இடிந்த சுவர்களுக்கு இடையில் இருந்து ரத்த வெள்ளத்துடன் ஒரு பிஞ்சு குழந்தையை மீட்டு எடுக்கிறார்கள் . வாழவேண்டிய அந்த சிறுவனின் உயிர் சற்று நேரத்தில் பிரிய காத்திருக்கிறது . அந்த நேரத்தில் அவன் உதிர்த்த வார்த்தைகள் “நான் கடவுளிடம் அனைத்தையும் சொல்லிவிடுவேன்” .
கடவுளின் காதுகளின் அந்த சிறுவனின் அழுகுரல் கேட்டதா என தெரியவில்லை . ஆனால் உலக நாடுகளில் வாழும் அனைவரது காதுகளிலும் நன்றாகவே விழுந்தன . ஆனால் அதற்கு பதில் சொல்ல மனிதரென்று சொல்லிக்கொள்ளும் எவரும் முன்வரவில்லை .
கச்சா எண்ணெய் வளத்தை கொள்ளை அடிக்க அமெரிக்காவும் ரஸ்யாவும் நடத்துகின்ற அதிகார மோதல் என்கிறார்கள் , சர்வாதிகாரிக்கும் போராட்ட குழுக்களுக்கும் நடைபெறுகின்ற மோதல் என காரணம் எத்தனையையோ அடுக்கிக்கொண்டு செல்கிறார்கள் .
அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் போராட்ட குழுக்களுக்கு ஆயுதம் வழங்குகின்றது , ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் சர்வாதிகாரிக்கு ஆயுதம் வழங்குகிறது . ஆனால் இரண்டு பக்க ஆயுதங்களும் அப்பாவி மக்களின் சமையல் கட்டுகளிலும் படுக்கை விரிப்புகளிலும் மனிதர்களின் நெஞ்சுகளிலும் தான் விழுகின்றன .
ஆனால் பாதிக்கப்பட்ட , சிரியாவிலிருந்து வெளியேற விரும்பும் மக்களை அமெரிக்க , ரஷ்யா , முஸ்லிம் நாடுகள் கூட தங்கள் நாட்டுக்குள் வந்து வாழ அனுமதிப்பது இல்லை .
திராணி இருந்தால் அமெரிக்காவும் ரஷ்யாவும் நேருக்கு நேர் அல்லவா மோதிக்கொள்ள வேண்டும் . மாட்டார்கள் காரணம் அவர்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் போர்க்களமாக ஆக்கிட விரும்ப மாட்டார்கள் . காரணம் வெற்றி பெற்றாலும் கூட பாதிப்புகளில் இருந்து வெளிவர பல யுகங்கள் ஆகும் . அதற்காகத்தான் கிடைக்கும் நாடுகளை பகடைக்காய்களாக்கி வருகிறார்கள் .
ஐநாவில் நிரந்தர உறுப்பினர் பதவி கேட்டு உலக நாடுகளின் ஆதரவை பெற கெஞ்சிக்கொண்டிருக்கிறது இந்தியா ? உலகின் மிக சக்திவாய்ந்த அமைப்பாக காட்டிக்கொள்ளும் ஐநா , சிரியாவில் அப்பாவி மக்களும் குழந்தைகளும் மடிவதை கண்டபின்னரும் கூட்டங்களை மட்டும் நடத்திக்கொண்டிருக்கிறது . காரணம் ஐநாவிற்க்கு அதிக நிதி தரும் நாடான அமெரிக்கா,ரஷ்யா நாடுகளே இதில் ஈடுபட்டு இருப்பதால் தான் .
இந்தியர்களே நினைவில் கொள்ளுங்கள் , ஒருவேளை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமோ அல்லது சீனாவிற்குமோ சண்டை வந்தால் அப்போதும் அமெரிக்காவும் ரஷ்யாவும் எதிரெதிர் அணியில் இருப்பார்கள் . குண்டுமழை பொழிவார்கள் , அவர்களது ஆயுதங்களின் வலிமையே நம் மண்ணில் காட்டுவார்கள் . அவர்களுக்கு ஒன்றுமே ஆகாது ,பாதிக்கப்படுவது நாமாக இருப்போம் .
இவ்வளதுதான் ஆதிக்க ஏகாதிபத்திய நாடுகளின் கொள்கைகள் .
குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல் இயங்குகின்றன உலக நாடுகள் . சக மனிதன் பாதிக்கபட்டு உதவிக்காக ஏங்கும் போது கண்களை மூடி தூங்கிக்கொண்டிருப்பதை போல நடிப்பது என்பது கேவலமான செயல் . அதனை தான் இந்தியா உள்ளிட்ட நாடுகள் செய்துவருகின்றன .
நாளை நமக்கு இதுபோன்று நடந்தால் யார் வருவாரோ ?
நன்றி
பாமரன் கருத்து