Site icon பாமரன் கருத்து

வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு : பாடத்திட்டத்தில் திருக்குறள் : உயர் நீதிமன்றம் புது உத்தரவு

எஸ்.ராஜரத்தினம் என்கிற ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உயர்நீதிமன்ற கிளையில் ஒரு வழக்கை தாக்கல் செய்கிறார். ‘தற்போதைய சூழலில் சமுதாயத்தில் ஒழுக்கமும் நன்னடத்தையும் குறைந்து வருகிறது. குறிப்பாக இளைய சமுதாயத்திடம் ஒழுக்கம் பற்றிய சிந்தனை நன்னடத்தை, பெரியோரை மதித்தல் பெரிதும் குறைந்துள்ளது.

இதனால் இளைய சமுதாயத்துக்கு குறிப்பாக ஆறாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு திருக்குறளி
ல் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள அனைத்து குறட்பாக்களையும் பயிற்றுவிக்க வேண்டும்.இளம் பிராயத்தில் திருக்குறள் பயிற்றுவிக்கப்பட்டால் நேர்மையும், ஒழுக்கமும் உள்ள சமுதாயம் உருவாகும். சமீப காலத்தில் இளம் சிறார்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது பெருகி உள்ளது.
அவர்களை சீர்த்திருத்த இளம் பருவம் தொட்டே திருக்குறளை பயிற்றுவிற்றால் நாளைய சமுதாயத்தின் சிறந்த குடிமக்களாக அவர்கள் வருவார்கள். இதனால் திருக்குறளை முழுவதுமாக பள்ளி மாணவர்களுக்கு விளக்கமாக கற்பிக்க உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

வழக்கம் போலவே அரசு வழக்கறிஞர் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து ‘ஏற்கெனவே மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் திருக்குறள் சேர்க்கப்பட்டுள்ளது. அதை தவிர்த்து வேறு பல இலக்கியங்களும் கற்பிக்கப்படுகிறது. அரசின் கொள்கை முடிவில் இதுபோன்ற கோரிக்கைகளை ஏற்க முடியாது. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.

முடிவில் வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் திருக்குறளை விரிவான விதத்தில், மணப்படப் பகுதி என்ற குறுகிய அளவில் இல்லாமல், உரிய விளக்கங்களுடன், அனைத்துக் கூறுகளும், அலசப்பட்டு, மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் போது அவர்களின் அறிவும் ஞானமும் மேம்படும். இன்றைக்கு சமுதாயத்தில் பெரும் பிரச்சினைகளாக இருக்கக்கூடிய பயங்கரவாதம், கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் குற்றங்கள், வேலையின்மை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், மதுவின் பாதிப்பு ஆகியவற்றை தெளிவாக உணர்ந்து, இளைய சமுதாயத்தினர் தங்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்திக்கொள்வார்கள். எனவே உலகப்பொதுமறையாம் திருக்குறளை பாடத்திட்டத்தில் சேர்க்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பினை அரசு ஏற்று திருக்குறளை பாடத்திட்டத்தில் சேர்த்து அவர் நினைத்தது போலவே  அனைத்து மாணவர்களும் நன்னடத்தையுடன் வாழ இந்த அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.

நன்றி
ஸ்ரீ 

Exit mobile version