மடிந்த மனிதாபிமானம் – இதுதான் வளர்ச்சியா ?இன்று நாம் காணும் நிகழ்வுகள் மனிதர்களிடம் மனிதாபிமானம் குறைத்துவிட்டதுபோலவே எண்ண தோன்றுகிறது. கல்வி, அறிவியல், வானியல் என பலவற்றிலும் முன்னேற்றம் கண்டிருக்கும் மனித இனம் வன்முறைகளாலும் கொலைகளாலும் நிரம்பி தழும்புவது வேதனை அளிப்பதாகவே இருக்கிறது.
கற்பழிப்பு மற்றும் கொலை :
நாகரிகம் வளர்ந்துவிட்டதாக நாம் கூறிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் கற்பழிப்பு, கொலை அதிகரித்துள்ளது.
உதாரணமாக சில மாதங்களுக்கு முன்பாக ஹாசினி என்கிற சிறுமியை தஸ்வந்த் என்கிற இளைஞர் கற்பழித்து எரித்து கொன்றார். அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த கொஞ்ச நாட்களில் தனது தாயையே கொலை செய்துவிட்டு நகை பணம் முதலியவற்றை எடுத்துக்கொண்டு மும்பைக்கு ஓட்டம் பிடித்தார். தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
நாமும் நமது அரசாங்கமும் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றே எண்ணுகிறோம். ஆனால் பொறியியல் பட்டம் பெற்ற ஒரு இளைஞர் ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு கொலை செய்யும் அளவிற்கு சென்றிருக்கிறார் என்றால் அவர் கற்றது என்ன ? நமது கல்வி முறை அவருக்கு கற்பித்தது என்ன ?
அதிகரிக்கும் ஆணவ கொலை :
” சாதிகள் இல்லையடி பாப்பா ” என்று பாடம் சொல்லி கொடுக்கிறோம். சமத்துவத்தை பற்றி பேசுகிறோம். ஆனால் ஆணவ கொலைகள் நடந்துகொண்டே இருக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பாக சங்கர் – கவுசல்யா மீது ஆணவ கொலை முயற்சி கவுசல்யாவின் பெற்றோரால் நடந்தது. அதில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். கவுசல்யா பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி மீண்டிருக்கிறார். (இந்த வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனை அளிக்கப்பட்டது)
வெறும் சாதி என்கிற ஒற்றை நிலைப்பாட்டுக்காக தான் பெற்றெடுத்தது வளர்த்த மகளையே கொலை செய்யும் அளவிற்கு முயன்று இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த செயலை செய்யும் அளவிற்கு மன வலிமையை அளித்தது எது?
வன்முறையை விரும்பும் நாடுகளும் தலைவர்களும் :
அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவித்தார். இதனை பல முஸ்லீம் நாடுகள் கண்டித்துள்ளன. அமெரிக்க அதிபரான டிரம்ப் அவர்களுக்கு “பாலிஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் ஜெருசலேமை தலைநகராக அறிவித்தால் மற்ற நாடுகள் எப்படி கொந்தளிக்கும் அதனால் எவ்வளவு பிரச்சனைகள் நடக்கும் என்பதும் தெரியாமல் இருக்காது”. ஆனால் அத்தனையும் தாண்டி இதனை அறிவிக்க காரணம் என்ன ? வன்முறையை விரும்பும் மனநிலையா ?
அகதிகளாக அலையும் மனிதர்கள் :
பூமி மனிதர்களுக்கானது என்பதே உண்மை . இது உண்மையானால் அகதிகள் என்ற ஓர் இனம் இருந்துகொண்டே இருப்பது ஏன் ?
அண்மையில் மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளால் அகதிகளாக அவர்கள் வங்கதேசம் சென்றனர் . இந்த தாக்குதலில் சிறுவர்கள் உட்பட பலர் இறந்தனர் . இன்றும் இவர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர் இயல்பான வாழ்க்கைக்கு .
வளர்ந்த முன்னேறிய தேசத்தில் அகதிகள் இருக்கலாமா ?
மோதும் வடகொரியா அமெரிக்கா :
அமெரிக்காவிற்கும் வடகொரியாவுக்கும் இடையில் மோதல் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது. அமெரிக்காவை அழிக்க வடகொரியாவும் வடகொரியாவை அழிக்க அமெரிக்காவும் முனைப்பு காட்டி வருகின்றன. ஆனால் இந்த இரண்டு நாடுகளின் தலைவர்களும் அவர்களின் நாடுகளில் இருக்கும் சாதாரண மக்களின் நிலை குறித்து எண்ணியிருந்தால் இவ்வாறு போர் பற்றி சிந்திக்க முடியுமா ?
என்ன காரணம் & தடுப்பது எப்படி ?
நகரங்களையும் தொழிற்சாலைகளையும் நிர்மாணிக்கும் அரசுகள் மக்களின் மனநிலை இவ்வாறு ஆனதற்கான காரணம் என்ன என்பதை ஆராய முன்வர வேண்டும்.
கல்வியறிவை மட்டும் மாணவர்களுக்கு கொடுப்பதை இனிமேலாவது மாற்றிக்கொண்டு மாணவர்களுக்கு மனநல கல்வியை போதிக்க வேண்டும்.
நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தும் தலைவர்கள் வன்முறையை விதைக்காமல் சமாதானத்தை முன்னிறுத்துபவர்களாக இருந்திடல் வேண்டும்.
போர் என்பது சாதாரணமல்ல அதனால் ஏற்படும் இழப்புகள் சாதாரணமல்ல என்பதை மக்களும் உணர வேண்டும்.
வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை மக்கள் உணரவேண்டும்.
நன்றி
பாமரன் கருத்து