Site icon பாமரன் கருத்து

அரசியல் பழகு தோழா! – திமுகவை எதிர்த்தாலும் வென்றவுடன் பெரியாரை சந்தித்த அண்ணா எதற்க்காக?

திமுகவை எதிர்த்தாலும் வென்றவுடன் பெரியாரை சந்தித்த அண்ணா எதற்க்காக?

 

“அரசியல் சாக்கடை ” என்றே நமது பிள்ளைகளுக்கு கற்பிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால் அந்த சாக்கடைக்குள் எடுக்கப்படும் முடிவுகள் தான் நம் அன்றாட வாழ்வையே தீர்மானிக்கின்றன என்பதை நம்மால் மறுத்துவிட முடியாது. அதற்காக தான் அரசியல் பழகு தோழா மூலமாக சிறந்த அரசியல் நிகழ்வுகளை உங்களுக்காக எழுதி வருகிறேன்.

திமுகவை எதிர்த்த பெரியார் :

பெரியார்

இன்று திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் பெரியாரின் புகைப்படத்தை தங்களது முன்னோடிகளின் வரிசையில் முதன்மையாக போட்டிருப்பதை காண முடிகின்றது. ஆனால் பெரியார் எந்த சூழ்நிலையிலும் அண்ணாவையோ திராவிட முன்னேற்ற கழகத்தையோ ஆதரிக்கவில்லை என்பதே உண்மை.

ஆனால் அண்ணாவும் திமுகவும் பிறகு MGR அவர்களால் உருவாக்கப்பட்ட அதிமுகவும் பெரியாரின் கொள்கைகளை பெற்றுக்கொண்டே வளர்ந்தன என்பதும் உண்மை.

முதன் முதலாக ஆட்சியை பிடித்த திமுக :

பிப்ரவரி 1967 ஆம் ஆண்டு தான் திமுக முதன் முதலாக பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது. குறிப்பாக இந்த தேர்தலில் பெரியாரின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கே இருந்தது. திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தார் பெரியார். இருந்தாலும் 138 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக கோட்டையை கைப்பற்றியது. இந்த தேர்தலில் தான் காமராஜர் அவர்களை திமுக வேட்பாளர் சீனிவாசன் என்பவரிடம் தோற்றுப்போனார்.

பெரியாரை சந்திக்க விரும்பிய அண்ணா மற்றும் பலர் :

கோட்டையை கைப்பற்றியவுடன் அண்ணா உட்பட பலரும் பெரியாரை சந்திக்க வேண்டும் என விரும்பினர். 29 பிப்ரவரி 1967 அன்று அண்ணா ,கருணாநிதி ,நெடுஞ்செழியன் மூவரும் பெரியாரை சந்தித்து வாழ்த்துபெற்றனர். மேலும் இனி தாங்கள் தான் எங்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

 

தோல்வியை ஒப்புக்கொண்ட பெரியார் :

அண்ணாவின் பண்பில் நிலைகுலைந்து போன பெரியார் அண்ணாவின் கைகளை பற்றிக்கொண்டு “என்னுடைய பாராட்டுகளும் அன்பும் உங்களுக்கு என்றும் உண்டு. உங்களை தோற்கடிக்க எவ்வளவோ முயன்றேன். நீங்கள் வென்றுவிட்டிர்கள் நான் தான் தோற்றுப்போனேன் என்றார்.

பிறகொரு சமயத்தில் அண்ணாவை பற்றி பெரியார் பேசும்போது ” தனக்கென தனியாக கொள்கைகளை ஏற்படுத்தி அதன்பேரில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர் லெனின் மட்டுமே” என்று லெலினோடு அண்ணாவை ஒப்பிட்டு பேசினார் பெரியார்.

கற்றுக்கொள்ளவேண்டியது என்ன :

அண்ணா மற்றும் பெரியார்

அண்ணாவால் பெரியாரை எதிர்த்திருக்க முடியும், அவரை விமர்சித்திருக்க முடியும். ஆனால் நினைவில் கொள்ளுங்கள் பெரியாரிடம் மக்கள் விரும்பும் கொள்கைகள் இருந்தன, ஆனால் அவர் ஆதரித்த காங்கிரஸ் க்கு அது இல்லை. ஆகவே பெரியாரே ஆதரித்தாலும் காங்கிரஸ்க்கு ஓட்டு போடுவோர் குறைவே.

அதே நேரத்தில் பெரியாரின் கொள்கைகளோடு ஒத்து போகின்ற ஒரே அரசியல் கட்சி திமுக. பெரியாரை திமுக விமர்சிக்குமேயானால் பெரியார் ஆதரவாளர்கள் கோவத்தில் காங்கிரஸ்க்கு வாக்களிக்க வாய்ப்புண்டு. அந்த தவறை அண்ணாவும் திமுகவும் செய்யவில்லை. இதுதான் அரசியல் விளையாட்டு. இதனை உணர்ந்தே அண்ணா மிக சாதுரியமாக செயல்பட்டு வென்றார்.

பெரியார் அவர்கள் அண்ணாவையும் திமுகவையும் எதிர்த்த போதும் வெற்றி அடைந்த உடன் பெரியாரிடமே ஆசீர்வாதம் வாங்க சென்றாரே அண்ணா. இது எப்படி சாத்தியம் …இன்று கட்சி மாறிவிட்டாலே எவ்வளவு பேசுகிறார்கள் என்னென்ன பேசுகிறார்கள். ஆனால் அண்ணா துளியும் அவ்வாறு செய்திடவில்லை .

அவர் பெரியார் மீது வைத்திருந்த மரியாதையையும் கொள்கை பிடிப்பினையும் என்றைக்குமே மறந்திடவில்லை.அதனால் தான் அண்ணாவால் பெரியாரை விமர்சிக்க எதிர்க்க முடியவில்லை. அதுதான் அண்ணாவை மிகப்பெரிய தலைவராக நிறுத்தியிருக்கிறது வரலாற்றில்.

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version