போனதால் தான் காவல்துறையால் வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் துப்பாக்கி சூடு வரை செல்ல காரணம். இது தற்செயலா அல்லது நோக்கமே அதுதானா என தெரியவில்லை .
பொதுமக்களுக்கும் தற்போது நடந்த கலவரத்தில் பெரும்பங்கு இருக்கிறது. நீங்கள் ஒரு கோரிக்கைக்காக அரசை வலியுறுத்தி போராடிக்கொண்டிருக்கும்போது அதனை அடக்கவே அரசாங்கம் முயலும். சட்டம் ஒழுங்கினை பாதுகாக்க வேண்டியது காவல்துறையின் பணி. உடனடியாக காவல்துறையை எதிரியாக கருதி அவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்த முயல்வது என்பது முற்றிலும் தவறானது.
சாதரண பொதுமக்கள் வன்முறையில் இறங்க வாய்ப்பில்லை . அப்படியானால் திட்டமிடபட்டு அரங்கேற்றப்பட்டதா இந்த வன்முறை
போலீசாரும் பொதுமக்களை மதித்து செயல்படுதல் அவசியம். ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்படுவது போலீசாரின் குடும்பமும் தான். ஆகவே பொதுமக்கள் போராட்ட களத்திற்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் நமக்காகவும் தான் போராடுகிறார்கள் என்பதனை உணர வேண்டும். அவர்களை காக்கைகளை போல சுட்டு தள்ளுவது என்பது ஏற்றுக்கொள்ள கூடியதே அல்ல.
இத்தனை பெரிய நிர்வாக தோல்வியை சந்தித்த பிறகு தமிழக முதல்வர் அவர்களோ இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாயும் அரசாங்க வேலையும் காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 லட்சம் ரூபாயும் அறிவித்து இருக்கிறார். ஒவ்வொரு முறையும் உயிரிழப்புகள் ஏற்பட்டால் இதுபோன்று பிச்சை போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறது அரசு.
இறப்பினை தடுப்பதற்கு தான் அரசு இருக்கிறதே அன்றி இறந்த பின்பு நிவாரணம் கொடுப்பதற்கு அல்ல.
தற்போது நடந்திருக்கும் இந்த கொடூர சம்பவத்திற்கு அலட்சியமான அரசு, அடங்காத மக்கள், அத்துமீறிய அரசு தான் காரணம்.
பாமரன் கருத்து