Site icon பாமரன் கருத்து

“தூங்குவதற்கா” 100 நாள் வேலை திட்டம் | யாரை ஏமாற்றுகிறோம்?


அரசு அதிகாரிகள் சரியாக வேலை செய்யாவிட்டால் “திட்டுகிறோம்”, அரசியல்வாதிகள் சரியாக வேலை செய்யாவிட்டால் “திட்டுகிறோம்”. ஆனால் மக்களாகிய நாம் சரியாக வேலை செய்கிறோமா?. இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது, பெரும்பாலான கிராமத்து மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய “100 நாள் வேலை திட்டத்தில் சரியாக வேலை செய்யாமல் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் இழிவு நிலையைத்தான் பார்க்க இருக்கிறோம்”.

குற்றம் சொல்வதற்கான பதிவு அல்ல இது, மக்களுக்கும் நேர்மை இருக்க வேண்டும் என்ற நோக்கிலான பதிவு. பகிருங்கள்


 

கடந்த வாரம் சென்னையிலிருந்து எனது சேலத்தில் உள்ள கிராமத்திற்கு சென்றிருந்தேன். வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் வீட்டை அடைந்தேன். அம்மா வழக்கம்போல் விழித்திருந்தார்கள். “வா கண்ணு, எப்படி இருக்க? ஏன் இப்படி இளைச்சிபோயிருக்க” என்று வழக்கமாக கேட்டார்கள். இதழில் சிறு புன்னகையுடன் “ம். நல்லா இருக்கேன்.” என்று கூறிவிட்டு என்னுடைய பையை இறக்கி வைத்தேன். அருகில் வாசல் கூட்டிக்கொண்டிருந்த பாட்டியோ “ஊரிலிருந்து இப்போதான் வரியா? மெட்ராஸ் எல்லாம் எப்படி இருக்கு?” என கேட்க “நல்லாயிருக்கு” என கூறிவிட்டு, முந்தையநாள் இரவு முழுவதும் பிரயாணம் என்பதால் சரியாக தூங்கவில்லை. அருகில் உள்ள கட்டிலில் அப்படியே படுத்துவிட்டேன்.

 

100 நாள் வேலை திட்டம்

 

உறங்கிய சற்று நேரத்தில் “ஏய் சீக்கிரம் வாடி, மேனேஜர் வந்துடுவான். 9 மணிக்கெல்லாம் போகலேனா ஓவரா பேசுவான்” என்ற குரல் கேட்டது. அதற்கு மறுமுனையில் “இருக்கா, வந்துடறேன். இந்தப்பையன் வேற ஸ்கூலுக்கு போகமாட்டேனு அடம்புடிக்கிறான். போய்த்தொலைடா, நீயாவது ஒழுங்கா படிச்சி நல்ல வேலைக்கு போ. இல்லேனா, உங்கொப்பன் மாதிரி நீயும் கஷ்டபடுவ.” என்ற புலம்பல் கேட்டது. அவர்களுடன் இன்னும் சில பெண்களும் அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்தனர். எங்கே இவர்கள் செல்கிறார்கள்? என்று அம்மாவிடம் கேட்டேன். “அவங்க எல்லாரும் 100 நாள் வேலைக்கு போறாங்க. எப்பவும் 10 மணிக்கு மேலதான் போவாங்க. இன்னைக்கு யாரோ மேனேஜர் வராங்களாம். அதனால சீக்கிரமா போறாங்க. மேனேஜர் போனதும் கொஞ்ச நேரம் வேளை செஞ்சிட்டு, ஒரு 2 மணிநேரம் அங்கேயே இருந்துட்டு வந்துடுவாங்க.” என்று கூறி முடித்துவிட்டு கட்டுத்தாரை க்கு சென்றாள்.

சிறிது நேரம் கழித்து நண்பனொருவன் வீட்டிற்கு வந்தான். “வா மாப்ள. எப்படி இருக்க?” என்று கேட்க, அவனோ ” ஏதோ இருக்கன் மாப்ள.” என்றான் விரக்தியுடன். “ஏன்டா! அப்படி என்ன ஆச்சு? சொந்த ஊர்ல சொந்தவீட்ல இருக்க. மாசம் பத்தாயிரம் கிட்ட சம்பளம் வேற வருது. உனக்கு என்ன கொறச்சலு” என்று கேட்டதற்கு, “அட ஏன் மாப்ள, நீ வேற கிண்டல் பண்ற. பையனுக்கு ஸ்கூல் பீசு, கரண்டு பில், மளிகை சாமான் அப்புறம் மாசாமாசம் ஆஸ்பித்திரி செலவுனு, மாசம் பதினையாயிரம் ஆயிடுது. அதனாலதான், அவள (நண்பன் மனைவி) 100 நாள் வேலைக்கு அனுப்பலாம்னு விஏஓ-வ பாக்க போறேன். மொதல்ல ஒரு நாளைக்கு ரூ.133 கொடுத்துட்டு இருந்தாங்க. இப்போ ரூ.224 கொடுக்கறாங்க.

