Site icon பாமரன் கருத்து

எங்கே தோற்கிறார்கள் பாமகவும் அன்புமணி ராமதாசும்

அன்புமணி ராமதாஸ் :

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் மகன் அன்புமணி ராமதாஸ். பாமகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இவர் சிறந்த அரசியல்வாதி,மருத்துவர்,முன்னாள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் என பன்முகம் கொண்டவர்.

மத்திய அமைச்சராக இவர் இருந்த காலத்தில் தான் புகையிலைக்கு எதிராக பல சட்ட திட்டங்களும் அறிவிப்புகளும் கொண்டு வரப்பட்டன. 108 ஆம்புலன்ஸ் சேவை இவரது பதவிக்காலத்தில் தான் கொண்டுவரப்பட்டது. இவரது திறமையை பாராட்டி ஐநா சபை உறுப்பினர் இவரது அறைக்கே வந்து பாராட்டிய பெருமைக்கு உரியவர்.

அன்புமணி ராமதாஸ்

பாமக :

தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாகவே பாமகவின் நிழல் பட்ஜெட் வெளியிடப்படும் . பல ஆண்டுகளாக நிழல் பட்ஜெட் போடக்கூடிய ஒரே மாநில கட்சி பாமக.

தற்போது விவசாயத்திற்கென தனி பட்ஜெட் போடப்படுவதும் சிறப்பு

தற்போது இருக்ககூடிய கட்சிகளின் அடிப்டையில் பார்த்தால் ராமதாஸ் அல்லது அன்புமணி ராமதாஸ் வெளியிடும் புள்ளிவிபர அறிக்கைகளும் அரசின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களும் , பிரச்சனைகளுக்கு அவர்கள் சொல்லும் தீர்வுகளும் அறிவியல் பூர்வமாக இருக்கும்.

எங்கே தோற்கிறது பாமக கட்சி :

இத்தனை சிறப்பு, கடின உழைப்பு,நன்மை செய்யக்கூடிய எண்ணம், படித்த தலைமைகள், அறிவியல் பூர்வமான புள்ளிவிவரங்கள் மற்றும் தீர்வுகள் என ஆட்சிக்கு வர கூடிய அனைத்து தகுதிகள் இருந்தும் பாமக ஆட்சிக்கு வரமுடியாமல் போனதற்கும் மக்களின் இதயங்களை வென்றெடுக்காமல் போனதற்கும் என்ன காரணம்?

சாதிய தொடக்கமே தடை :

சாதாரண மக்களிடம் கேட்டால் பாமக ஒரு வன்னியர் கட்சி என்றே சொல்லுவார்கள். அது அவ்வாறாகவே மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டு இருக்கின்றது. அன்று அதுவே உண்மையாகவும் இருந்தது.

உதாரணமாக புதியதலைமுறை தொலைக்காட்சி கடந்த ஆண்டு ஏற்பாடு செய்திருந்த நேர்காணலில் ஒருவர் பாமக முதல்வர் வேட்பாளரிடம் “பாமக கட்சி கொடி ஏற்றப்படும் போது வன்னியர் கொடியும் ஏற்றப்படுகிறதே ?” என்ற கேள்வியை வைக்கும் போது அன்புமணி கூறிய பதில் ” கொடி ஏற்றினால் அப்படி ஆகிவிடுமா என்ன ? எல்லாரும் தான் கொடி ஏற்றுகிறார்கள் ” என மழுப்பினார்.

ஆக அவரால் இன்றுகூட உறுதியாக பாமக சாதிய கட்சி இல்லை எனவோ இனி சாதியம் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளில் பாமக தலையிடாது எனவோ உறுதியாக கூற முடியவில்லை. இதற்க்கு அவரது தந்தை தடையாக இருப்பாரோ என தெரியவில்லை.

அடுத்ததாக ஆணவ கொலைகள் நடைபெறும் போது ஒருபக்கம் தலித் கட்சிகளும் மறுபக்கம் பாமகவும் நின்று வாதாடி கொண்டிருப்பதும் பாமகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.

வெற்றிக்கும் தோல்விக்கும் அதுவே காரணம் :

கடந்த மக்களவை தேர்தலில் பல இடங்களில் வென்ற அதிமுகவால் தருமபுரி தொகுதியில் வெல்ல முடியவில்லை. அதிமுகவை தருமபுரியில் வீழ்த்திய பாமகவால் பிற இடங்களில் வெல்ல முடியவில்லை. இரண்டிற்கும் காரணம் பாமக நம்பியிருக்கும் சாதிய ஓட்டுக்களே .

திறமை, தகுதி, நல்லெண்ணம் கொண்டிருந்தும் அன்புமணி அவர்களின் முதல்வர் கனவை தடுப்பது சாதிய கட்சி என்கிற ஒரே பார்வையே.

மக்களின் எண்ணத்தை மாற்றும் படி நடந்துகொண்டு எதிர்காலத்தில் அனைவருக்குமான சமத்துவத்தை விரும்புகின்ற தலைவராக அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக கட்சி வளர வாழ்த்துக்கள்.

நன்றி
பாமரன் கருத்து

Exit mobile version