Site icon பாமரன் கருத்து

தொடரும் தமிழகத்தின் தர்ம யுத்தம் ?

தொடரும் தமிழகத்தின் தர்ம யுத்தம்

தமிழகத்தில் தற்போது நடக்கின்ற அரசியல் செயல்பாடுகள் மற்றும் அதனால் நீதிமன்றங்களில் நிற்கும் வழக்குகள் , தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் என அனைத்துமே புதிதாகவும் புதிராகவும் முன்னுதாரணமாகவும் இருந்து வருகின்றது .
நடக்கிற அனைத்தையும் செய்வது பாஜக என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள் . ஆனால் இவர்களின் கரங்களும் உள்ளங்களும் கரை படாமல் இருந்தால் எதற்க்காக பாஜகவின் இசைக்கு ஆட வேண்டும் .
இரட்டை இலை

முதல் தர்மயுத்தம் :

ஜெயலலிதா மறைந்த உடன் அன்றிரவே OPS பன்னிர்செல்வம் அமைச்சரவை பொறுப்பேற்றுக்கொண்டது . அதன்பிறகு அவரின் செயல்பாடு திருப்தி அளிக்காத காரணத்தினால் (எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை பார்த்து புன்னகைத்ததும் அடங்கும் ) சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி (OPS உட்பட ) சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுத்தனர் .
ஆனால் அவர் மீது இருந்த சொத்து குவிப்பு வழக்கிற்கு தீர்ப்பு வரவிருந்த படியால் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அமைச்சரவையை அமைக்க அழைப்பு விடுக்கவில்லை .
இடைப்பட்ட நேரத்தில் OPS ஜெயலலிதா சமாதி முன்பாக முதல் தர்மயுத்தத்தை (அவரே வைத்துக்கொண்ட பெயர் ) தொடங்கினார் . பிறகு அவருடன் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றனர் .

கூவத்தூரும் எடப்பாடியும் :

சசிகலா சிறை செல்வது உறுதியானதும் OPS தனியாக பிரிந்து சென்றதும் முதல்வர் நாற்காலியை எடப்பாடி பழனிசாமிக்கு பெற்றுத்தந்தது . சசிகலா இதில் முக்கிய பங்காற்றினார் .
பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவியேற்றது . சசிகலா சிறை சென்றார் . OPS தனி அணியாக செயல்பட்டது .

குற்றங்கள் ஆள ஆரம்பித்தன :

முந்தைய காலங்களில் செய்த குற்றங்கள் யார் தன்னை முதல்வராக தெர்ந்தெடுக்க உதவினாரோ (சசிகலா மற்றும் தினகரன் ) அவர்களையே எதிர்க்க வைத்துவிட்டது . பாஜக மிக சாதுர்யமாக செயல்பட்டு OPS EPS என ஒவ்வொரு முக்கியஸ்தர்களின் ஊழல் கணக்குகளையும் தோண்ட ஆரம்பித்தது . அதிலிருந்து அதிமுகவினர் பாஜக அடிமைகளாகி போனார்கள் .
மேலிடத்தின் உத்தரவுப்படி OPS அணியுடன் EPS அணி இணைந்தது , தினகரனையும் சசிகலாவையும் விட்டுவிட்டு …..சசிகலா தினகரனுக்கு ஆதரவாக இருபதுக்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க தனி அணியாக அது மாறிப்போனது .

இரட்டை இலை சின்னம் :

இரட்டை இலை
OPS அணியும் சசிகலா EPS உள்ளிட்டவர்களின் அணியும் தான் முதலில் இரட்டை இலை சின்னத்திற்கு போட்டி போட்டு தேர்தல் ஆணையத்திற்கு சென்றனர் .
பிறகு OPS EPS இணைந்த உடன் இவர்கள் அணிக்கும் தினகரன் சசிகலா அணிக்கும் இரட்டை இலை யாருக்கு என போட்டி வந்தது .
தற்போது அதிக சட்டமன்ற உறுப்பினர்களையும் நிர்வாகிகளையும் கொண்டிருப்பதால் OPS EPS அணிக்கு இரட்டை இலையை ஒதுக்கி தந்துள்ளது தேர்தல் ஆணையம் .

அடுத்த தர்மயுத்தம் :

எல்லாம் முடிந்தது என அனைவரும் இருந்த சூழ்நிலையில் EPS அணியினர் OPS அணிக்கு முக்கியத்துவம் தரவில்லை என்பதை காரணமாக கொண்டு பிரச்சனையை கிளப்பி விட்டுள்ளனர் …மைத்ரேயன் உள்ளிட்ட OPS அணியினர் .
அணிகள் இணைந்துவிட்டன …மனங்கள் ? என்கிற ஒற்றை கேள்வியே இவர்களின் முட்டல் மோதல்களை வெளிக்கொண்டு வந்துவிட்டது . அதனை தொடர்ந்து பல கருத்துக்கள் இரு பக்கத்தில் இருந்தும் வந்துகொண்டே இருக்கின்றன .

நம்பிக்கையில்லாமல் போனால் :

நடக்கிற அனைத்தையும் செய்வது பாஜக என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள் . ஆனால் இவர்களின் கரங்களும் உள்ளங்களும் கரை படாமல் இருந்தால் எதற்க்காக பாஜகவின் இசைக்கு ஆட வேண்டும்

சசிகலாவோ ஜெயலலிதா அவர் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு உகந்தபடி செயல்படாமல் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு துரோகம் செய்தார் .
ஜெயலலிதா இறந்த உடனேயே சசிகலா முதல்வராக பதவியேற்க வாய்ப்பிருந்தும் OPS அவர்களை முதல்வராக பதவியேற்க வைத்தார் . அவரும் சசிகலா முதல்வராக முயன்றபோது நம்பிக்கையற்றவராக போனார் .
எடப்பாடி தன்னை தேர்ந்தெடுத்த சசிகலா தினகரனுக்கு நம்பிக்கையாக  கடைசிவரை இருக்கவில்லை .
இப்போது இதே நம்பிக்கையின்மையே OPS EPS இருவருக்குள்ளும் இருந்துவருகின்றது . ஒருவர் மீது மற்றொருவருக்கு நம்பிக்கையில்லை . எங்கே இவர் நம்மை வீழ்த்தி விடுவாரோ என OPS EPS இருவரும் மாறி மாறி நினைத்துக்கொண்டிருப்பதன் விளைவே இந்த முட்டல் மோதல்களுக்கு காரணம் .
நம்பிக்கையின்மை  , துரோகம் இரண்டுமே அரசியலுக்கு லாயக்கற்றவை என்பதை இவர்களின் நிலை சொல்லும் .
 அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் தனி மனிதர்களும் தங்களை தூய்மையானவர்களாக வைத்துக்கொள்ளவில்லை எனில் உங்களை உங்கள் கொள்கைகளை உங்களின் பாதையை அதிகார வர்க்கத்தினரே தீர்மானிக்க நேரிடும் .
அதற்கு சிறந்த உதாரணம் தமிழக அரசியல்வாதிகளின் இந்நிலைமை .
பாமரன் கருத்து
Exit mobile version