1 மாசமா இந்த அப்ளிகேஷனை வச்சிட்டு அலையிறன், கையெழுத்தே வாங்க முடியல. இப்போ அது விஷயமாதான் போயிட்டு இருக்கேன். நீயும் வரியா” என்றான். நானும் “சரி. வா போலாம்” என்று கூறிவிட்டு இருவரும் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்றோம். செல்லும் வழியில் 100 நாள் வேலைவாய்ப்பு பற்றி இணையத்தில் சிறிது தேடிப்பார்த்தேன். அவற்றில் சில:
” தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் (அ) 100 நாள் வேலை திட்டம் என்பது பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு (18 வயது நிரம்பியவர்கள்), அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய சிறப்புத்திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

>>கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் வகையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

>> 18 வயது நிரம்பிய திறன் சாரா உடல் உழைப்பு செய்ய விரும்பும் கிராமப்புற நபர்கள், தங்கள் பெயர், வயது மற்றும் முகவரியை தங்கள் புகைப்படத்துடன் வந்து கிராம பஞ்சாயத்திடம் விண்ணப்பிக்கலாம்.

>> தகுதி வாய்ந்தோருக்கு அரசாங்கத்தால் பணி அட்டை வழங்கப்படும். பணி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள நபரின் விவரங்கள் மற்றும் முகவரியைக்கொண்டு, 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு உட்பட்டு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

> இத்திட்டம், தகுதி வாய்ந்தோருக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு வேலை வழங்கப்படும் என உறுதி அளிக்கிறது.

> இத்திட்டத்தின் மூலம் ஊரக ஏழை மக்களின் வேலைக்கான உரிமை நிலை நாட்டப்படும் மற்றும் ஊரக பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.

> கிராமப்புற சமூகப் பொருளாதார உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

> நிழல் தரும் மரங்கள், பயன் தரும் மரங்கள் ஆகியவை நட்டு இயற்கை வளம் மேம்படுத்தப்படும்.”

 

பரவாயில்லையே, இவ்வளவு சிறப்புகள் இத்திட்டத்தில் உள்ளனவா என்றெண்ணிக்கொண்டிருந்தேன். சிறிது தூரத்தில் இருசக்கர மோட்டார் சைக்கிள் வரும் சத்தம் கேட்டது. விஏஓ வண்டியிலிருந்து இறங்கினார். சற்றே மிடுக்குடன் பஞ்சாயத்து அலுவகத்தில் நுழைந்தார். மேசையில் வைக்கப்பட்டுள்ள சில கோப்புகளை பார்த்துவிட்டு “2 நாள் கழித்து வந்து பாருங்கள்” என்று கூறிவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்றார். அருகிலுள்ள ஒரு தேனீர் கடைக்கு சென்று, “2 காபி, ஒன்னுல சக்கரை அதிகமா கொடுங்க” என்று சொல்லிவிட்டு அமர்ந்திருந்தோம். மனம் மட்டும் 100 நாள் வேலைத்திட்டம் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தது. காபியை குடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்லலாமென முடிவு செய்தோம்.

 

 

போகும் வழியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்களில் சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். சிலர் பாதையோரம் காய்ந்து கிடைக்கும் செடி மற்றும் முட்களை களைந்து கொண்டிருந்தனர். இன்னும் சிலரோ தோள்மீது மண்வெட்டிகளை குழந்தைகளைப்போல் சுமந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தனர். “என்ன மாப்ள, 100 நாள் வேலைனு சொன்ன! ஆனா ஒருத்தரும் வேலை செய்றமாதிரி தெரில. எல்லாரும் அங்கொன்னும் இங்கொன்னுமா நின்னுட்டு இருக்காங்க?” என்று கேட்டதற்கு, “ஆமா மாப்ள. காலைல 9, 10 மணிக்கு போகணும். 2 மணிநேரம் வேலை. ரொம்ப கஷ்டப்படலாம் வேண்டாம். மதியம் வீட்டுக்கு வந்துடுவாங்க. பையன ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, வீட்டுவேலை முடிச்சிட்டு சும்மா இருக்கற நேரத்துல போயிட்டு வரட்டும்னுதான் அவளுக்கு இந்த அப்ளிகேஷன வாங்குனேன். ஆனா, இந்த விஏஓ’கிட்ட ஒரு கையெழுத்து வாங்குறதுக்குள்ள போதும்னு ஆயிடுது” என்றான்.


நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோமே?

நமது வயலில் வேலை செய்யும் போது எவ்வளவு வேகமாக வேலை செய்கிறோம், நாம் கூலிக்கு அழைத்து வந்த ஆட்கள் சரியாக வேலை செய்யாமல் போனால் எவ்வளவு நொந்துகொள்கிறோம். 100 நாள் வேலை என்பது எவ்வளவு மகத்தான வேலை திட்டம். உங்களுக்கு பயனளிக்க போகும் குளத்தை தூர்வார அரசு சம்பளம் கொடுக்கிறது. நம் குளத்தை நன்றாக வெட்டினால் நமக்குத்தானே நன்மை என்று நம்மில் எத்தனை பேர் நினைத்து உண்மையாக வேலை செய்கிறோம்.

சிலர் உண்மையாக வேலை செய்தால் அவர்களுக்கு “பெரிய சல்யூட்”.

அரசு அதிகாரிகளை, ஆட்சியாளர்களை, அரசியல்வாதிகளை திட்டுவதற்கு முன்பாக நாம் முதலில் சரியாக செயல்பட வேண்டும். மாற்றத்தை உங்களில் இருந்து துவங்குங்கள். நமக்காக வேலை செய்கிறோம் என எண்ணுங்கள். வாங்குகிற சம்பளத்திற்கு உண்மையாக உழைத்திடுங்கள்.

இந்த பதிவு நல்ல பதிவாக தோன்றினால் பிறருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


நன்றி,

வினோத் குமார்

Exit mobile version